மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல(ம்) நின்ற நிலை ஊர் பேர்
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி
விழி இன்ப மடவார் தம் கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான்
நினையும் நினது அன்பர் பழ வினை களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே
புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா
பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே.
வீடு, பொன், மக்கள், தம்முடைய அழகிய மனைவி முதலியோர், (தமது) வலிமை, குலம், சமூகத்தில் இருக்கும் நிலை, தம்முடைய ஊர், பேர், வளர்ச்சி உறும் இளமை, (தமக்குள்ள) பற்றுக்கோடு, துணிவு, அணியும் ஆபரணம் ஆகிய செல்வங்கள், மேம்பாடு, சுற்றத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற மாயமான கனவில் வருவதைப் போல நிலை இல்லாத சிற்றின்பத்தை எனது என்று நினைத்து, கண்ணால் இன்பம் ஊட்டும் மாதர்களுடைய கலவி மயக்கத்தைப் பூண்டு பல உடல்களைப் புணர்ந்து, பல பிறவிகள் எடுப்பது தக்கது ஆகுமோ? நினைக்கின்ற உன் அன்பர்களுடைய பழ வினைகளை நீக்கி, நீண்ட (கிரவுஞ்ச) மலையைப் பிளந்த, ஒளி வீசும் வேலனே, பூமியில் சிறப்புடன் முதல் இடமாக விளங்குகின்ற அழகைப் பெற்ற திருச்செந்தூர் தலம் நிலை பெறுமாறு வீற்றிருந்த முருகனே, அலங்காரத்துக்குத் தக்க மலர்களை அணிந்த (வள்ளிமலையின் தினைப்) புனத்தில் இருந்த வேடப் பெண்ணாகிய வள்ளியின் புளகிதம் கொண்ட இரு மார்பகங்களையும் அணைந்த மார்பனே, சண்டை செய்து உடனே எதிர்த்து வந்த அசுரர்களுடைய மணி மகுடங்கள் பொடியாகும்படி (போருக்கு) வீர நடை நடந்த பெருமாளே.
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல(ம்) நின்ற நிலை ஊர் பேர் ... வீடு, பொன், மக்கள், தம்முடைய அழகிய மனைவி முதலியோர், (தமது) வலிமை, குலம், சமூகத்தில் இருக்கும் நிலை, தம்முடைய ஊர், பேர், வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி ... வளர்ச்சி உறும் இளமை, (தமக்குள்ள) பற்றுக்கோடு, துணிவு, அணியும் ஆபரணம் ஆகிய செல்வங்கள், மேம்பாடு, சுற்றத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற மாயமான கனவில் வருவதைப் போல நிலை இல்லாத சிற்றின்பத்தை எனது என்று நினைத்து, விழி இன்ப மடவார் தம் கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் ... கண்ணால் இன்பம் ஊட்டும் மாதர்களுடைய கலவி மயக்கத்தைப் பூண்டு பல உடல்களைப் புணர்ந்து, பல பிறவிகள் எடுப்பது தக்கது ஆகுமோ? நினையும் நினது அன்பர் பழ வினை களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா ... நினைக்கின்ற உன் அன்பர்களுடைய பழ வினைகளை நீக்கி, நீண்ட (கிரவுஞ்ச) மலையைப் பிளந்த, ஒளி வீசும் வேலனே, நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே ... பூமியில் சிறப்புடன் முதல் இடமாக விளங்குகின்ற அழகைப் பெற்ற திருச்செந்தூர் தலம் நிலை பெறுமாறு வீற்றிருந்த முருகனே, புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா ... அலங்காரத்துக்குத் தக்க மலர்களை அணிந்த (வள்ளிமலையின் தினைப்) புனத்தில் இருந்த வேடப் பெண்ணாகிய வள்ளியின் புளகிதம் கொண்ட இரு மார்பகங்களையும் அணைந்த மார்பனே, பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே. ... சண்டை செய்து உடனே எதிர்த்து வந்த அசுரர்களுடைய மணி மகுடங்கள் பொடியாகும்படி (போருக்கு) வீர நடை நடந்த பெருமாளே.