உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து
உளம் உருகு தீர்த்து இவ்வுடலூடே உடலை முடிவாக்கு(ம்) நெடியது ஒரு காட்டில்
உயர் கனலை மூட்டி விட ஆவி மறலி மறம் ஆர்த்த கயிறு தனை வீக்கி
வலிவினொடு தாக்கி வளையா முன்
மனமும் உ(ன்)னி வேட்கை மிகவும் உன(து) தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய்
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று(ம்) மணவாளா
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய்
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே.
உறவு முறை கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி விளைவித்து, அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால் உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில் மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், எனது மனமும் உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக. பிறை போன்ற நெற்றியை உடைய, சேல் மீன் போன்ற கண்களை உடைய பெண்ணாகிய வள்ளியை, விருப்பத்துடன் வளர்ந்த வள்ளி மலையில் வேடர்களுக்குக் குழந்தையாக வந்து, மானிடம் இல்லாத மான் வயிற்றில் தோன்றி வளர்ந்து, நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண் யானை ஆகிய வள்ளியின் பாதங்களைப் போற்றும் கணவனே, அறுகம் புல், நிலவு, ஆத்தி, அலை வீசும் நீர் கொண்ட கங்கை (இவைகளைச்) சூடிய, நெருங்கிய சடையை உடைய சிவபெருமானுக்கு உபதேசப் பொருளை ஓதியவனே, நெருங்கி வரும் போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்தொழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே.
உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து ... உறவு முறை கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி விளைவித்து, உளம் உருகு தீர்த்து இவ்வுடலூடே உடலை முடிவாக்கு(ம்) நெடியது ஒரு காட்டில் ... அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால் உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி மறலி மறம் ஆர்த்த கயிறு தனை வீக்கி ... மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிவினொடு தாக்கி வளையா முன் ... வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், மனமும் உ(ன்)னி வேட்கை மிகவும் உன(து) தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் ... எனது மனமும் உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக. பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக ... பிறை போன்ற நெற்றியை உடைய, சேல் மீன் போன்ற கண்களை உடைய பெண்ணாகிய வள்ளியை, விருப்பத்துடன் வளர்ந்த வள்ளி மலையில் வேடர்களுக்குக் குழந்தையாக வந்து, பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று(ம்) மணவாளா ... மானிடம் இல்லாத மான் வயிற்றில் தோன்றி வளர்ந்து, நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண் யானை ஆகிய வள்ளியின் பாதங்களைப் போற்றும் கணவனே, அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் ... அறுகம் புல், நிலவு, ஆத்தி, அலை வீசும் நீர் கொண்ட கங்கை (இவைகளைச்) சூடிய, நெருங்கிய சடையை உடைய சிவபெருமானுக்கு உபதேசப் பொருளை ஓதியவனே, அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே. ... நெருங்கி வரும் போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்தொழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே.