உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின்
திரவிய(ம்) இகலருள் ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி
உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவு உறு சகல இந்த்ர தந்த்ரமும் வ(ல்)ல விலை மகள்
உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட
மலர் அமளியில் வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே
விளை தனம் கவர்ந்திடும் பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் வெகுளியின் கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே
செரு நினைந்திடும் சின வலி அசுரர்கள் உகம் முடிந்திடும் படி எழு பொழுதிடை செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசை தனில் ஏறி
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமிதி மிந்திமிந் திமிதிமி திமி என வரும் பூதம்
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிர(ம்) மொண்டும் உண்டிட அமர் புரிபவ
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே
கனம் உறு த்ரியம்பக புர(ம்) மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என
இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல பெருமாளே.
பேசுவதற்கு முடியாமல் விழித்து நிற்கின்ற இவரிடம் பொருளை அபகரிப்பது எளிது என்று தமது உணர்ச்சியினால் அறிந்து, அதன் பிறகு செல்வ வலிமை உடையவர்களுள் ஒருவருடைய நட்பைப் பெற்று, அவரிடம் உள்ள திரண்ட பொருளைக் கவரும் எண்ணம் கொண்டு, அவருடைய பொருளைத் தேடி, உள்ளம் மகிழ்ச்சி அடைந்து களிப்புற்று, (அவரது சொத்துக்களின் மீது) தமக்குள்ள உரிமையை நிலைநாட்ட நினைத்து, எல்லாவிதமான தந்திரங்களையும் காட்டவல்ல விலைமாதரின் இரண்டு மார்பகங்களும் புளகிதம் கொள்ள நிரம்ப உறவைக் காட்டி, காமமோகத்துடன் மிகுந்த நறுமணத்தின் உள்ளேயே முழுகி, நன்றி பொருந்தியவர்கள் போல மலர்ப் படுக்கையில் பல வித காம லீலைகளைப் புரிந்து, கலவிப் போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளில், (தம்மை நாடினோரின்) பெருகி உள்ள செல்வத்தை அபகரிக்கும் பலவித கெட்ட எண்ணங்களை உடைய வேசியர்கள், பிறருடைய சொத்துக்களும் தம்முடையதே என்று நினைப்பவர்கள் பேசும் கோப மொழிகளில் அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள என் செயல் இனி முற்றும் அற்றுப் போக அருள் செய்வாயாக. போரையே நினைந்திருக்கும் கோபமும் வலிமையும் கொண்ட அசுரர்கள் யுகம் முடியும் காலம் போல போருக்கு எழுந்த சமயத்தில், உலகம் முழுவதும் பயம் நீங்க மயிலின் மேலே ஏறி, (அதே தாளத்திற்கேற்ப) வந்த பூதங்கள் கரை கடந்து எழுந்த கடலைப் போல உள்ள ரத்தத்தை மொண்டு உண்ணும்படி போர் செய்தவனே, சேர்க்கை அன்புடன் குறப் பெண்ணான வள்ளியைத் தழுவிய முருகனே, பெருமை தங்கிய திரியம்பகபுரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும், உமா தேவி பெற்றெடுத்த கந்தனே, ஆறுமுகனே என்று உனது இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று தேவர்கள் தொழுதற்குரிய பெருமாளே.
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் ... பேசுவதற்கு முடியாமல் விழித்து நிற்கின்ற இவரிடம் பொருளை அபகரிப்பது எளிது என்று தமது உணர்ச்சியினால் அறிந்து, அதன் பிறகு திரவிய(ம்) இகலருள் ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி ... செல்வ வலிமை உடையவர்களுள் ஒருவருடைய நட்பைப் பெற்று, அவரிடம் உள்ள திரண்ட பொருளைக் கவரும் எண்ணம் கொண்டு, அவருடைய பொருளைத் தேடி, உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவு உறு சகல இந்த்ர தந்த்ரமும் வ(ல்)ல விலை மகள் ... உள்ளம் மகிழ்ச்சி அடைந்து களிப்புற்று, (அவரது சொத்துக்களின் மீது) தமக்குள்ள உரிமையை நிலைநாட்ட நினைத்து, எல்லாவிதமான தந்திரங்களையும் காட்டவல்ல விலைமாதரின் உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட ... இரண்டு மார்பகங்களும் புளகிதம் கொள்ள நிரம்ப உறவைக் காட்டி, காமமோகத்துடன் மிகுந்த நறுமணத்தின் உள்ளேயே முழுகி, நன்றி பொருந்தியவர்கள் போல மலர் அமளியில் வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே ... மலர்ப் படுக்கையில் பல வித காம லீலைகளைப் புரிந்து, கலவிப் போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளில், விளை தனம் கவர்ந்திடும் பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் வெகுளியின் கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே ... (தம்மை நாடினோரின்) பெருகி உள்ள செல்வத்தை அபகரிக்கும் பலவித கெட்ட எண்ணங்களை உடைய வேசியர்கள், பிறருடைய சொத்துக்களும் தம்முடையதே என்று நினைப்பவர்கள் பேசும் கோப மொழிகளில் அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள என் செயல் இனி முற்றும் அற்றுப் போக அருள் செய்வாயாக. செரு நினைந்திடும் சின வலி அசுரர்கள் உகம் முடிந்திடும் படி எழு பொழுதிடை செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசை தனில் ஏறி ... போரையே நினைந்திருக்கும் கோபமும் வலிமையும் கொண்ட அசுரர்கள் யுகம் முடியும் காலம் போல போருக்கு எழுந்த சமயத்தில், உலகம் முழுவதும் பயம் நீங்க மயிலின் மேலே ஏறி, திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமிதி மிந்திமிந் திமிதிமி திமி என வரும் பூதம் ... (அதே தாளத்திற்கேற்ப) வந்த பூதங்கள் கரை இறந்திடும் கடல் என மருவிய உதிர(ம்) மொண்டும் உண்டிட அமர் புரிபவ ... கரை கடந்து எழுந்த கடலைப் போல உள்ள ரத்தத்தை மொண்டு உண்ணும்படி போர் செய்தவனே, கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே ... சேர்க்கை அன்புடன் குறப் பெண்ணான வள்ளியைத் தழுவிய முருகனே, கனம் உறு த்ரியம்பக புர(ம்) மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என ... பெருமை தங்கிய திரியம்பகபுரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும், உமா தேவி பெற்றெடுத்த கந்தனே, ஆறுமுகனே என்று இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல பெருமாளே. ... உனது இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று தேவர்கள் தொழுதற்குரிய பெருமாளே.