சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை pann தென் நாடு உடைய சிவனே, போற்றி!
8.102   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvasagam2/02 Keerthi thiruagaval.mp3
8.103   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/03 Thiruandapaguthi Thiruvasagam.mp3
8.104   மாணிக்க வாசகர்    திருவாசகம்   போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/04 Potri Thiruagaval Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.102   கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய  
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நிலைமண்டில ஆசிரியப்பா
இறைவனின் புகழை, அருட் செயல்களை விவரிக்கும் தெய்வீக அகவல் பாடல்
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,

[1]
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,
மன்னும் மா மலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்;

[2]
கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்;
பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும்,
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்

[3]
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்;
கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;
மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;

[4]
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்,
அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்;
வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்,
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி,
ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,

[5]
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி,
குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசை,
சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்;
வேலம்புத்தூர் விட்டேறு அருளி,
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்;

[6]
தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்;
மொக்கணி அருளிய முழுத் தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்;
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்

[7]
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்;
ஆண்டுகொண்டு அருள அழகு உறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது,
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப,

[8]
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்;
அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி,
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்;
மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து,
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;

[9]
ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;
உத்தரகோசமங்கையுள் இருந்து,
வித்தக வேடம் காட்டிய இயல்பும்;
பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,

[10]
தூ வண மேனி காட்டிய தொன்மையும்;
வாதவூரினில் வந்து, இனிது அருளி,
பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;

[11]
பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;
தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து,
நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;
விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,

[12]
குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்;
பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும்;
வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,
காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;

[13]
மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;
ஓரியூரில் உகந்து, இனிது அருளி,
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;

[14]
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;
தேன் அமர் சோலைத் திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
இடைமருது அதனில் ஈண்ட இருந்து,

[15]
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;

[16]
சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,
பாவகம் பல பல காட்டிய பரிசும்;
கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;
ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;

[17]
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்;
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்;
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;
புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;

[18]
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;
அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,
இந்திர ஞாலம் போல வந்தருளி,
எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,

[19]
தானே ஆகிய தயாபரன், எம் இறை,
சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,
அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;
மந்திர மா மலை மகேந்திர வெற்பன்,

[20]
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,
எம்தமை ஆண்ட பரிசுஅது பகரின்
ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,
நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;
ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்

[21]
ஆனந்தம்மே, ஆறா அருளியும்;
மாதில் கூறு உடை மாப் பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்;
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்;

[22]
மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,
தூய மேனி, சுடர்விடு சோதி
காதலன் ஆகி, கழுநீர் மாலை
ஏல் உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்

[23]
பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்;
மீண்டு வாரா வழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம் பதி ஆகவும்,
பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்,

[24]
ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,
இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,
எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

[25]
அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி;
நாயினேனை நலம் மலி தில்லையுள்,
கோலம் ஆர்தரு பொதுவினில், வருக' என,
ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி;
அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்

[26]
ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்;
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,
மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்,
பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்,
கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,

[27]
நாத! நாத!' என்று அழுது அரற்றி,
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்

[28]
பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்
கனிதரு செவ் வாய் உமையொடு, காளிக்கு,
அருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகை,
இறைவன், ஈண்டிய அடியவரோடும்,
பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன்
ஒலிதரு கைலை உயர் கிழவோனே. (145)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[29]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.103   திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்  
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இணைக்குறள் ஆசிரியப்பா
சிவனது தூல சூக்குமத்தை வியந்தது; பிரபஞ்சம் முழுவதையும் ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற செயல்பாடுகளைச் செய்யும் சிவபெருமானின் ஆற்றலை வியந்து பாடும் பாடல்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய,

[1]
சிறிய ஆகப் பெரியோன். தெரியின்
வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,
தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய
மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்,
சூக்கமொடு, தூலத்து, சூறை மாருதத்து

[2]
எறியது வளியின் 2x
கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை
கரப்போன்; கரப்பவை கருதாக்

[3]
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்
வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு

[4]
மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட

[5]
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
முன்னோன் காண்க! முழுதோன் காண்க!
தன் நேர் இல்லோன் தானே காண்க!

