சதங்கை மணி வீரச் சிலம்பின் இசை பாட
சரங்கள் ஒளி வீசப் புயம் மீதே தனங்கள் குவடு ஆட
படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று
இரம்பை அழகு ஆர் மைக் குழலாரோடு
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை
நீ சற்று இரங்கி இரு தாளைத் தருவாயே
சிதம்பர குமார கடம்பு தொடை ஆடச் சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே
சிவந்த கழுகு ஆடப் பிணங்கள் மலை சாயச் சினந்து அசுரர் வேரைக் களைவோனே
பெதும்பை எழு கோலச் செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா
பெரும் புனமது ஏகிக் குறப் பெணொடு கூடி பெரும் புலியுர் வாழ் பொன் பெருமாளே.
கிண்கிணி, ரத்தினம் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட, மணி வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாட, தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில் குண்டலங்கள் ஆட, இனிமை வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி, ரம்பை போன்ற அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் நெருங்கிப் பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என் மீது, நீ கொஞ்சம் இரக்கம் கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக. சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல் வீற்றிருப்பவனே, சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து, அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே, பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே. பெரிய வள்ளி மலைத் தினைப் புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும் புலியூரில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
சதங்கை மணி வீரச் சிலம்பின் இசை பாட ... கிண்கிணி, ரத்தினம் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட, சரங்கள் ஒளி வீசப் புயம் மீதே தனங்கள் குவடு ஆட ... மணி வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாட, படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட ... தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில் குண்டலங்கள் ஆட, இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று ... இனிமை வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி, இரம்பை அழகு ஆர் மைக் குழலாரோடு ... ரம்பை போன்ற அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை ... நெருங்கிப் பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என் மீது, நீ சற்று இரங்கி இரு தாளைத் தருவாயே ... நீ கொஞ்சம் இரக்கம் கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக. சிதம்பர குமார கடம்பு தொடை ஆடச் சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே ... சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல் வீற்றிருப்பவனே, சிவந்த கழுகு ஆடப் பிணங்கள் மலை சாயச் சினந்து அசுரர் வேரைக் களைவோனே ... சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து, அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே, பெதும்பை எழு கோலச் செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா ... பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே. பெரும் புனமது ஏகிக் குறப் பெணொடு கூடி பெரும் புலியுர் வாழ் பொன் பெருமாளே. ... பெரிய வள்ளி மலைத் தினைப் புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும் புலியூரில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.