எழுந்திரைமா கடலாடை
இருநிலமாம் மகள்மார்பில்
அழுந்துபட எழுதும்இலைத்
தொழில்தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடைமறைந்த
பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு
குயில்நாடுங் கோனாடு.
|
1
|
மேன்மேல் எழுந்து வரும் அலைகளையுடைய பெருங்கடலை ஆடையாக உடைய பெரிய நிலமகளின் மார்பில் அழுந்துமாறு எழுதும் இலைகள் போல் ஒப்பனை செய்யப்பட்ட தொய்யிலாயுள்ளது, செழுமையான தளிர்களின் கீழ் மறைந்திருக்கும் பெடை மகிழுமாறு தேமாவின் தளிர்களைக் கோதியபடி குயில்கள் பயில்கின்ற கோனாடு என்பதாகும். *** நில மகளின் தொய்யிலாக அமையும் சிறப்புடையது கோனாடு ஆகும். தொய்யில் - நறுமணம் குழைத்த சந்தனக் குழம்பி னால் பெண்களின் மார்பகத்தில் , இலை, மலர் போன்ற வடிவங்களாக எழுதுவது. கோனாடு என்பது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத் தின் ஒரு பகுதியாகும். | |
முருகுறுசெங் கமலமது
மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண் திரைவாவிப்
பயில்பெடையோடு இரையருந்தி
வருகுறுதண்து ளிவாடை
மறையமா தவிச்சூழல்
குருகுறங்குங் கோனாட்டுக்
கொடிநகரங் கொடும்பாளூர்.
|
2
|
மணம் கமழும் செந்தாமரை மலரில் உள்ள தேனை மொய்த்து நிற்கும் வண்டுகள், அதன்கண் உள்ள தேனைப் பருகு வதற்கு இடமான தெளிந்த அலைகளையுடைய குளத்தில், பொருந்திய பெண் பறவைகளுடன் இரையை அருந்தி, மோதி வரும் குளிர்ந்த வாடைக்கு ஆற்றாது மறைந்து வாழுதற்கு ஏற்ற குருக்கத்திச் சோலை யில் அக்குருகுப் பறவைகள் உறங்குகின்ற கோனாட்டின் தலைநகரம், கொடும்பாளூர் என்பதாகும். *** கொடும்பாளூர் - இது கோனாட்டின் தலைநகராகும். புதுக்கோட்டைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது. கொடி நகரம் - தலைநகரம். | |
அந் நகரத் தினில்இருக்கு
வேளிர்குலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து
மணிமுகட்டில் பாக்கொங்கில்
பன்னுதுலைப் பசும்பொன்னால்
பயில்பிழம்பாம் மிசையணிந்த
பொன்னெடுந்தோள் ஆதித்தன்
புகழ்மரபிற் குடிமுதலோர்.
|
3
|
அக்கொடும்பாளூர் நகரத்தில், இருக்குவேளிர் குலத்தில் தோன்றி ஆட்சி செய்து, நிலை பெற்ற பொன்னம்பலத்தின் அழகிய உச்சியில், பொன்னிலமாய கொங்கு நாட்டின் புகழ் பெற்ற தும், எடைமிக்கதும், தூயதுமான பசும் பொன்னினால் விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து, பொன்னணிகள் அணிந்த தோளை உடைய ஆதித்த சோழனின் புகழ் தங்கிய மரபின் குடி முதல்வராய், *** பா கொங்கின் - பொன் மணல் பரவப் பெற்ற கொங்கு நாடு. பா - பரவப் பெற்ற. கொங்கு நாட்டின் மண்பகுதி பொன் மணல் துகள்கள் மிக்கு இருப்பது ஆதலின் 'பாக் கொங்கின்' என்றார். துலைப் பசும்பொன் - எடை மிக்க அழகிய பொன். இருக்கு வேளிர் குலத்தவர், பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்த ஆதித்த சோழரின் குடி முன்னோர் மரபில் தோன்றியவர் இடங்கழியார் என்பார். | |
இடங்கழியார் எனவுலகில்
ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார்
அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும்
உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்தபெருங் காதலினால்
தொண்டர்வேண் டியசெய்வார்.
