பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத் துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்
கில்லையென் னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.
|
1
|
தூமலர்ச் சோலை தோறும்
சுடர்நெடு மாடந் தோறும்
மாமழை முழக்கந் தாழ
மறையொலி முழக்கம் ஓங்கும்
பூமலி மறுகில் இட்ட
புகையகில் தூபந் தாழ
ஓமநல் வேள்விச் சாலை
ஆகுதித் தூப மோங்கும்.
|
2
|
ஆலை சூழ் பூகவேலி
அத்திரு வாக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார்
நான்மறைக் குலத்தி னுள்ளார்
நீலமார் கண்டத் தெண்டோள்
நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத்
திறத்தினிற் சிறந்த நீரார்.
|
3
|
ஆளும்அங் கணருக் கன்பர்
அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
முன்புநின் றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
நயந்தன வெல்லாம் நல்கி
நீளும்இன் பத்துள் தங்கி
நிதிமழை மாரி போன்றார்.
|
4
|
அஞ்செழுத் தோதி அங்கி
வேட்டுநல் வேள்வியெல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம்
நண்ணிடச் செய்து ஞாலத்
தெஞ்சலில் அடியார்க் கென்றும்
இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர்
தாள்நிழல் தங்கி னாரே.
|
5
|
| Go to top |
அறத்தினின் மிக்க மேன்மை
அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப்பெரு வள்ள லார்வண்
சிறப்புலி யார்தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச்செங் காட்டங்
குடியினிற் செம்மை வாய்த்த
விறற்சிறுத் தொண்டர் செய்த
திருத்தொழில் விளம்பல் உற்றேன்.
|
6
|