சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை pann அயிகிரி நந்தினி
8.105.01   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/05.01 Meiumarthal Thiruvasagam.mp3
8.105.02   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20) நாடகத்தால் உன் அடியார்போல்
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/05.02 Arivuruthal Thiruvasagam.mp3
8.106   மாணிக்க வாசகர்    திருவாசகம்   நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
பண் - அயிகிரி நந்தினி   (உத்தரகோசமங்கை )
Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3
Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3
8.114   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருஉந்தியார் - வளைந்தது வில்லு
பண் - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvasagam2/14 Thiruvundhiyaar.mp3
Audio: https://www.youtube.com/watch?v=ZixwG7LkRHE
8.124   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/24 Adaikalapatthu Thiruvasagam.mp3
8.136   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/36 Thirupandipathigam Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/36 Thirupaandi pathigam.mp3
8.139   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
பண் - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/39 Thirupulambal Thiruvasagam.mp3
8.140   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
பண் - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/40 Kulapathu Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.105.01   திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கட்டளைக்கலித்துறை
இறைவனின் மெய்ப்பொருளை உணர்ந்து உண்மையை அடையும் நிலை.
மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

[1]
கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

[2]
உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?

[3]
சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி,
ஆவ! எந்தாய்!' என்று, அவிதா இடும் நம்மவர் அவரே,
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!
[4]
தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு, முட்டாது இறைஞ்சேன்;
அவமே பிறந்த அரு வினையேன், உனக்கு அன்பர் உள் ஆம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு; எம் பரம்பரனே!

[5]
பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.

[6]
முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து, முன்நாள்,
செழு மலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்; இப்பால், எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி, கதி இலியாய்,
உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு, உழிதருமே.

[7]
உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும்,
இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின்,
உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே!

[8]
பவன், எம்பிரான், பனி மா மதிக் கண்ணி, விண்ணோர் பெருமான்,
சிவன், எம்பிரான், என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்;
அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே
புவன், எம்பிரான்! தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.

[9]
புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே!
தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை
மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா! அமுதே!
நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.

[10]
நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்;
ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என்
ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!

[11]
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்;
தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்
மானே! உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே வருந்துவனே.

[12]
வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன்
இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற;
பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல்,
வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே?

[13]
ஆம் ஆறு, உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன்;
பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்; புத்தேளிர்
கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன்,
சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே.

[14]
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி,
ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

[15]
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழவேண்டி;
சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய் அடியேன்,
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே.

[16]
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்;
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்;
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன்
அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே?

[17]
அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம்
பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ்
விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்;
தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே!

[18]
வேனில் வேள் மலர்க் கணைக்கும், வெள் நகை, செவ் வாய், கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே!
ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்று போய்
வான் உளான்; காணாய் நீ, மாளா வாழ்கின்றாயே.

[19]
வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப் பட்டு
ஆழ்கின்றாய்; ஆழாமல் காப்பானை ஏத்தாதே,
சூழ்கின்றாய் கேடு உனக்கு; சொல்கின்றேன், பல்காலும்;
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.106   நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் உத்தரகோசமங்கை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கட்டளைக்கலித்துறை
பிரபஞ்ச வைராக்கியம்; உலக இன்பங்களைத் துறந்து, சிவஞானத்தைப் பெற்று, இறைவனுடன் கலக்கும் பேரின்பத்திற்காக அருளை வேண்டும் வைராக்கியப் பதிகம்.
கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட
விடையவனே, விட்டிடுதி கண்டாய்? விறல் வேங்கையின் தோல்
உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
சடையவனே, தளர்ந்தேன்; எம்பிரான், என்னைத் தாங்கிக்கொள்ளே.

[1]
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?

[2]
கார் உறு கண்ணியர் ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய்?விளங்கும் திருவா
ரூர் உறைவாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே.

[3]
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

[4]
செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.

[5]
மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி
ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

[6]
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.

[7]
தீர்க்கின்ற ஆறு என் பிழையை, நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!

[8]
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!

[9]
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.

[10]
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.

[11]
நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ,
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே,
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே.