[6]
ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
கானப் புலி உரி அரையோன் காண்க!
நீற்றோன் காண்க! நினைதொறும், நினைதொறும்,
ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!
இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க!

[7]
அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
பரமன் காண்க! பழையோன் காண்க!
பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
அற்புதன் காண்க! அநேகன் காண்க!
சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!

[8]
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!
ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!
அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!

[9]
இணைப்பு அரும் பெருமை ஈசன் காண்க!
அரியதில் அரிய அரியோன் காண்க!
மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க!
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!
மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!

[10]
அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
பந்தமும், வீடும், படைப்போன் காண்க!
நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!
கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!
யாவரும் பெற உறும் ஈசன் காண்க!

[11]
தேவரும் அறியாச் சிவனே காண்க!
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!
கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!
கருணையின் பெருமை கண்டேன் காண்க!

[12]
புவனியில் சேவடி தீண்டினன் காண்க!
சிவன் என யானும் தேறினன் காண்க!
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!
குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளும், தானும், உடனே காண்க!

[13]
பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே
கரு மா முகிலின் தோன்றி,
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,

[14]
வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,
நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,
எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,
முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,
பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,

[15]
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள,
செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி,
இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை,
நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம்

[16]
தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும்,
அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன;
ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து,
சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,

[17]
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து
உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்
சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்
வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்

[18]
மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின்
மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி,
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு,
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!

[19]
கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!
அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!
சூழ் இரும் துன்பம் துடைப்போன், வாழ்க!

[20]
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!

[21]
நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!
பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசை
நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்,
நிற்பன நிறீஇச்

[22]
சொல் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்

[23]
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!

[24]
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:
மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,

[25]
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்;
மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;

[26]
இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு,
அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;
முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,
ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,
வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,

[27]
ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;
பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,

[28]
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;
ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
தாள் தளை இடுமின்!
சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!
பற்றுமின்!' என்றவர் பற்று முற்று ஒளித்தும்;

[29]
தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,
அறை கூவி, ஆட்கொண்டருளி,
மறையோர் கோலம் காட்டி அருளலும்;
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,

[30]
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,
தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,
பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,
நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,
கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்

[31]
ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு
கோல் தேன் கொண்டு செய்தனன்;
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்தாங்கு, அன்று,
அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்

[32]
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:
சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?
தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது
தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு

[33]
அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;
விழுங்கியும் ஒல்லகில்லேன்:
செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,
உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,
வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,

[34]
தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை
குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே
குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்,
எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது

[35]
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்
கருணை வான்தேன் கலக்க

[36]
அருளொது பரவமு தாக்கினன்
பிரமன்மால் அரியாப் பெற்றியோனே. (182)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[37]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.104   போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா  
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நிலைமண்டில ஆசிரியப்பா
சகத்தின் உருவாக்கம்; உயிர் பிறந்து, வளர்ந்து, பக்தனாகி இறைவனைப் போற்றும் பாடல்
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நால்திசைமுனிவரும் ஐமுலன் மலரப்
போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று)
அடி முடி அரியும் ஆதர வதனிற்

[1]
கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து)
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து)
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள்,
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,

[2]
யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;

[3]
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;

[4]
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;

[5]
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்

[6]
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

[7]
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

[8]
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்;
தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,
முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;

[9]
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி,
நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்;
சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்
விரதமே பரம் ஆக, வேதியரும்,

[10]
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;
சமய வாதிகள் தம் தம் மதங்களே
அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்;
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,

[11]
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா பேதத்த கடு விடம் எய்தி,
அதில் பெரு மாயை எனைப் பல சூழவும்,
தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,

[12]
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,

[13]
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,

[14]
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,

[15]
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,

[16]
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,

[17]
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!
மெய் தரு வேதியன் ஆகி, வினை கெட,
கைதர வல்ல கடவுள், போற்றி!
ஆடக மதுரை அரசே, போற்றி!