|
4
|
'இடங்கழியார்' என்று அழைக்கப் பெற்று வந்த இந்நில உலகில் புகழ் பெற்ற பெரிய பெயரை உடையவர்; பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருவடிக்குத் தொண்டு செய்யும் நெறியையே அன்றி, ஏனைய குற்றம் பொருந்திய அயல் நெறிகளைக் கனவிலும் நினையாதவர்; எக்காலத்திலும் தொடர்ந்து, பெருகிய காதலால், தொண்டர்கட்கு வேண்டிய பணிகளைத் தாம் செய்து வருவாராய், *** இடம் கழியார் - இப்பெயர் இயற்பெயரோ அன்றி காரணப் பெயரோ அறியோம். இடம் - உயிர்க்குப் புகலிடமாகக் கொள்ளத் தக்க இடம்; அது இறைவனின் திருவடியே ஆகும். தம் நெஞ்சை அவ்விடத்தேயே பதித்து அதனின்றும் கழியாது (விலகாது) இருத்தலின் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இங்ஙனம் கருதின் இது காரணப் பெயராகும். 'சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும்' எனவரும் திருவாக்கும் காண்க. முடங்கு நெறி - வளைவான நெறி. அஃதாவது குற்றம் உடைய நெறி; பிற சமய நெறிகள். | |
சைவநெறி வைதிகத்தின்
தருமநெறி யொடுந்தழைப்ப
மைவளருந் திருமிடற்றார்
மன்னியகோ யில்களெங்கும்
மெய்வழிபாட்டு அர்ச்சனைகள்
விதிவழிமேன் மேல்விளங்க
மொய்வளர்வண் புகழ்பெருக
முறைபுரியும் அந்நாளில்.
|
5
|
சைவ நெறியானது வைதிக நெறியுடன் தழைக்கவும், நஞ்சுண்ட திருமிடற்றையுடைய இறைவர் எழுந்தருளியிருக்கும் திருக் கோயில்கள் எங்கும் நிகழத்தக்க உண்மை வழிபாடான அருச்சனை கள் சிவாகம விதிவழியே மேன்மேலும் பெருகவும், செழித்து வளர்கின்ற வளமை பொருந்திய புகழ் பெருகவும், அரசு செலுத்தி வரும் நாள்களில், *** சைவநெறி வீடு பேற்றிற்கு உதவுவது. வைதிக நெறி இம்மை மறுமைகட்கு உதவுவது. இவ்விரு நெறிகளும் தழைக்க அரசு செய்தவர் இடங்கழியார் ஆவர். 'வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க' என்றார் முன்னும் (தி. 12 பு. 28 பா. 1). எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மையா வது பூசனையேயாம். ஆதலின், திருக்கோயில்களில் அப்பூசனை வழுவாது நடக்கத் தம் ஆட்சியை முறையாகச் செய்துவந்தார். | |
Go to top |
சங்கரன்தன்அடி யாருக்கு
அமுதளிக்கும் தவமுடையார்
அங்கொருவர் அடியவருக்கு
அமுதொருநாள் ஆக்கவுடன்
எங்குமொரு செயல்காணாது
எய்தியசெய் தொழின்முட்டப்
பொங்கியெழும் பெருவிருப்பாற்
|
6
|
அதுபோது, சிவபெருமானின் அடியவர்க்கு அமுது அளித்து வரும் தவமுடையார் ஒருவர், ஒருநாள் அடியவருக்குத் திருவமுது ஆக்குதற்குரிய பண்டங்கள் பெற, எங்கும் யாதொரு செயலும் காணாமையால், தாம் செய்து வரும் தொழில் தடைப்பட, மேன்மேலும் பொங்கி எழும் மிக்க விருப்பத்தினால், தாம் செய்யத் தகும் செயல் தெரியாமல், குறிப்புரை: | |
அரசரவர் பண்டாரத்
தந்நாட்டின் நெற்கூட்டில்
நிரைசெறிந்த புரிபலவா
நிலைக்கொட்ட காரத்தில்
புரைசெறிநள் ளிருளின்கண்
புக்குமுகந்து எடுப்பவரை
முரசெறிகா வலர்கண்டு
பிடித்தரசன் முன்கொணர்ந்தார்.
