![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| திருமுறை thalam திருப்பாசூர் |
|
2.060
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சிந்தை இடையார், தலையின் மிசையார், பண் - காந்தாரம் (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lK4XZljS70A Audio: https://www.youtube.com/watch?v=t9JFCSZSqkU |
|
5.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தி மூ எயில் எய்த பண் - திருக்குறுந்தொகை (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=kgw4ODPWiXA |
|
6.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
விண் ஆகி, நிலன் ஆகி, பண் - திருத்தாண்டகம் (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=27tcQZPa5i4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.060  
சிந்தை இடையார், தலையின் மிசையார்,
பண் - காந்தாரம் (திருத்தலம் திருப்பாசூர் ; (திருத்தலம் அருள்தரு பசுபதிநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசூர்நாதர் திருவடிகள் போற்றி )
|
சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார், வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார், மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும் பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே. | [1] |
|
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், பெம்மான் என்று ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார், ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும் பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே. | [2] |
|
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண் மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும் பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே. | [3] |
|
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த, கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார், தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும் பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே. | [4] |
|
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும் சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார், வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும் பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே. | [5] |
|
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக, தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத் தொழுவார்கள் மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும் பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே. | [6] |
|
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார், உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும் பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே. | [7] |
|
தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக் கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும் பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே. | [8] |
|
நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்து அணையானும், புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்; செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர்போலும் பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே. | [9] |
|
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார், நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்; காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும் பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே. | [10] |
|
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன் தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க் கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார், ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.025  
முந்தி மூ எயில் எய்த
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்பாசூர் ; (திருத்தலம் அருள்தரு பசுபதிநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசூர்நாதர் திருவடிகள் போற்றி )
|
முந்தி மூ எயில் எய்த முதல்வனார், சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார், அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்- பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே. | [1] |
|
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார், தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார், கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர், படர்ந்த நாகத்தர்-பாசூர் அடிகளே. | [2] |
|
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகனார், காறு கண்டத்தர், கையது ஓர் சூலத்தர், பாறின் ஓட்டினர்-பாசூர் அடிகளே. | [3] |
|
வெற்றியூர் உறை வேதியர் ஆவர், நல் ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார், நெற்றிக்கண்ணினர், நீள் அரவம் தனைப் பற்றி ஆட்டுவர்-பாசூர் அடிகளே. | [4] |
|
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணிபால் இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்,- துட்டரேல், அறியேன், இவர் சூழ்ச்சிமை;- பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே. | [5] |
|
பல் இல் ஓடு கை ஏந்திப் பகல் எலாம் எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்,- சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன்; சொல்லீர்! பல்கும் நீற்றினர்-பாசூர் அடிகளே. | [6] |
|
கட்டிவிட்ட சடையர், கபாலியர்,- எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ் அவர் இட்டமா அறியேன், இவர் செய்வன- பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே. | [7] |
|
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர், காதில் வெண் குழை வைத்த கபாலியார், நீதி ஒன்று அறியார், நிறை கொண்டனர்- பாதி வெண் பிறைப் பாசூர் அடிகளே. | [8] |
|
சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர், ஓம்பல் மூதெருது ஏறும் ஒருவனார், தேம்பல் வெண்மதி சூடுவர், தீயது ஓர் பாம்பும் ஆட்டுவர்-பாசூர் அடிகளே. | [9] |
|
மாலினோடு மறையவன் தானும் ஆய், மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்; ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப் பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே. | [10] |
|
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால் எரிய எய்தனரேனும், இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார், விரல் ஒன்றினால்; பரியர்; நுண்ணியர்-பாசூர் அடிகளே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.083  
விண் ஆகி, நிலன் ஆகி,
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்பாசூர் ; (திருத்தலம் அருள்தரு பசுபதிநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசூர்நாதர் திருவடிகள் போற்றி )
|
விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி, வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற எண் ஆகி, எழுத்து ஆகி, இயல்பும் ஆகி, ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி, காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற பண் ஆகி, இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [1] |
|
வேதம் ஓர் நான்கு ஆய், ஆறு அங்கம் ஆகி, விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி, கூதல் ஆய், பொழிகின்ற மாரி ஆகி, குவலயங்கள் முழுதும் ஆய், கொண்டல் ஆகி, காதலால் வானவர்கள், போற்றி! என்று கடிமலர்கள் அவை தூவி ஏத்த நின்ற பாதி ஓர் மாதினனை; பாசூர் மேய பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [2] |
|
தடவரைகள் ஏழும் ஆய், காற்றும் ஆய், தீ ஆய், தண் விசும்பு ஆய், தண் விசும்பின் உச்சி ஆகி, கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி, காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி, குடமுழவச் சதிவழியே அனல் கை ஏந்திக் கூத்து ஆட வல்ல குழகன் ஆகி, பட அரவு ஒன்று அது ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [3] |
|
நீர் ஆரும் செஞ்சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி, நீதியாலே சீர் ஆரும் மறை ஓதி, உலகம் உய்யச் செழுங் கடலைக் கடைந்த கடல் நஞ்சம் உண்ட கார் ஆரும் கண்டனை; கச்சி மேய கண்ணுதலை; கடல் ஒற்றி கருதினானை; பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [4] |
|
வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான், வில் பிடித்து, கொம்பு உடைய ஏனத்தின் பின், கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள, கொலைப் பகழி உடன் கோத்து கோரப் பூசல்; ஆடினார், பெருங்கூத்துக் காளி காண; அருமறையோடு ஆறு அங்கம் ஆய்ந்து கொண்டு, பாடினார், நால்வேதம்; பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [5] |
|
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொதுப் பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த சித்தியினால், அரசு ஆண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப் பெய்தார்; திறலால் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு, அதற்கு வீடு காட்டி, பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [6] |
|
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார்; இடை மருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்; அணைவு அரியர், யாவர்க்கும்; ஆதிதேவர்; அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர்; தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனித் தத்துவனை, சாந்து அகிலின் அளறு தோய்ந்த பணை முலையாள் பாகனை, எம் பாசூர் மேய பரஞ்சுடரை, கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [7] |
|
அண்டவர்கள் கடல் கடைய, அதனுள்-தோன்றி, அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் எண்திசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு, இமைப்பு அளவில் உண்டு இருண்ட கண்டர்; தொண்டர் வண்டு படு மதுமலர்கள் தூவி நின்று, வானவர்கள் தானவர்கள் வணங்கி, ஏத்தும் பண்டரங்க வேடனை; எம் பாசூர் மேய பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [8] |
|
ஞாலத்தை உண்ட திருமாலும், மற்றை நான்முகனும், அறியாத நெறியார்; கையில் சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்து, தொல் உலகில் பல் உயிரைக் கொல்லும் கூற்றைக் கால(த்)த்தால் உதைசெய்து, காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்; பால் ஒத்த வெண்நீற்றர்; பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [9] |
|
வேந்தன், நெடு முடி உடைய அரக்கர் கோமான், மெல்லியலாள் உமை வெருவ, விரைந்திட்டு, ஓடி, சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளால் எடுத்திடலும், தாளால் ஊன்றி ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து, அவன் தன் இசை கேட்டு, இரக்கம் கொண்ட, பாந்தள் அணி சடைமுடி, எம் பாசூர் மேய, பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!. | [10] |