மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர்
வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும் மார்பு மீதினு(ம்) முத்து வடம் புரள்
காம பூரண பொன் கடகம் பொர வாரி நீல வளைக் கை புலம்பிட
அநுராகம் ஆன நேரில் விதத் திரயங்களும் நாண(ம்) மாற மயக்கி இயம்பவும்
ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் உறவாடி ஆரவார நயத்த குணங்களில் வேளி(ன்) நூல்களை கற்ற விளம்பவும்
ஆகு(ம்) மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ
சானகீ துயரத்தில் அரும் சிறை போன போது தொகுத்த சினங்களில் தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக
தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே
கான வேடர் சிறு குடில் அம் புன(ம்) மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு காவல் கூரும் குறத்தி புணர்ந்திடும் மணி மார்பா
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர்த் தடமும் செறி காவளூர் தனில் முத்தமிழும் தெரி பெருமாளே.
மானுக்கு ஒப்பான கண்ணோடு கூடிய மங்கையர், பாலுக்கு ஒத்த இனிய மொழியோடு கூடிய பேச்சை உடையவர், நறு மணம் வீசும் பூக்களை அணிந்துள்ள தெய்வ மகளிரை ஒத்த விலைமாதர்களின் இரண்டு தோள்கள் மீதும் மார்பின் மேலும் முத்து மாலை புரள, காம இச்சைக்கு முழு இடம் தரும் தங்கக் கடகம் என்னும் காப்பு பொருந்த, கடல்நீல நிறமுள்ள கை வளையல் ஒலி செய்ய, காமப் பற்று முற்றும் சமயத்தில், பல விதமான மருந்து வகைகளைக் கொண்டு நாணம் ஒழியும்படி (வந்தவர்களை) மயக்கி பேச்சுக்களைப் பேசவும், அணிந்துள்ள ஆடை தளர நெகிழ்த்தி, இரக்கம் காட்டுதல் போல உறவாடியும், ஆடம்பரமான நயத்தோடு கூடிய குணத்துடன் மன்மதனின் காம நூல்களில் கற்றுள்ள நுணுக்கங்களை எடுத்துச் சொல்லவும், ஏற்படுகின்ற காம மோகத்தால் வரும் ஆபத்தும் நீங்கி உன் திருவடிகளைச் சேர்வேனோ? ஜானகி துயரத்துடன் அரிய சிறைக்குச் சென்றபோது (ராமனுக்கு) உண்டான கோபத்துடன் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்குதல் பொருட்டு இலங்கை அழிந்து போகவும், தாரை என்னும் மாதினை ஒப்பற்ற நண்பன் சுக்கிரீவன் பெறவும், வாலியின் வெற்றித் தொடர் அழிந்து அவன் பூமியில் விழவும் சாதித்த அம்பைச் செலுத்திய (ராமன்) திருமாலின் மருகனே, காட்டு வேடர்களின் சிறிய குடிசையிலும், அழகிய தினைப் புனத்திலும் (அதன் இடையே இருப்புக்காக அமைந்த) பரணிலும் வீற்றிருந்து காவலை மிக நன்றாகச் செய்த குறத்தியாகிய வள்ளியைத் தழுவிடும் அழகிய மார்பனே, சோலையிலுள்ள அழகிய கமுக மரங்களின் கூட்டங்கள் பாளைகளை வீசுவதும், (தாமரை, அல்லி போன்ற) நீர்மலர்கள் உள்ளவையுமான, குளங்கள் நிறைந்துள்ள காவளூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து முத்தமிழும் தெரிந்த பெருமாளே.
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் ... மானுக்கு ஒப்பான கண்ணோடு கூடிய மங்கையர், பாலுக்கு ஒத்த இனிய மொழியோடு கூடிய பேச்சை உடையவர், வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும் மார்பு மீதினு(ம்) முத்து வடம் புரள் ... நறு மணம் வீசும் பூக்களை அணிந்துள்ள தெய்வ மகளிரை ஒத்த விலைமாதர்களின் இரண்டு தோள்கள் மீதும் மார்பின் மேலும் முத்து மாலை புரள, காம பூரண பொன் கடகம் பொர வாரி நீல வளைக் கை புலம்பிட ... காம இச்சைக்கு முழு இடம் தரும் தங்கக் கடகம் என்னும் காப்பு பொருந்த, கடல்நீல நிறமுள்ள கை வளையல் ஒலி செய்ய, அநுராகம் ஆன நேரில் விதத் திரயங்களும் நாண(ம்) மாற மயக்கி இயம்பவும் ... காமப் பற்று முற்றும் சமயத்தில், பல விதமான மருந்து வகைகளைக் கொண்டு நாணம் ஒழியும்படி (வந்தவர்களை) மயக்கி பேச்சுக்களைப் பேசவும், ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் உறவாடி ஆரவார நயத்த குணங்களில் வேளி(ன்) நூல்களை கற்ற விளம்பவும் ... அணிந்துள்ள ஆடை தளர நெகிழ்த்தி, இரக்கம் காட்டுதல் போல உறவாடியும், ஆடம்பரமான நயத்தோடு கூடிய குணத்துடன் மன்மதனின் காம நூல்களில் கற்றுள்ள நுணுக்கங்களை எடுத்துச் சொல்லவும், ஆகு(ம்) மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ ... ஏற்படுகின்ற காம மோகத்தால் வரும் ஆபத்தும் நீங்கி உன் திருவடிகளைச் சேர்வேனோ? சானகீ துயரத்தில் அரும் சிறை போன போது தொகுத்த சினங்களில் தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக ... ஜானகி துயரத்துடன் அரிய சிறைக்குச் சென்றபோது (ராமனுக்கு) உண்டான கோபத்துடன் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்குதல் பொருட்டு இலங்கை அழிந்து போகவும், தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே ... தாரை என்னும் மாதினை ஒப்பற்ற நண்பன் சுக்கிரீவன் பெறவும், வாலியின் வெற்றித் தொடர் அழிந்து அவன் பூமியில் விழவும் சாதித்த அம்பைச் செலுத்திய (ராமன்) திருமாலின் மருகனே, கான வேடர் சிறு குடில் அம் புன(ம்) மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு காவல் கூரும் குறத்தி புணர்ந்திடும் மணி மார்பா ... காட்டு வேடர்களின் சிறிய குடிசையிலும், அழகிய தினைப் புனத்திலும் (அதன் இடையே இருப்புக்காக அமைந்த) பரணிலும் வீற்றிருந்து காவலை மிக நன்றாகச் செய்த குறத்தியாகிய வள்ளியைத் தழுவிடும் அழகிய மார்பனே, கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர்த் தடமும் செறி காவளூர் தனில் முத்தமிழும் தெரி பெருமாளே. ... சோலையிலுள்ள அழகிய கமுக மரங்களின் கூட்டங்கள் பாளைகளை வீசுவதும், (தாமரை, அல்லி போன்ற) நீர்மலர்கள் உள்ளவையுமான, குளங்கள் நிறைந்துள்ள காவளூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து முத்தமிழும் தெரிந்த பெருமாளே.