| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
ஆத்திசூடி - ஔவையார் இயற்றிய நீதி நூல்
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
2. ஆறுவது சினம் - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.
5.உடையது விளம்பேல் - உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல் - எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல் - கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
8. ஏற்பது இகழ்ச்சி - இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
9. ஐயம் இட்டு உண் - யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
10.ஒப்புரவு ஒழுகு - உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11.ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12.ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13.அஃகஞ் சுருக்கேல் - அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
14.கண்டொன்று சொல்லேல் - கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
15.ஙப் போல் வளை - 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும். ங என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
16.சனி நீராடு -சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
17.ஞயம்பட உரை - கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
18.இடம்பட வீடு எடேல் -உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
20.தந்தை தாய்ப் பேண் -உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
21.நன்றி மறவேல் - ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22.பருவத்தே பயிர் செய் - எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23.மண் பறித்து உண்ணேல் -பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
24.இயல்பு அலாதன செய்யேல் - நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25.அரவம் ஆட்டேல். -பாம்புகளை பிடித்து விளையாடாதே.
26.இலவம் பஞ்சில் துயில் -இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.
27.வஞ்சகம் பேசேல் -படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே.
28.அழகு அலாதன செய்யேல் -இழிவான செயல்களை செய்யாதே
29.இளமையில் கல் - இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
30.அறனை மறவேல். -தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.
31.அனந்தல் ஆடேல் - மிகுதியாக துங்காதே.
32.கடிவது மற -யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
33.காப்பது விரதம் - தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
34.கிழமைப் பட வாழ் -உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.
35.கீழ்மை யகற்று -இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
36.குணமது கைவிடேல் - நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
37.கூடிப் பிரியேல் - நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.
38.கெடுப்ப தொழி -பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39.கேள்வி முயல் -கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.
40.கைவினை கரவேல் -உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
41.கொள்ளை விரும்பேல் - பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
42.கோதாட் டொழி -குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).
43.கௌவை அகற்று -வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்க.
44.சக்கர நெறி நில் - அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் ).
45.சான்றோ ரினத்திரு -அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46.சித்திரம் பேசெல் - பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.
47.சீர்மை மறவேல் - புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
48.சுளிக்கச் சொல்லேல் -கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.
49.சூது விரும்பேல் - ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50.செய்வன திருந்தச் செய் - செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.
51.சேரிடமறிந்து சேர் -நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
52.சையெனத் திரியேல் -பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.
53.சொற்சோர்வு படேல் - பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.
54.சோம்பித் திரியேல் -முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
55.தக்கோ னெனத்திரி -பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.
56.தானமது விரும்பு -யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
57.திருமாலுக்கு அடிமை செய் -நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.
58.தீவினை யகற்று -பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
59.துன்பத்திற்கு கிடங்கொடேல் -முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
60.தூக்கி வினைசெய் -ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.
61.தெய்வ மிகழேல் -கடவுளை பழிக்காதே.
62.தேசத்தோ டொத்துவாழ் - உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.
63.தையல்சொல் கேளேல் -மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
64.தொன்மை மறவேல் - பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
65.தோற்பன தொடரேல் -ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
66.நன்மை கடைப்பிடி -நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
67.நாடொப் பனசெய் - நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
68.நிலையிற் பிரியேல் -உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
69.நீர்விளை யாடேல் -வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.
70.நுண்மை நுகரேல் -நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
71.நூல்பல கல் - அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.
72.நெற்பயிர் விளை - நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
73.நேர்பட வொழுக - ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.
74.நைவினை நணுகேல் -பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.
75.நொய்ய வுரையேல் -பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
76.நோய்க்கிடங் கொடேல் -மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
77.பழிப்பன பகரேல் -பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.
78.பாம்பொடு பழகேல் -பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
79.பிழைபடச் சொல்லேல் -குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
80.பீடு பெறநில் -பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.
81.புகழ்ந்தாரைப் போற்றி வாழ் -உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.
82.பூமி திருத்தியுண் -விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.
83.பெரியாரைத் துணைக்கொள் -அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
84.பேதைமை யகற்று -அறியாமையை போக்க.
85.பையலோ டிணங்கேல் -அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86.பொருடனைப் போற்றிவாழ் -பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
87.போர்த்தொழில் புரியேல் -யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.
88.மனந்தடு மாறேல் -எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.
89.மாற்றானுக் கிடங்கொடேல் -பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90.மிகைபடச் சொல்லேல் - சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91.மீதூண் விரும்பேல் -மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92.முனைமுகத்து நில்லேல் - எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.
93.மூர்க்கரோ டிணங்கேல் - மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
94.மெல்லினல்லாள் தோள்சேர் -பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
95.மேன்மக்கள் சொற்கேள் -நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
96.மைவிழியார் மனையகல் - விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
97.மொழிவ தறமொழி -சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.
98.மோகத்தை முனி -நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.
99.வல்லமை பேசேல் -உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
100. வாதுமுற் கூறேல் -பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.
101. வித்தை விரும்பு - கல்வியாகிய நற்பொருளை விரும்பு.
102. வீடு பெறநில் -முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.
103. உத்தமனாய் இரு -உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.
104. ஊருடன் கூடிவாழ் -ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.
105. வெட்டெனப் பேசேல் -யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
106. வேண்டி வினைசெயேல் - வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.
107. வைகறை துயிலெழு - நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
108. ஒன்னாரைத் தேறேல் -பகைவர்களை நம்பாதே.
109. ஓரஞ் சொல்லேல் -எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
Back to Top