ஞானா விபூஷணி கார் அணி காரணி
காமா விமோகினி வாகினி யாமளை
மா மாயி பார்வதி தேவி குணாதரி
உமையாள் தன் நாதா க்ருபாகர தேசிகர் தேசிக
வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் ஈசா
சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே
தேன் ஆர் மொழீ வ(ள்)ளி நாயகி நாயக
வான் நாடு உளோர் தொழு மா மயில் வாகன
சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா
சீர்பாத சேகரன் ஆகவு நாயினன் மோகா விகார விடாய்கெட ஓடவெ
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட
கூன் ஆன மீனன் இடேறிட கூடலில் வருவோனே
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன்
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே
வாழ் நாள் படா வரு சூரர்கள் மாளவெ
சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட
கோன் ஆக வரு நாத குரூ பர குமரேசா
வாசா மகோசரமாகிய வாசக
தேச ஆதியோர் அவர் பாதம் அதே தொழ
பாசா விநாசகனாகவும் மேவிய பெருமாளே.
ஞானத்தை விசேஷமான அணிகலனாகக் கொண்டவள், கரிய நிறம் கொண்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவள், காமத்தை உயிர்களுக்கு ஊட்டும் சிறந்த மோகினி, பாதிரி மர நிழலில் சிவபெருமானைப் பூஜித்த உமை, மரகதப் பச்சை நிறத்தி, மாயையில் வல்லவள், பார்வதி தேவி, நற் குணங்களை உடையவள், (ஆகிய) உமா தேவியின் தலைவரும், அருளுக்கு இருப்பிடமானவரும் ஆன சிவபெருமானுக்கும் குருவே, (சிவனுக்கு) வேதாமங்களை அருளிய தேவதேவனே, நல்ல ஈசனே, சடையை உடைய பரமேசுரர், எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடைய குழந்தையே, தேன் போலும் இனிய மொழிகளைப் பேசும் வள்ளி நாயகிக்குக் கணவனே, விண்ணுலகத்தில் உள்ளோர்கள் வணங்கும் சிறந்த மயில் வீரனே, விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவயானையின் இனிமையான கணவனே, உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும் இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க, நன்றாக கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக. (உன்னைப்) போற்றாதவர்களும், திரு நீற்றை அணியாதவர்களுமாகிய சமணர்களை அச்சத்துடன் சுழற்சி கொள்ளுமாறு (வாது செய்து) அலைத்து, கழுவில் ஏறும்படிச் செய்து, கூனனாயிருந்த, மீன் கொடியை உடைய, பாண்டியன் (கூன் நீங்கி) ஈடேறுமாறு மதுரைக்கு (ஞானசம்பந்தராகச்) சென்றவனே, மிக்க வீரம் கொண்டவனும், அரக்கர்கள் அரசனுமான இராவணன் இரண்டு பிளவாக அம்பைச் செலுத்திய ரகுராமன், தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாராயண மூர்த்தி, மாயவன் ஆகிய இராகவனுடைய மருகனே, வாழ் நாள் அழியும்படி வந்த சூரர்கள் இறக்க, விண்ணுலகத்தில் வாழும் தேவர்கள் வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ, சேனைக்குத் தலைவனாக வந்த நாதனே, குருபரனே, குமரேசனே, வாக்குக்கு எட்டாத திருவாக்கை உடையவனே, நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்கள் உனது திருவடிகளைத் தொழுது நிற்க, பாசங்களை நீக்குபவனாக விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.
ஞானா விபூஷணி கார் அணி காரணி ... ஞானத்தை விசேஷமான அணிகலனாகக் கொண்டவள், கரிய நிறம் கொண்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவள், காமா விமோகினி வாகினி யாமளை ... காமத்தை உயிர்களுக்கு ஊட்டும் சிறந்த மோகினி, பாதிரி மர நிழலில் சிவபெருமானைப் பூஜித்த உமை, மரகதப் பச்சை நிறத்தி, மா மாயி பார்வதி தேவி குணாதரி ... மாயையில் வல்லவள், பார்வதி தேவி, நற் குணங்களை உடையவள், உமையாள் தன் நாதா க்ருபாகர தேசிகர் தேசிக ... (ஆகிய) உமா தேவியின் தலைவரும், அருளுக்கு இருப்பிடமானவரும் ஆன சிவபெருமானுக்கும் குருவே, வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் ஈசா ... (சிவனுக்கு) வேதாமங்களை அருளிய தேவதேவனே, நல்ல ஈசனே, சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே ... சடையை உடைய பரமேசுரர், எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடைய குழந்தையே, தேன் ஆர் மொழீ வ(ள்)ளி நாயகி நாயக ... தேன் போலும் இனிய மொழிகளைப் பேசும் வள்ளி நாயகிக்குக் கணவனே, வான் நாடு உளோர் தொழு மா மயில் வாகன ... விண்ணுலகத்தில் உள்ளோர்கள் வணங்கும் சிறந்த மயில் வீரனே, சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா ... விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவயானையின் இனிமையான கணவனே, சீர்பாத சேகரன் ஆகவு நாயினன் மோகா விகார விடாய்கெட ஓடவெ ... உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும் இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க, சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே ... நன்றாக கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக. பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட ... (உன்னைப்) போற்றாதவர்களும், திரு நீற்றை அணியாதவர்களுமாகிய சமணர்களை அச்சத்துடன் சுழற்சி கொள்ளுமாறு (வாது செய்து) அலைத்து, கழுவில் ஏறும்படிச் செய்து, கூன் ஆன மீனன் இடேறிட கூடலில் வருவோனே ... கூனனாயிருந்த, மீன் கொடியை உடைய, பாண்டியன் (கூன் நீங்கி) ஈடேறுமாறு மதுரைக்கு (ஞானசம்பந்தராகச்) சென்றவனே, பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன் ... மிக்க வீரம் கொண்டவனும், அரக்கர்கள் அரசனுமான இராவணன் இரண்டு பிளவாக அம்பைச் செலுத்திய ரகுராமன், பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே ... தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாராயண மூர்த்தி, மாயவன் ஆகிய இராகவனுடைய மருகனே, வாழ் நாள் படா வரு சூரர்கள் மாளவெ ... வாழ் நாள் அழியும்படி வந்த சூரர்கள் இறக்க, சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட ... விண்ணுலகத்தில் வாழும் தேவர்கள் வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ, கோன் ஆக வரு நாத குரூ பர குமரேசா ... சேனைக்குத் தலைவனாக வந்த நாதனே, குருபரனே, குமரேசனே, வாசா மகோசரமாகிய வாசக ... வாக்குக்கு எட்டாத திருவாக்கை உடையவனே, தேச ஆதியோர் அவர் பாதம் அதே தொழ ... நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்கள் உனது திருவடிகளைத் தொழுது நிற்க, பாசா விநாசகனாகவும் மேவிய பெருமாளே. ... பாசங்களை நீக்குபவனாக விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.