[12]
கடலினுள் நாய் நக்கி ஆங்கு, உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய்? விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மடலின் மட்டே, மணியே, அமுதே, என் மது வெள்ளமே.

[13]
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.

[14]
களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்? மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே,
எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!

[15]
என்னை அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்;
மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே
உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!

[16]
பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

[17]
இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

[18]
மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே.

[19]
கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.

[20]
ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.

[21]
ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து, ஒளி மிளிரும்
வெண்மையனே, விட்டிடுதி கண்டாய்? மெய் அடியவர்கட்கு
அண்மையனே, என்றும் சேயாய் பிறர்க்கு; அறிதற்கு அரிது ஆம்
பெண்மையனே, தொன்மை ஆண்மையனே, அலிப் பெற்றியனே.

[22]
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.

[23]
உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.

[24]
எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க,
உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.

[25]
பெரு நீர் அற, சிறு மீன் துவண்டு ஆங்கு, நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய்? வியன் கங்கை பொங்கி
வரும் நீர் மடுவுள், மலைச் சிறு தோணி வடிவின், வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை, வானக் கொழு மணியே!

[26]
கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து,
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்
கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

[27]
புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம்
கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே!
துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.

[28]
குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.

[29]
மத்து உறு தண் தயிரின், புலன் தீக் கதுவக் கலங்கி,
வித்து உறுவேனை விடுதி கண்டாய்? வெண் தலை மிலைச்சி,
கொத்து உறு போது மிலைந்து, குடர் நெடு மாலை சுற்றி,
தத்து உறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே.

[30]
சச்சையனே, மிக்க தண் புனல், விண், கால், நிலம், நெருப்பு, ஆம்
விச்சையனே, விட்டிடுதி கண்டாய்? வெளியாய், கரியாய்,
பச்சையனே, செய்ய மேனியனே, ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே.

[31]
அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

[32]
கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.

[33]
குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்? விரை ஆர்ந்து, இனிய
மது மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து,
எதிர்வது எப்போது? பயில்வி, கயிலைப் பரம்பரனே!

[34]
பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய்? மென் முயல் கறையின்
அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐ வாய் அரவம்
பொரும், பெருமான் வினையேன் மனம் அஞ்சி, பொதும்பு உறவே.

[35]
பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ,
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு
அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே.

[36]
அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.

[37]
அடர் புலனால், நின் பிரிந்து அஞ்சி, அம் சொல் நல்லார் அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய்? விரிந்தே எரியும்
சுடர் அனையாய், சுடுகாட்டு அரசே, தொழும்பர்க்கு அமுதே,
தொடர்வு அரியாய், தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.

[38]
தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.

[39]
வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.

[40]
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி,
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய்? விடக்கு ஊன் மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன்; சிவனே, முறையோ? முறையோ?
திதலைச் செய் பூண் முலை மங்கை பங்கா, என் சிவகதியே!

[41]
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும், ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய்? வெள் தலை முழையில்
பதி உடை வாள் அரப் பார்த்து, இறை பைத்துச் சுருங்க, அஞ்சி,
மதி நெடு நீரில் குளித்து, ஒளிக்கும் சடை மன்னவனே.

[42]
மன்னவனே, ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே, விட்டிடுதி கண்டாய்? மிக்க வேத மெய்ந் நூல்
சொன்னவனே, சொல் கழிந்தவனே, கழியாத் தொழும்பர்
முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே.

[43]
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித் தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய்? நின் வெறி மலர்த் தாள்
தொழுது செல் வானத் தொழும்பரில் கூட்டிடு; சோத்தம்' பிரான்;
பழுது செய்வேனை விடேல்; உடையாய், உன்னைப் பாடுவனே.

[44]
பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.

[45]
உழைதரு நோக்கியர் கொங்கை, பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்,
விழைதருவேனை விடுதி கண்டாய்? விடின், வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய் மதியன்
பழைதரு மா பரன்' என்று என்று அறைவன், பழிப்பினையே.

[46]
பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு எய்தி, விழ, பழித்து,
விழித்திருந்தேனை விடுதி கண்டாய்? வெண் மணிப் பணிலம்
கொழித்து, மந்தாரம் மந்தாகினி நுந்தும், பந்தப் பெருமை
தழிச் சிறை நீரில், பிறைக் கலம் சேர்தரு தாரவனே.

