தண்டை அணி வெண்டையங் கிண் கிணி சதங்கையுந்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைந்து நின்று அன்பு போல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்ச மலர் செங்கையும் சிந்துவேலும்
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன்முன் சந்தியாவோ?
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கி எழ வெங்களங் கொண்ட போது
பொன்கிரி யெனஞ் சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தைகூர
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன்
கொஞ்சி நடனங் கொளும் கந்தவேளே
கொங்கை குறமங்கையின் சந்த மணம் உண்டிடும் (தம்பிரானே)
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே
தண்டை என்கின்ற காலணி, வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, (சலங்கை என்னும்) சதங்கையும், அருள் கழல்களும், சிலம்புடன் (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க உன் தந்தை சிவனை அன்புடன் வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், மகிழ்ச்சி பொங்கி எழ, நீ போர்க்களம் புகுந்த போது, பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக நீ கொண்ட நடனப் பாதங்கள் திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தனாகிய மன்மத சொரூபனே குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்ற தம்பிரானே அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி, வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும், தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன் இன்பவுரி கொண்டு ... வலம்வந்து நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும், கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ, வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது, பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள் செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 62 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D thiru name %E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF