அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய, மூக்கை அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து, வீணாக நிரம்ப மூலிகைகளை உண்டு, வாடுகின்ற, அலுப்பும் மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல், மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து, அறிவும், ஆசாரமும், முயற்சியும் உடையவனாக ஆகி, யான் வேறு, எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும், நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு எட்டாததாய் விளங்குவதும் ஆன சிவ ஸ்வரூப மஹா யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக. ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவனும், ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின் அன்பு மாறுபடாத மருமகனே, தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே, சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே, அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே, மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட வரும் காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும், நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவை மேவியவனே, சகல லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே, எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.
அனித்தமான ஊன் நாளுமிருப்பதாகவே ... அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய, நாசி யடைத்து வாயு ஓடாத வகைசாதித்(து) ... மூக்கை அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து, அவத்திலே குவால் மூலி புசித்து ... வீணாக நிரம்ப மூலிகைகளை உண்டு, வாடும் ஆயாச அசட்டு யோகி யாகாமல் ... வாடுகின்ற, அலுப்பும் மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல், மலமாயை செனித்த காரிய உபாதி யொழித்து ... மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து, ஞான ஆசார சிரத்தை யாகி ... அறிவும், ஆசாரமும், முயற்சியும் உடையவனாக ஆகி, யான்வேறு எனுடல்வேறு செகத்தி யாவும் வேறாக ... யான் வேறு, எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும், நிகழ்ச்சியா மநோதீத ... நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு எட்டாததாய் விளங்குவதும் ஆன சிவச்சொரூப மாயோகி யெனஆள்வாய் ... சிவ ஸ்வரூப மஹா யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக. தொனித்த நாத வேய் ஊது ... ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவனும், சகஸ்ர நாம கோபால சுதற்கு ... ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின் நேச மாறாத மருகோனே ... அன்பு மாறுபடாத மருமகனே, சுவர்க்க லோக மீகாம ... தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே, சமஸ்த லோக பூபால ... சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே, தொடுத்த நீப வேல்வீர வயலுரா ... அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே, மனித்தர் ஆதி சோணாடு தழைக்க ... மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட மேவு காவேரி மகப்ரவாக பானீயம் அலைமோதும் ... வரும் காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும், மணத்த சோலை சூழ்காவை ... நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவை மேவியவனே, அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமியே ... சகல லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே, தேவர் பெருமாளே. ... எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 355 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE thiru name %E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D