கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே
|
[937.0] |
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே
|
[938.0] |
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்- உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே
|
[939.0] |
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மை ஆகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே
|
[940.0] |
| Back to Top |
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
|
[941.0] |
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே
|
[942.0] |
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல் வினை பாற்றி அருளினான் எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே
|
[943.0] |
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ் அரு மறையின் பொருள் அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
|
[944.0] |
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்- புக்க காதல் அடிமைப் பயன் அன்றே
|
[945.0] |
| Back to Top |
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே
|
[946.0] |
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
|
[947.0] |