இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள், கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள், கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள், மகா பொல்லாதவர்கள், பஞ்சமா பாதகச் செயல்களை செய்ய, அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப்படுகின்ற சரியை, கிரியை, தேவ பூஜை, வழிபாடு தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில் ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல் அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக. ஓர் ஒப்பற்ற வேலைக் கொண்டு, நெடிய கிரெளஞ்சமலையையும், அசுரர்களையும், மாமரமாய் நின்ற சூரனையும், ஆரவாரிக்கும் கடலையும் உடைபட்டுப் போகுமாறு போர் புரிந்த குமாரனே, தாமரையொத்த கரங்களை உடைய வீரனே, சிறந்த தவ முநிவர்கள், மேலுலகவாசிகளான தேவர்கள், உனது திருவடிகளைத் தொழுது நன்கு துதிக்கும் அடியார்கள், இவர்களது உள்ளத்தில் தினமும் விளையாடி இன்பமுற வீற்றிருப்போனே, ஆய்ந்து அறிந்த வேதத்தின் ஆறு அங்கங்களிலும் வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள் ஹரி ஹரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து, இரு திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே, பிரம தேவனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும் எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற திருவானைக்காவில் வாழ்கின்ற ஜம்புநாதர் தந்தருளிய பெருமாளே.