சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.420   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்


Add audio link Add Audio
கோடாத நெறிவிளங்கும்
குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர்
திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில்
சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார்
நரசிங்க முனையரையர்.

1


செங்கோல் செலுத்தும் நீதியினின்றும் தவறாத நெறியில் விளங்கும் குறுநில மன்னர் மரபில் வந்து, ஆண்டு, பெருஞ் செல்வமாகக் கழுத்தில் கருமையுடைய சிவபெருமானின் திருநீற் றையே மனத்தில் கொள்பவர். அவர், எப்பொருள்களையும் தேடிப் பெறவேண்டாது இயல்பாகவே அனைத்துப் பெருவளங்களும் சிறந்த திருமுனைப் பாடி நாட்டைஆளும் மன்னர், 'நரசிங்க முனையரையர்' என்ற பெயர் உடையவர் ஆவர். *** : மாடாக செல்வமாக, தேடாத - எந்த ஒரு பொருளுக்கும் பிற நாட்டை நாட வேண்டாத; நாடா வளத்தது நாடு என்பது கருத்து. இந்நாயனார் சுந்தரரை அவர்தம் இளமைக் காலத்திலேயே மகன்மை கொண்டு வளர்த்து வந்த பெரும்பேறு உடையவர் ஆவர். எனினும் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைப் பற்றிய பாடலில் இக் குறிப்பு இடம் பெற்றிலது. இது கருதியே ஆசிரியர் சேக்கிழார் பெருமா னும், இக்குறிப்பினை இவர் வரலாற்றில் இயையுபடுத்திலர் போலும்! தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரரை மகன்மை கொண்டவர் இவரே ஆவர் என்பது ஆய்தற்குரியது என்று கூறிய சிவக்கவிமணி யார், இவ்வரலாற்றில் நம்பிகளை மகன்மை கொண்டவர் இவர் என்ப தும் கருதப்படும் எனக் கூறுவதே ஐயமின்றிக் கொள்ளத் தக்கதாம்.
இம்முனையர் பெருந்தகையார்
இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து
தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல
முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவர் அடியடைவே
அரும்பெரும்பேறு எனஅடைவார்.

2


இம் முனையர் மரபின் பெருந்தகையாரான நரசிங்க முனையரையர், தம் நகரத்தில் இருந்து அரசளித்துப் பகைவர்களைப் போர்முனையில் வென்று, தீமையான நெறிகளின் செயல்கள் யாவும் நீங்க, மூன்று தலைகளையுடைய நீண்ட இலைவடிவான சூலமான முதன்மை பெற்ற படையையுடைய இறைவரின் தொண்டைச் செய்கின்ற அம்முதல்வர்களாகும் அடியவர்களின் திருவடிகளை அடைவதே தாம் பெறும் பேறு எனக் கருதுவாராய்,
குறிப்புரை:

சினவிடையார் கோயில்தொறும்
திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையார் உயிர்துறக்க
வருமெனினும் அவைகாத்து
மனவிடையா மைத்தொடையல்
அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக்
கடனாற்றிச் செல்கின்றார்.

3


சினம்மிக்க ஆனேற்றையுடைய இறைவரின் கோயில்கள் தோறும், பொருள் வருவாய் பெருகச் செய்யும் நெறியில், அரிய உயிரைவிட வந்தாலும், அந்நெறிகளைத் தவறாது காவல் செய்து, பாசிமணி வடங்களினிடையே ஆமை யோட்டை அணிந்த மார்பை யுடைய இறைவரின் வழித்தொண்டைக் கனவிலும் தவறாது கடமை மேற்கொண்டு செய்து வருபவராய், *** #NAME?
ஆறணிந்த சடைமுடியார்க்
காதிரைநாள் தொறும்என்றும்
வேறுநிறை வழிபாடு
விளங்கியபூ சனைமேவி
நீறணியும் தொண்டர்அணைந்
தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமல்அளித்
தின்னமுதும் நுகர்விப்பார்.

4


கங்கைப் பேரியாற்றைத் தாங்கிய முடியினரான இறைவற்குத் திருவாதிரை நாள்தோறும் சிறப்பாகவும் நிறைவாகவும் வழிபாட்டைச் செய்து, திருநீறு அணிந்த தொண்டராய் அன்று வந்து சேர்ந்தவர்க்கெல்லாம் குறையாமல் நூறு பசும் பொன்னைத் தந்து இனிய திருவமுதும் ஊட்டுவாராகி,
குறிப்புரை:

ஆனசெயல் முறைபுரிவார்
ஒருதிருவா திரைநாளில்
மேன்மைநெறித் தொண்டர்க்கு
விளங்கியபொன் னிடும்பொழுதில்
மானநிலை யழிதன்மை
வருங்காமக் குறிமலர்ந்த
ஊனநிகழ் மேனியராய்
ஒருவர்நீ றணிந்தணைந்தார்.

