வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய்
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல் கூர
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் இதமுடன் புணர்ந்து மதி மயங்கினும்
பொன் இலகு நின் பதங்கள் மறவேனே
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இ(ன்)னும் பிறந்தது என வானோர் வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி
விரை பதம் பணிந்து முறையோ என்று உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட
உயர் தலம் குலுங்க வரு தோகை ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே.
ரேகைகள் பரந்துள்ள இரண்டு கண்களும் சிவப்பாகி, முக வட்டம் சிறு வேர்வைத் துளிகளைக் கொண்டதாய், ரத்தினச் சிலம்பு ஒலிக்க, கூந்தலும் சரிந்து கலைய, தன் வசம் கெட்டு இழி நிலையை அடைந்து காமப் பித்து மிக, இரண்டு மார்பகங்களும் குலுங்கி அசைய, இடை நெகிழ்ந்து வருந்த, இனிமையான வாயூறலைப் பருகி, மாதர்களின் தோள்களை இன்பச் சுவையுடன் அணைந்து சேர்ந்து என் புத்தி கெட்டுப் போனாலும், தங்க மயமான உன்னுடைய திருவடிகளை நான் மறக்க மாட்டேன். விரிந்து பரந்து அசைகின்ற கடலும் கலக்கம் உற, ஆலகால விஷம் தான் மீண்டும் பிறந்து விட்டதோ என்று தேவர்கள் அச்சமுற்று உள்ளம் பயந்து, திண்மையும் குலைந்து, உனது நறு மணம் வீசும் திருவடிகளைப் பணிந்து வணங்கி, முறையோ என்று ஓலமிட்டு இன்னது சொல்லுவதென்று அறியாது சிந்தை வாடி நிற்க, வேலைச் செலுத்திய வீரனே, சிறந்த பூமிகள் எல்லாம் குலுங்கி அசையும்படியாக வந்த தோகை உடைய, ஒப்பற்ற பெரிய சிகண்டி என்னும் பெயரை உடைய மயில் மேல் வீற்றிருந்து விளங்கி, உலகத்தைக் காத்த பெருமாளே.
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் ... ரேகைகள் பரந்துள்ள இரண்டு கண்களும் சிவப்பாகி, முக வட்டம் சிறு வேர்வைத் துளிகளைக் கொண்டதாய், மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல் கூர ... ரத்தினச் சிலம்பு ஒலிக்க, கூந்தலும் சரிந்து கலைய, தன் வசம் கெட்டு இழி நிலையை அடைந்து காமப் பித்து மிக, இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் இதமுடன் புணர்ந்து மதி மயங்கினும் ... இரண்டு மார்பகங்களும் குலுங்கி அசைய, இடை நெகிழ்ந்து வருந்த, இனிமையான வாயூறலைப் பருகி, மாதர்களின் தோள்களை இன்பச் சுவையுடன் அணைந்து சேர்ந்து என் புத்தி கெட்டுப் போனாலும், பொன் இலகு நின் பதங்கள் மறவேனே ... தங்க மயமான உன்னுடைய திருவடிகளை நான் மறக்க மாட்டேன். விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இ(ன்)னும் பிறந்தது என வானோர் வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி ... விரிந்து பரந்து அசைகின்ற கடலும் கலக்கம் உற, ஆலகால விஷம் தான் மீண்டும் பிறந்து விட்டதோ என்று தேவர்கள் அச்சமுற்று உள்ளம் பயந்து, திண்மையும் குலைந்து, விரை பதம் பணிந்து முறையோ என்று உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட ... உனது நறு மணம் வீசும் திருவடிகளைப் பணிந்து வணங்கி, முறையோ என்று ஓலமிட்டு இன்னது சொல்லுவதென்று அறியாது சிந்தை வாடி நிற்க, வேலைச் செலுத்திய வீரனே, உயர் தலம் குலுங்க வரு தோகை ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே. ... சிறந்த பூமிகள் எல்லாம் குலுங்கி அசையும்படியாக வந்த தோகை உடைய, ஒப்பற்ற பெரிய சிகண்டி என்னும் பெயரை உடைய மயில் மேல் வீற்றிருந்து விளங்கி, உலகத்தைக் காத்த பெருமாளே.