முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம்
மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள்
முப்பது முவர்க்க சுரர் அடி பேணி
பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி
பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்
பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென தெனனான
திக்குவென மத்தளம் இடக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை யெனஆடும்
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ
சித்தி அருள் சத்தி அருள் புரிபாலா
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர்
அல் கனக பத்ம புரி பெருமாளே.
முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும், முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள், முப்பத்து மூன்று வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப, (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால், அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய, பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே, பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக. (இவ்வகை) ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க, தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும் தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே, நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும், பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி ... முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும், முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள் ... முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள், முப்பது முவர்க்க சுரர் அடி பேணி ... முப்பத்து மூன்று வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப, பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி ... (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால், பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் ... அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய, பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் ... பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே, பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே ... பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக. தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென மத்தளம் இடக்கைதுடி ... (இவ்வகை) ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க, தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும் ... தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும் அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி அருள் புரிபாலா ... தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே, அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் ... நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும், கனக பத்ம புரி பெருமாளே. ... பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.