மாமிசமும், உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல் கேடுற்று அழியும்படி உயிர் போய்விட்டால், ஊரார்கள் கூட்டமாக வந்து ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கி ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது, பின் ஓய்ந்து, பலவிதமான பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்தி, அப்பிணம் துர்நாற்றம் வீசுமுன்பு அதை எடுத்துக்கொண்டுபோய் சுடுகாட்டில் நெருப்பின் மத்தியிலே கூசாமல் வைத்து விட்டுவிட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி எனக்கு உன் திருவருளைத் தந்தருள்வாயாக. பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் திருமாலும், தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமனும், அஷ்டதிக் பாலகர்களும், தேவர்களும், சிறந்த அஷ்டகிரிகளில் உள்ளவர்களும், நீங்காத அரக்கர்களுடன், வானிலுள்ள கணங்கள் யாவும் பிழைக்கும்படியாக, பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான் முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருளியவனும், திருவாடானை என்ற தலத்தில் நாள்தோறும் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
ஊனாரு முட்பிணியு மானா கவித்தவுடல் ... மாமிசமும், உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல் ஊதாரி பட்டொழிய வுயிர்போனால் ... கேடுற்று அழியும்படி உயிர் போய்விட்டால், ஊரார் குவித்துவர ... ஊரார்கள் கூட்டமாக வந்து ஆவா வெனக்குறுகி ... ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கி ஓயா முழக்கமெழ அழுதோய ... ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது, பின் ஓய்ந்து, நானா விதச்சிவிகை மேலே கிடத்தி ... பலவிதமான பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்தி, அது நாறாது எடுத்து அடவி யெரியூடே ... அப்பிணம் துர்நாற்றம் வீசுமுன்பு அதை எடுத்துக்கொண்டுபோய் சுடுகாட்டில் நெருப்பின் மத்தியிலே நாணாமல் வைத்துவிட நீறாமென ... கூசாமல் வைத்து விட்டுவிட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள இப்பிறவி நாடா தெனக்கு ... இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி எனக்கு உனருள் புரிவாயே ... உன் திருவருளைத் தந்தருள்வாயாக. மா நாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனும் ... பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் திருமாலும், மட்டொழுகு மலர்மீதே வாழ்வாயிருக்குமொரு வேதாவும் ... தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமனும், எட்டிசையும் வானோரும் அட்டகுல கிரியாவும் ... அஷ்டதிக் பாலகர்களும், தேவர்களும், சிறந்த அஷ்டகிரிகளில் உள்ளவர்களும், ஆனா வரக்கருடன் வானார் பிழைக்க ... நீங்காத அரக்கர்களுடன், வானிலுள்ள கணங்கள் யாவும் பிழைக்கும்படியாக, வரும் ஆலால முற்ற அமுதயில்வோன் ... பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான் முன் ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தையருள் ... முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருளியவனும், ஆடானை நித்தம் உறை பெருமாளே. ... திருவாடானை என்ற தலத்தில் நாள்தோறும் வீற்றிருப்பவனுமான பெருமாளே.