எலுப்புத் தோல் மயிர் நாடி குழாம் மிடை
இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள்
இரத்தச் சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலா வலி
உளைப்புச் சூலையொடே வலுவாகிய இரைப்பு
கேவல மூல வியாதியொடு அண்ட வாதம்
குலைப்புக் காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு
காது அடை கூனல் விசூசிகை
குருட்டுக் கால்முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை
குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து
பாழ் வினையால் உழல் நாயேன்
உன் இடத்துத் தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய்
கெலிக்கப் போர் பொரு சூரர் குழாம் உமிழ்
இரத்தச் சேறு எழ
தேர் பரி யாளிகள் கெடுத்திட்டே
கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா
கிளர் பொன் தோளி
சராசரம் மேவி எய் அசைத்துப் பூசைகொள் ஆயி
பராபரி
கிழப் பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும்
வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்தப் போது
உடல் கீழ் விழவே செய்து மகிழ்ப் பொன் பாத
சிவாய நமோ அர சம்பு பாலா
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து
சீர் புலியூர் பரமாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே.
எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம், உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம், வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், இழிவான மூல நோயுடன் விரைவாதம், நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு, பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக. வெற்றி பெறுவதன் பொருட்டுப் போர் செய்த அசுரர்களுடைய கூட்டம் கக்கும் இரத்தச் சேறு பெருக, தேர்கள், குதிரைகள், யாளிகள் (இப் படைகள் எல்லாம்) அழிபட்டு, கடலும் சூரனும், கிரெளஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலனே, விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவள், அசையும் பொருள், அசையாப்பொருள் இவை இரண்டிலும் கலந்தும் அவைகளை ஆட்டுவித்தும் பூஜை பெறுகின்ற எங்கள் அன்னை, பரம் பொருளானவள், (தனக்கு) உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் எம்முடைய பிராட்டியும் ஆகிய பார்வதியின் பக்கத்தில் இருப்பவரும், வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது, அவனுடைய உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும், சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே, மலை போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி, பெருமை வாய்ந்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே.
எலுப்புத் தோல் மயிர் நாடி குழாம் மிடை ... எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம், இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள் ... உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தச் சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை ... இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், இளைப்புச் சோகைகள் வாதம் விலா வலி ... சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம், உளைப்புச் சூலையொடே வலுவாகிய இரைப்பு ... வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், கேவல மூல வியாதியொடு அண்ட வாதம் ... இழிவான மூல நோயுடன் விரைவாதம், குலைப்புக் காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு ... நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு, காது அடை கூனல் விசூசிகை ... செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுக் கால்முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை ... குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து ... (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு, பாழ் வினையால் உழல் நாயேன் ... பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உன் இடத்துத் தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் ... உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக. கெலிக்கப் போர் பொரு சூரர் குழாம் உமிழ் ... வெற்றி பெறுவதன் பொருட்டுப் போர் செய்த அசுரர்களுடைய கூட்டம் கக்கும் இரத்தச் சேறு எழ ... இரத்தச் சேறு பெருக, தேர் பரி யாளிகள் கெடுத்திட்டே ... தேர்கள், குதிரைகள், யாளிகள் (இப் படைகள் எல்லாம்) அழிபட்டு, கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா ... கடலும் சூரனும், கிரெளஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலனே, கிளர் பொன் தோளி ... விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவள், சராசரம் மேவி எய் அசைத்துப் பூசைகொள் ஆயி ... அசையும் பொருள், அசையாப்பொருள் இவை இரண்டிலும் கலந்தும் அவைகளை ஆட்டுவித்தும் பூஜை பெறுகின்ற எங்கள் அன்னை, பராபரி ... பரம் பொருளானவள், கிழப் பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் ... (தனக்கு) உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் எம்முடைய பிராட்டியும் ஆகிய பார்வதியின் பக்கத்தில் இருப்பவரும், வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்தப் போது ... வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது, உடல் கீழ் விழவே செய்து மகிழ்ப் பொன் பாத ... அவனுடைய உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும், சிவாய நமோ அர சம்பு பாலா ... சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே, மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து ... மலை போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி, சீர் புலியூர் பரமாகிய ... பெருமை வாய்ந்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும் வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே. ... வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே.