ஓம் என்று ஒலிக்கும் வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது. பிரம்மாந்தரத்திற்கும் அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ் ஜோதி அது. நூல்களில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று வழிகளை அநுசரித்தவர்களாலும் சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்தது அது. உணர்வு மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு நிலையிலும், உலகம், உயிர், உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது. சிவஞானம் மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது. மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது. சாதி, குலம் முதலியன இல்லாதது அது. மேலும், அன்புள்ள அடியார்கள் கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அநுபவம் கொண்ட பெரியோர்கள் மனம் ஒடுங்கிப் பொருந்தியுள்ள உண்மையான மோக்ஷ வீட்டு இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை பெருமை வாய்ந்தது நின் கழல்). ஐந்து இந்திரியங்களினால் ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து அத்தகைய கழலினை நான் பெறும் பாக்கியம் உடையவனோ? பால குமாரா, குகனே, கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே, மயில் வாகனனே, என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும் துயரத்தைப் போக்கியவனே, வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும், வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவனே, சிங்க ஏறு போன்ற அழகியவனே, வெற்றி மாலை சூடும், போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே, வயலூரில் வாழ்பவனே, உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும், நீல நிறமுடையவளும், பொன்னிறமுடன் கெளரி எனப்படுபவளும், பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும், என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும், மூன்று உலகங்களையும் பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் பரவி நின்றவளும், ஆலிலை போன்று வயிறை உடையவளும், பசிய கரும்பு அனையவளும், வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன் ஜம்புநாதனின் மனைவியும் ஆன வஞ்சிக்கொடி போன்ற உமாதேவி பெற்றருளிய பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 359 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE thiru name %E0%AE%93%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D