[18]
கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!

[19]
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!

[20]
இடரைக் களையும் எந்தாய், போற்றி!
ஈச, போற்றி! இறைவ, போற்றி!
தேசப் பளிங்கின் திரளே, போற்றி!
அரைசே, போற்றி! அமுதே, போற்றி!
விரை சேர் சரண விகிர்தா, போற்றி!

[21]
வேதி, போற்றி! விமலா, போற்றி!
ஆதி, போற்றி! அறிவே, போற்றி!
கதியே, போற்றி! கனியே, போற்றி!
நதி சேர் செம் சடை நம்பா, போற்றி!
உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!

[22]
கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
ஐயா, போற்றி! அணுவே, போற்றி!
சைவா, போற்றி! தலைவா, போற்றி!
குறியே, போற்றி! குணமே, போற்றி!
நெறியே, போற்றி! நினைவே, போற்றி!

[23]
வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!
மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே, போற்றி!
தோழா, போற்றி! துணைவா, போற்றி!

[24]
வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி!
முத்தா போற்றி! முதல்வா, போற்றி!
அத்தா, போற்றி! அரனே, போற்றி!
உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!
விரி கடல் உலகின் விளைவே, போற்றி!

[25]
அருமையில் எளிய அழகே, போற்றி!
கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி!

[26]
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!

[27]
வானகத்து அமரர் தாயே, போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!

[28]
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!
கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!
இடைமருது உறையும் எந்தாய், போற்றி!

[29]
சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!

[30]
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!
மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!

[31]
குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!
கோகழி மேவிய கோவே, போற்றி!
ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!
பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!
கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!

[32]
அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு,
அத்திக்கு, அருளிய அரசே, போற்றி!
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

[33]
ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!
மானக் கயிலை மலையாய், போற்றி!
அருளிட வேண்டும் அம்மான், போற்றி!
இருள் கெட அருளும் இறைவா, போற்றி!
தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி!

[34]
களம் கொளக் கருத அருளாய், போற்றி!
அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!
நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி!
அத்தா, போற்றி! ஐயா, போற்றி!
நித்தா, போற்றி! நிமலா, போற்றி!

[35]
பத்தா, போற்றி! பவனே, போற்றி!
பெரியாய், போற்றி! பிரானே, போற்றி!
அரியாய், போற்றி! அமலா, போற்றி!
மறையோர் கோல நெறியே, போற்றி!
முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி!

[36]
உறவே, போற்றி! உயிரே, போற்றி!
சிறவே, போற்றி! சிவமே, போற்றி!
மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!
பஞ்சு ஏர் அடியாள் பங்கா, போற்றி!
அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி!

[37]
இலங்கு சுடர் எம் ஈசா, போற்றி!
கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!
குவைப்பதி மலைந்த கோவே, போற்றி!
மலை நாடு உடைய மன்னே, போற்றி!
கலை ஆர் அரிகேசரியாய், போற்றி!

[38]
திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி!
பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!
அருவமும், உருவமும், ஆனாய், போற்றி!
மருவிய கருணை மலையே, போற்றி!
துரியமும் இறந்த சுடரே, போற்றி!

[39]
தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி
தோளா முத்தச் சுடரே, போற்றி!
ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!
ஆரா அமுதே, அருளே, போற்றி!
பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!

[40]
தாளி அறுகின் தாராய், போற்றி!
நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!
மந்திர மா மலை மேயாய், போற்றி!

[41]
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!

[42]
படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!

[43]
செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி!

[44]
புரம் பல எரித்த புராண, போற்றி!
பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண!
போற்றி! போற்றி! சய, சய, போற்றி! (225)

[45]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000