[47]
தாரகை போலும் தலைத் தலை மாலை, தழல் அரப் பூண்
வீர, என் தன்னை விடுதி கண்டாய்? விடின், என்னை மிக்கார்
ஆர் அடியான்' என்னின், உத்தரகோசமங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான்' என்று, நின்னைச் சிரிப்பிப்பனே.

[48]
சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பை; தொழும்பையும் ஈசற்கு' என்று
விரிப்பிப்பன்; என்னை விடுதி கண்டாய்? விடின், வெம் கரியின்
உரிப் பிச்சன், தோல் உடைப் பிச்சன், நஞ்சு ஊண் பிச்சன், ஊர்ச் சுடுகாட்டு
எரிப் பிச்சன், என்னையும் ஆளுடைப் பிச்சன்' என்று ஏசுவனே.

[49]
ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்? செம் பவள வெற்பின்
தேசு உடையாய்; என்னை ஆளுடையாய்; சிற்றுயிர்க்கு இரங்கி,
காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ணக் கடையவனே.
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[50]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.114   திருஉந்தியார் - வளைந்தது வில்லு  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலித்தாழிசை
ஞான வெற்றி ; உந்தி விளையாட்டின் வழியாக ஞான வெற்றியைப் பாடி, இறைவனை மகிழ்விக்கும் ஆனந்தப் பக்திப் பதிகம்.
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

[1]
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

[2]
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

[3]
உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கன் என்று உந்தீபற.

[4]
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக்கு உந்தீபற.

[5]
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென்றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

[6]
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

[7]
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி உந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

[8]
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.

[9]
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

[10]
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

[11]
உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.

[12]
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

[13]
நான்மறை யோனுமகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

[14]
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

[15]
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

[16]
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

[17]
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

[18]
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற.

[19]
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.124   அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலவைப்பாட்டு
பக்குவ நிண்ணயம் ; ஆசை–தீவினைகள் நீங்காத வரை துன்பம் நீங்காது என்பதை உணர்ந்து, அகங்காரத்தை ஒழித்து, இறைவனிடம் முழுமையாக அடைக்கலம் புகும் ஆன்மீகப் பக்குவப் பதிகம்.
செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.

[1]
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால்
பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச்
செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர்
அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[2]
பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத்
தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற
அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[3]
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[4]
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு,
இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான்,
அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[5]
மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[6]
மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு,
புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி,
என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும்
அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[7]
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம்.
ஆ! கெடுவேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[8]
பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ்,
மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பது ஓர்
நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும்
அறிவு அறியேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[9]
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு,
விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்;
தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக் கொள்ளாய்;
அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.136   திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கட்டளைக்கலித்துறை
சிவானந்த விளைவு ; பாண்டிய மன்னனாகத் தோன்றி அருளிய சிவனின் காட்சி மூலம் அறிவு பெருகி, அறியாமை நீங்கி, மறுபிறப்பு அழியும் சிவானந்த விளைவைச் சொல்வது.
பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம்
ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி,
தெரிவர நின்று, உருக்கி, பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி, உருவு அறியாது என் தன் உள்ளம் அதே.

[1]
சதிரை மறந்து, அறி மால் கொள்வர் சார்ந்தவர்; சாற்றிச் சொன்னோம்;
கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்து,
குதிரையின் மேல் வந்து கூடிடுமேல், குடி கேடு கண்டீர்!
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே.

[2]
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்;
பார் இன்ப வெள்ளம் கொள, பரி மேற்கொண்ட பாண்டியனார்,
ஓர் இன்ப வெள்ளத்து உருக் கொண்டு, தொண்டரை உள்ளம் கொண்டார்;
பேர் இன்ப வெள்ளத்துள், பெய் கழலே சென்று பேணுமினே.

[3]
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன், நல் நாட்டு
இறைவன், கிளர்கின்ற காலம் இக் காலம், எக் காலத்துள்ளும்;
அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி,
எறியும் பிறப்பை, எதிர்ந்தார் புரள, இரு நிலத்தே.