|
7
|
அரசராய இடங்கழியாரின் களஞ்சியத்தில், அந் நாட்டின் நெற்கூடுகள் ஏனைய பண்டங்கள் பலவும் நிறைந்து இருப் பதும், மதில்காவல் பலவும் அமைந்திருப்பதுமாய பெருவீட்டில், எங்கும் இருள் நிறைந்திருக்கும் நள்ளிரவில் புகுந்து, நெல்லை முகந்து எடுக்க, அவரை, இரவு முழுதும் காவல் முரசினை அறைந்து பாது காத்து வரும் காவலர்கள் பிடித்து, அரசர்முன் கொண்டு நிறுத்தினர். *** அரசராய இடங்கழியாரின் களஞ்சியத்தில், அந் நாட்டின் நெற்கூடுகள் ஏனைய பண்டங்கள் பலவும் நிறைந்து இருப் பதும், மதில்காவல் பலவும் அமைந்திருப்பதுமாய பெருவீட்டில், எங்கும் இருள் நிறைந்திருக்கும் நள்ளிரவில் புகுந்து, நெல்லை முகந்து எடுக்க, அவரை, இரவு முழுதும் காவல் முரசினை அறைந்து பாது காத்து வரும் காவலர்கள் பிடித்து, அரசர்முன் கொண்டு நிறுத்தினர். | |
மெய்த்தவரைக் கண்டிருக்கும்
வேல்மன்னர் வினவுதலும்
அத்தன்அடி யாரையான்
அமுதுசெய்விப் பதுமுட்ட
இத்தகைமை செய்தேனென்று
இயம்புதலு மிகவிரங்கிப்
பத்தரைவிட்டு இவரன்றோ
பண்டாரம் எனக்கென்பார்.
|
8
|
காவலர் பிடித்து வந்த அந்த அடியவரைக் கொலு வீற்றிருக்கும் வேல் ஏந்திய மன்னர் கண்டு வினவவும், 'சிவனடியார்க ளுக்கு யான் அமுது செய்வித்துவரும் தொழில் முட்டுப் பட்டதால் இவ்வாறு செய்தேன்' என்ற உண்மையை அவர் உரைக்க, அது கேட்ட அரசர் மிகவும் இரங்கி, அவரைக் காவலினின்றும் விடுவித்து, 'இவரன்றோ எனக்கு வைப்பு நிதி யாவர்' என்று உரைத்து, *** பண்டாரம் - நெல் முதலிய பொருள்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு மிக்க இடம். | |
நிறையழிந்த வுள்ளத்தால்
நெற்பண்டா ரமும்அன்றிக்
குறைவில்நிதிப் பண்டார
மானவெலாங் கொள்ளைமுகந்
திறைவனடி யார்கவர்ந்து
கொள்கவென எம்மருங்கும்
பறையறையப் பண்ணுவித்தார்
படைத்தநிதிப் பயன்கொள்வார்.
|
9
|
நிலையழிந்த உள்ளத்தால், நெற்களஞ்சியம் மட்டுமே அல்லாமல், குறைவில்லாத செல்வங்களின் வைப்பாகவுள்ள எல்லா விடங்களிலும் உள்ள பொருள்களையும் திரளாக முகந்து, இறைவன் அடியார்கள் கவர்ந்து கொள்க எனத் தாம் பெற்ற நிதியின் பயனைக் கொள்பவரான இடங்கழியார், எல்லாப் பக்கங்களிலும் பறையறையுமாறு செய்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. | |
எண்ணில்பெரும் பண்டாரம்
ஈசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால்
உறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியால் நெடுங்காலந்
திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில்அருள் புரிந்திறைவர்
மலரடியின் நிழல்சேர்ந்தார்.
|
10
|
அளவில்லாத பெரிய வைப்பு நிதிகளை எல்லாம் இறைவனின் அடியார்கள் எடுத்துக் கொள்ளுமாறு, உள்ளத்தின் உள்ளே நிறைந்த அன்பினால், தாம் தாமும் தமக்கு வேண்டிய பொருளை வேண்டியாங்கு எடுத்துக் கொள்ளுமாறு செய்வித்துக் (கொள்ளை கொள்ளுமாறு செய்து) குளிர்ந்த கருணையினால் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழையுமாறு உலகில் ஆட்சி புரிந்து, சிவபெருமானின் திருவடி நீழலை அடைந்தார். குறிப்புரை: | |
Go to top |
மைதழையும் மணிமிடற்றார்
வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்துபெருஞ் சிறப்புடைய
இடங்கழியார் கழல்வணங்கி
மெய்தருவார் நெறியன்றி
வேறொன்றும் மேலறியாச்
செய்தவராம் செருத்துணையார்
திருத்தொண்டின் செயல் மொழிவாம்.
|
11
|
நஞ்சு பொருந்திய அழகிய கழுத்தையுடைய சிவபெருமானுக்கு வழிவழியாகச் செய்து வரும் வழிபாட்டுத் தொண்டில் பொருந்திய பெருஞ்சிறப்பையுடைய இடங்கழி நாயனா ரின் திருவடிகளை வணங்கி, மெய்ஞ்ஞானத்தை வழங்குபவரான சிவபெருமானின் நெறியையன்றிப் பிறிதொன்றையும் மேலானது என அறியாத செருத்துணையாரின் செயலைச் சொல்வாம். இடங்கழி நாயனார் புராணம் முற்றிற்று. *** | |