5


அந்நற்செயலை மேற்கொண்டு முறையாக ஆற்றி வருபவரான நாயனார், திருவாதிரை நாளில் மேன்மை பொருந்திய சைவ நெறியில் சிறந்து ஒழுகும் அடியார்களுக்குப் பொன்னைக் கொடுக்கும் பொழுது, மானநிலை அழியும் தன்மையுடைய காமக் குறிகள் தெரியும் குற்றம் பொருந்திய உடலையுடையவராய ஒருவர் திருநீற்றை அணிந்து வந்து சேர்ந்தார். *** மானநிலை அழிதன்மை வரும் காமக்குறி - பெருமை குன்றுவதற்கு ஏதுவாய சிற்றின்பத்தால் உடலில் காணும் அடையா ளங்கள்; அவை பற்குறி நகக்குறி முதலாயினவும் உடல் நோய் முதலி யனவுமாம். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
Go to top
மற்றவர்தம் வடிவிருந்த
படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி
ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று
கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங்
கொண்டாடிப் பேணுவார்.

6


அவ்வாறு வந்தவரின் உடல்நிலையைப் பார்த்து, அருகில் இருந்தவர்கள் இகழ்ச்சியோடு அவரை அணுகாது அருவ ருத்து ஒதுக்க, அதைக் கண்டு, அரசர் அவர் எதிரே போய்க் கை குவித்து வணங்கி, அழைத்து வந்து, அத்தன்மையுடைய அவரை மிகவும் பாராட்டிப் போற்றி,
குறிப்புரை:

சீலமில ரேயெனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம்இகழ்ந் தருநரகம்
நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த
படியிரட்டிப் பொன்கொடுத்து
மேலவரைத் தொழுதினிய
மொழிவிளம்பி விடைகொடுத்தார்.

7


உலகியல் நிலையில் காணத்தக்க சிறந்த ஒழுக்கம் இல்லாதவரானாலும், திருநீறணிந்த அடியவரை உலகத்தவர் இகழ்ந்து அதனால் கொடிய நரகத்தை அடையாமல் உய்யவேண்டும் எனச் சிந்திப்பவராய், அங்கு வந்தவர்களுக்குக் கொடுத்ததைவிட இரு மடங்காகப் (இருநூறு) பொற்காசுகளைத் தந்து, இன்சொற் கூறி, முகமனுரை பகர்ந்து, விடைதந்து அனுப்பினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
இவ்வகையே திருத்தொண்டின்
அருமைநெறி எந்நாளும்
செவ்வியஅன் பினல்ஆற்றித்
திருந்தியசிந் தையராகிப்
பைவளர்வாள் அரவணிந்தார்
பாதமலர் நிழல்சேர்ந்து
மெய்வகைய வழியன்பின்
மீளாத நிலைபெற்றார்.

8


இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
குறிப்புரை:

விடநாகம் அணிந்தபிரான்
மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகும் நரசிங்க
முனையர்பிரான் கழலேத்தித்
தடநாக மதஞ்சொரியத்
தனஞ்சொரியுங் கலஞ்சேரும்
கடல்நாகை அதிபத்தர்
கடல்நாகைக் கவினுரைப்பாம்.

9


நஞ்சையுடைய பாம்பை அணிந்த சிவபெருமானின் மெய்த்தன்மை பொருந்திய தொண்டு நெறியில் வழுவாது நின்று, அப்பயன் விளைந்த நிலையில் பெருமானின் உடனாக நின்று மகிழும் வாழ்வுடைய நரசிங்கமுனையரையரின் கழல்களை வணங்கிப் பெரிய யானைகள் மதநீரைச் சொரியச் செல்வங்களைப் பொழியும் மரக்கலங்கள் சேரும் கடல்துறைப் பட்டினமான நாகை நகர் வாழ் 'அதிபத்த நாயனாரின்' நியமமான கடமையின் இயல்பைச் சொல்லப் புகுகின்றாம். நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் முற்றிற்று. ***

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D pathigam no 12.420