ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகமக் கலை கற்ற சமர்த்திகள்
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர்
தெருவூடே ஆர வட்ட முலைக்கு விலைப் பணம் ஆயிரக்கலம் ஒட்டி அளப்பினும் ஆசை அப்பொருள் ஒக்க நடிப்பவர்
உடன் மாலாய் மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையுமாய்
எடுத்த குலைப்பொடு பித்தமும் மேல் கொளத் தலை இட்ட விதிப்படி அதனாலே
மேதினிக்குள் அபத்தன் எனப் பல பாடு பட்டு புழு கொள் மலக் குகை வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள் தாராய்
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் பீறல் உற்றவு யுத்த களத்திடை
மடியாத பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர களப் பலி இட்டு
உயர் பேய் கை கொட்டி நடிப்ப மணிக் கழுகுடன் ஆட
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே
ஏழிசைத் தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம ஈசன்
முக் கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே.
ஆலகால விஷத்தைக் கொண்ட கண்களை உடையவர், மன்மதனுடைய காமசாஸ்திர நூல்களைப் படித்துள்ள சாமர்த்தியர்கள், எப்படிப்பட்டவருடைய மனத்தையும் வஞ்சனை செய்து தம் சப்படுத்துபவர்கள், தெருமுனையில் நின்று, முத்து மாலை அணிந்த, வட்ட வடிவுள்ள மார்பகங்களுக்கு விலையாகப் பணம் ஆயிரக்கலம் கணக்காகத் துணிந்து அளந்து கொடுத்தாலும், தங்களுடைய ஆசையை அந்த பொருளின் அளவுக்குத் தகுந்தவாறு கொடுத்து நடித்து ஒழுகுவார்கள், இத்தகைய விலைமாதருடன் நான் ஆசை பூண்டவனாய், அதன் பின்னர் வாட்டமும், மெலிவும், வேதனையும் அடைந்து, உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின்படி, அதன் காரணமாக பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை (பிறவியை) பேணி வளர்க்கும் எனக்கு உனது திருவருளைத் தந்து அருள வேண்டும். தோகை நிரம்ப உள்ள மயிலாகிய குதிரையின் மீது ஏறி, (எதிரிகளை) ஒரு சேர ஒன்றாக வளைத்து கூறுபடுத்தி உடல்கள் கிழிபட்ட அந்த போர்க் களத்தில் இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்த அத்தனை பேரையும் கொடுமையான போரில் மடிவித்துக் கொன்று, பெரிய பேய்கள் கை கொட்டி நடனமிடவும், கருமையான கழுகுகள் உடன் சேர்ந்து ஆடவும், ஏலத்தின் நறுமணம் வீசும் தோளில் அணைத்து வைத்துள்ள சிறப்பு வாய்ந்த வேலாயுதத்தை எடுத்துச் செலுத்திய ஆற்றலைப் புகழ்வோர்கள் யாவருக்கும் அவரவர் மனதில் நினைக்கும் விருப்பங்களைக் கொடுத்து அருள்பவனே, ஏழிசைத் தமிழில் தேவாரப் பாக்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் (திருவானைக்காவில்) விளங்குகின்ற உத்தமராகிய ஈசர், மூன்று கண்களை உடையவர், ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே.
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகமக் கலை கற்ற சமர்த்திகள் ... ஆலகால விஷத்தைக் கொண்ட கண்களை உடையவர், மன்மதனுடைய காமசாஸ்திர நூல்களைப் படித்துள்ள சாமர்த்தியர்கள், ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் ... எப்படிப்பட்டவருடைய மனத்தையும் வஞ்சனை செய்து தம் சப்படுத்துபவர்கள், தெருவூடே ஆர வட்ட முலைக்கு விலைப் பணம் ஆயிரக்கலம் ஒட்டி அளப்பினும் ஆசை அப்பொருள் ஒக்க நடிப்பவர் ... தெருமுனையில் நின்று, முத்து மாலை அணிந்த, வட்ட வடிவுள்ள மார்பகங்களுக்கு விலையாகப் பணம் ஆயிரக்கலம் கணக்காகத் துணிந்து அளந்து கொடுத்தாலும், தங்களுடைய ஆசையை அந்த பொருளின் அளவுக்குத் தகுந்தவாறு கொடுத்து நடித்து ஒழுகுவார்கள், உடன் மாலாய் மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையுமாய் ... இத்தகைய விலைமாதருடன் நான் ஆசை பூண்டவனாய், அதன் பின்னர் வாட்டமும், மெலிவும், வேதனையும் அடைந்து, எடுத்த குலைப்பொடு பித்தமும் மேல் கொளத் தலை இட்ட விதிப்படி அதனாலே ... உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின்படி, அதன் காரணமாக மேதினிக்குள் அபத்தன் எனப் பல பாடு பட்டு புழு கொள் மலக் குகை வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள் தாராய் ... பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை (பிறவியை) பேணி வளர்க்கும் எனக்கு உனது திருவருளைத் தந்து அருள வேண்டும். பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் பீறல் உற்றவு யுத்த களத்திடை ... தோகை நிரம்ப உள்ள மயிலாகிய குதிரையின் மீது ஏறி, (எதிரிகளை) ஒரு சேர ஒன்றாக வளைத்து கூறுபடுத்தி உடல்கள் கிழிபட்ட அந்த போர்க் களத்தில் மடியாத பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர களப் பலி இட்டு ... இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்த அத்தனை பேரையும் கொடுமையான போரில் மடிவித்துக் கொன்று, உயர் பேய் கை கொட்டி நடிப்ப மணிக் கழுகுடன் ஆட ... பெரிய பேய்கள் கை கொட்டி நடனமிடவும், கருமையான கழுகுகள் உடன் சேர்ந்து ஆடவும், ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர் ... ஏலத்தின் நறுமணம் வீசும் தோளில் அணைத்து வைத்துள்ள சிறப்பு வாய்ந்த வேலாயுதத்தை எடுத்துச் செலுத்திய ஆற்றலைப் புகழ்வோர்கள் ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே ... யாவருக்கும் அவரவர் மனதில் நினைக்கும் விருப்பங்களைக் கொடுத்து அருள்பவனே, ஏழிசைத் தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம ஈசன் ... ஏழிசைத் தமிழில் தேவாரப் பாக்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் (திருவானைக்காவில்) விளங்குகின்ற உத்தமராகிய ஈசர், முக் கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே. ... மூன்று கண்களை உடையவர், ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே.