கொடாதவனையே புகழ்ந்து
குபேரனெனவே மொழிந்து
குலாவி யவமே திரிந்து
புவிமீதே எடாதசுமையே சுமந்து
எணாதகலியால் மெலிந்து
எலாவறுமை தீர
அன்றுனருள்பேணேன்
சுடாத தனமான கொங்கைகளால்
இதயமே மயங்கி
சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்
கெடாத தவமே மறைந்து
கிலேசமதுவே மிகுந்து
கிலாத உடல் ஆவி நொந்து மடியாமுன்
தொடாய்மறலியே நி யென்ற சொல் ஆகியது
உன் நா வருங்கொல் சொல்
ஏழுலகம் ஈனும் அம்பை யருள்பாலா
நடாதசுழி மூல விந்து
நள் ஆவி விளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க வடிவேலா
படாதகுளிர் சோலை
அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து
பசேலெனவ மே தழைந்து தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த
அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது உகந்த பெருமாளே.
தர்மம் செய்யாதவனைப் புகழ்ந்து அவனைக் குபேரன் என்று கூறி, அவனுடன் கூடிக் குலாவி வீணாகத் திரிந்து, இந்தப் பூமியில் தாங்கமுடியாத குடும்பச் சுமையைத் தாங்கி, நினைக்கவும் முடியாத கொடுமை நிறைந்த கலிபுருஷனால் வாடி, எல்லாவிதமான வறுமைகளும் தீரும்பொருட்டு அந்நாளில் உனது திருவருளை விரும்பாது காலம் கழித்தேன். தீயில் சுடாத பசும்பொன் போன்ற மார்புடைய பெண்களிடம் என் மனத்தைப் பறி கொடுத்து உள்ளம் மயங்கி, சுகத்தைத் தரக்கூடிய வழியில் ஒழுக்கத்துடன் நான் நடக்காமல், கெடுதல் இல்லாத தவநெறி மறைந்து போக, துன்பமே மிகவும் பெருகி, வலிமை இல்லாத உடம்பில் உயிர் நொந்து இறந்து போவதற்கு முன் யமனே, நீ இவனுடைய உயிரைத் தொடாதே என்ற சொல்லானது உனது நாவிலிருந்து வருமோ? அதை நீ எனக்குச் சொல்லி அருள்வாயாக. ஏழு உலகங்களையும் பெற்றெடுத்த பார்வதியம்மை அருளிய குமரனே, நட்டுவைக்கப் படாத சுழிமுனை, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின் நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும் ஞான மூர்த்தியே, சூரியனுக்குச் சமானமான ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே, வெயில் படாத குளிர்ந்த சோலைகள் ஆகாயம் வரை ஓங்கி வளர்ந்து பச்சைப் பசேல் என்ற நிறத்துடன் தழைந்து நாள்தோறும் விடாமல் மழை பொழிவதால் பல மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள விராலிமலை மீது விரும்பி வாழும் பெருமாளே.
கொடாதவனையே புகழ்ந்து ... தர்மம் செய்யாதவனைப் புகழ்ந்து குபேரனெனவே மொழிந்து ... அவனைக் குபேரன் என்று கூறி, குலாவி யவமே திரிந்து ... அவனுடன் கூடிக் குலாவி வீணாகத் திரிந்து, புவிமீதே எடாதசுமையே சுமந்து ... இந்தப் பூமியில் தாங்கமுடியாத குடும்பச் சுமையைத் தாங்கி, எணாதகலியால் மெலிந்து ... நினைக்கவும் முடியாத கொடுமை நிறைந்த கலிபுருஷனால் வாடி, எலாவறுமை தீர ... எல்லாவிதமான வறுமைகளும் தீரும்பொருட்டு அன்றுனருள்பேணேன் ... அந்நாளில் உனது திருவருளை விரும்பாது காலம் கழித்தேன். சுடாத தனமான கொங்கைகளால் ... தீயில் சுடாத பசும்பொன் போன்ற மார்புடைய பெண்களிடம் இதயமே மயங்கி ... என் மனத்தைப் பறி கொடுத்து உள்ளம் மயங்கி, சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல் ... சுகத்தைத் தரக்கூடிய வழியில் ஒழுக்கத்துடன் நான் நடக்காமல், கெடாத தவமே மறைந்து ... கெடுதல் இல்லாத தவநெறி மறைந்து போக, கிலேசமதுவே மிகுந்து ... துன்பமே மிகவும் பெருகி, கிலாத உடல் ஆவி நொந்து மடியாமுன் ... வலிமை இல்லாத உடம்பில் உயிர் நொந்து இறந்து போவதற்கு முன் தொடாய்மறலியே நி யென்ற சொல் ஆகியது ... யமனே, நீ இவனுடைய உயிரைத் தொடாதே என்ற சொல்லானது உன் நா வருங்கொல் சொல் ... உனது நாவிலிருந்து வருமோ? அதை நீ எனக்குச் சொல்லி அருள்வாயாக. ஏழுலகம் ஈனும் அம்பை யருள்பாலா ... ஏழு உலகங்களையும் பெற்றெடுத்த பார்வதியம்மை அருளிய குமரனே, நடாதசுழி மூல விந்து ... நட்டுவைக்கப் படாத சுழிமுனை, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின் நள் ஆவி விளை ஞான நம்ப ... நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும் ஞான மூர்த்தியே, நபோமணி சமான துங்க வடிவேலா ... சூரியனுக்குச் சமானமான ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே, படாதகுளிர் சோலை ... வெயில் படாத குளிர்ந்த சோலைகள் அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து ... ஆகாயம் வரை ஓங்கி வளர்ந்து பசேலெனவ மே தழைந்து தினமேதான் ... பச்சைப் பசேல் என்ற நிறத்துடன் தழைந்து நாள்தோறும் விடாதுமழை மாரி சிந்த ... விடாமல் மழை பொழிவதால் அநேகமலர் வாவி பொங்கு ... பல மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள விராலிமலை மீது உகந்த பெருமாளே. ... விராலிமலை மீது விரும்பி வாழும் பெருமாளே.