[4]
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய
ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய
ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான்: வந்து, முந்துமினே.

[5]
ஈண்டிய மாய இருள் கெட, எப் பொருளும் விளங்க,
தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்;
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்;
பாண்டியனார் அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே.

[6]
மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும்,
போய் அறும், இப் பிறப்பு என்னும் பகைகள்: புகுந்தவருக்கு,
ஆய, அரும் பெரும், சீர் உடைத் தன் அருளே அருளும்:
சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.

[7]
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி,
கழிவு இல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றி,
பழ மலம் பற்று அறுத்து, ஆண்டவன், பாண்டிப் பெரும் பதமே,
முழுது உலகும், தருவான், கொடையே; சென்று முந்துமினே.

[8]
விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்க,
பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார்,
புரவியின் மேல் வர, புந்தி கொளப்பட்ட பூம் கொடியார்
மர இயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே.

[9]
கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால்
வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால்
ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே;
தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.139   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொச்சகக்கலிப்பா
சிவானந்த முதிர்வு ; இறைவனைப் பிரிந்து வாடும் உயிரின் புலம்பலாகத் தோன்றினாலும், சிவானந்தம் முதிர்ந்து பேரின்பத்தை அடையும் நிலையை உணர்த்தும் பதிகம். இது அகங்காரத்தை அழித்து சிவனுடன் கலக்க உதவும் பதிகம்.
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே,
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண் நீறு ஆடீ,
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன், நின்
பூம் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே!

[1]
சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ இலைச் சூலப்
படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழ வெள்ளை
விடையானே, விரி பொழில் சூழ் பெருந்துறையாய், அடியேன் நான்,
உடையானே, உனை அல்லாது, உறு துணை மற்று அறியேனே!

[2]
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

[3]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.140   குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொச்சகக்கலிப்பா
அனுபவம் இடையீடுபடாமை; சிவபெருமானின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்து, அந்த சிவானந்த அனுபவம் இடையூறின்றி நிலைத்திருக்க வேண்டும் என வேண்டிப் பாடிய பதிகம்.
ஓடும், கவந்தியுமே, உறவு' என்றிட்டு, உள் கசிந்து;
தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து;
கூடும், உயிரும், குமண்டையிடக் குனித்து; அடியேன்
ஆடும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[1]
துடி ஏர் இடுகு இடைத் தூ மொழியார் தோள் நசையால்
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்,
முடியேன்; பிறவேன்; எனைத் தன தாள் முயங்குவித்த
அடியேன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[2]
என்பு உள் உருக்கி, இரு வினையை ஈடு அழித்து,
துன்பம் களைந்து, துவந்துவங்கள் தூய்மை செய்து,
முன்பு உள்ளவற்றை முழுது அழிய, உள் புகுந்த
அன்பின் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[3]
குறியும், நெறியும், குணமும், இலாக் குழாங்கள் தமைப்
பிறியும் மனத்தார் பிறிவு அரிய பெற்றியனை;
செறியும் கருத்தில் உருத்து, அமுது ஆம் சிவ பதத்தை;
அறியும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[4]
பேரும், குணமும், பிணிப்பு உறும் இப் பிறவி தனைத்
தூரும் பரிசு, துரிசு அறுத்து, தொண்டர் எல்லாம்
சேரும் வகையால், சிவன் கருணைத் தேன் பருகி,
ஆரும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[5]
கொம்பில் அரும்பு ஆய், குவி மலர் ஆய், காய் ஆகி,
வம்பு பழுத்து, உடலம் மாண்டு, இங்ஙன் போகாமே;
நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம், நான் அணுகும்
அம் பொன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[6]
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய,
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப,
கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம்' எனக் களித்து, இங்கு
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[7]
இடக்கும் கரு முருட்டு ஏனப் பின், கானகத்தே,
நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால்,
கடக்கும் திறல் ஐவர் கண்டகர் தம் வல் ஆட்டை
அடக்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[8]
பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க் கிடப்பேற்கு,
கீழ்ச் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு,
தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு, என் புன் தலையால்
ஆட்செய் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[9]
கொம்மை வரி முலைக் கொம்பு அனையாள் கூறனுக்கு,
செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்கு,
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்,
அம்மை குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group