சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.230   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்


Add audio link Add Audio
சூத நெருங்கு குலைத்தெங்கு
பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி
விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய்
நிலவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்கும் தொன்மையது
மிழலை நாட்டுப் பெருமிழலை.

1


மாவும், நெருங்கிய குலைகளையுடைய தென்னை மரங்களும், பலாவும், பாக்கு மரங்களும், சூழ்ந்த சுற்றுச் சூழலை உடையதாயும். வீதிகள் தோறும் திருநீற்றின் ஒளி மிகப்பொருந்தி விளங்குவதாயும், அறநெறியினின்றும் வழுவாது விளங்கும் குடி மக்கள் தன்பால் நிரம்ப இருப்பதாயும் உள்ள ஊர், மிகப் பழையதான மிழலை நாட்டின்கண் உள்ள பெருமிழலை என்னும் ஊராகும்.
*** பெருமிழலை - புதுக்கோட்டைக்குத் தென்மேற்கே, ஏறத்தாழப் பதினைந்து கிமீ. தொலைவில், பேரையூருக்கு அருகில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளது. சோழ நாட்டில் திருவீழி மிழலை என்ற பதி ஒன்று உள்ளது. அதனின்றும் வேறு பிரித்தறிய, 'மிழலை நாட்டுப் பெருமிழலை' என்றார். சூதம் - மாமரம். குறும்பர் - மரபுப் பெயர். இயற்பெயர் தெரிந்திலது.

அன்ன தொன்மைத் திருப்பதிக்கண்
அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர்தம்
அடியார்க் கான செய்பணிகள்
இன்ன வண்ணம் என்றவர்தாம்
உரையா முன்னம் எதிரேற்று
முன்னம் உவந்து செய்வாராய்
முதிரும் அறிவின் பயன்கொள்வார்.

2


அத்தகைய பழமையாகிய திருநகரத்திற்குக் குறுநில மன்னராக விளங்குபவர் மிழலைக் குறும்பனார் ஆவர். அவர், தலை யில் பிறையைச் சூடிய இறைவனின் அடியவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் இவையிவை இக் காலத்திற்கு வேண்டு மென அவர்தாம் கூறும் முன்னமேயே குறிப்பறிந்து, விருப்புடன் ஏற்றுச் செய்து வருவாராய்த், தம்மிடத்துள்ள முதிர்ந்த அறிவின் பயனை அடைவார்.

குறிப்புரை: 'அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை' (குறள், 315) 'அறிவுடையார் ஆவ தறிவார்' (குறள், 427) என்றெல்லாம் வள்ளுவர் கூறுதற்கிணங்கச் செய் வார் என்பார். 'அறிவின் பயன் கொள்வார்' என்றார். இவ்வரிய பணி களையும் அவ்வவ்வடியவர் தம் குறிப்பறிந்து செய்து வருபவர் என் பார் 'அவர் தாம் உரையா முன்னம் எதிரேற்றுச் செய்வார்' என்றார்.

தொண்டர் பலரும் வந்தீண்டி
உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம்
முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவுங் குழலுமையாள்
கேள்வன் செய்ய தாளென்னும்
புண்ட ரீகம் அகமலரில்
வைத்துப் போற்றும் பொற்பினார்.

3


அடியவர் பலரும் வந்து கூடி உண்ண உண்ணத் தொலையாதவாறு அமுது ஊட்டியும், அவர்கள் தத்தமக்கெனக் கொண்டு செல்லுதற்கு வேண்டிய பெருஞ்செல்வங்களை முகந்து கொடுத்தும், தம்மைச் சிறியராக வைத்து நடந்து கொள்ளுமவர், வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய உமையம்மையாரின் கணவராகிய சிவபெருமானின் சிவந்த திருவடிகளாகிய தாமரை மலர்களை, மனமாகிய மலரில் வைத்துப் போற்றும் பெற்றியார்.

குறிப்புரை: குறைந்து அடைவார் - தாழ்வெனும் தன்மையொடு அடியவரிடத்துப் பணிந்து நடப்பார்.

இத்தன் மையராய் நிகழுநாள்
எல்லை இல்லாத் திருத்தொண்டின்
மெய்த்தன் மையினை உலகறிய
விதியால் வணங்கி மெய்யடியார்
சித்தம் நிலவுந் திருத்தொண்டத்
தொகைபா டியநம் பியைப்பணிந்து
நித்தன் அருள்பெற் றவர்பாதம்
நினைக்கும் நியமத் தலைநின்றார்.

4


இவ்வாறாய தன்மையுடையவராய் வாழ்கின்ற நாள்களில், எல்லையற்ற திருத்தொண்டின் உண்மை நிலையினை உலகர் அறியும் பொருட்டு, அடியவர்தம் திருவுள்ளத்தில் நீங்காது நிலைபெற்று விளங்கும் 'திருத்தொண்டத் தொகை' என்னும் திருப் பதிகத்தினை அருளிய நம்பியாரூரரைப் பணிந்தும் பெருமானின் திருவருளைப் பெற்று நிற்கும் அப்பெருமகனாரின் திருவடிகளை நாளும் நினைந்தும் வரும் கடப்பாடுடையராயினார்.

குறிப்புரை: நித்தன் - என்றும் அழியாத சிவபெருமான்.

மையார் தடங்கண் பரவையார்
மணவா ளன்தன் மலர்க்கழல்கள்
கையால் தொழுது வாய்வாழ்த்தி
மனத்தால் நினைக்குங் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும்
அறியாச் செம்பொன் தாளிணைக்கீழ்
உய்வான் சேர உற்றநெறி
இதுவே என்றன் பினில்உய்த்தார்.

5


கரிய மைபொருந்திய, பெரிய கண்களை உடைய பரவையாரின் கணவராகிய நம்பியாரூரரின் மலரனைய திருவடி களைக் கைகளால் தொழுதும், வாயினால் வாழ்த்தியும், மனத்தினால் நினைந்தும் வரும் கடப்பாட்டில் நின்று, திருமகளின் கணவராய திருமாலும், அவர்தம் மகனாரான நான்முகனும் அறிய இயலாத சிவந்த பொன் போன்ற திருவடிகளை அடைதற்கு, உரிய நெறி இதுவேயாகும் என்று உட்கொண்டு, அன்பினால் அவரைப் போற்றி வருவாராயினார்.

குறிப்புரை: செய்யாள் - திருமகள்.

Go to top
நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தி யான அணைந்ததற்பின்
மூளும் காத லுடன்பெருக
முதல்வர் நாமத் தஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார்.

6


நாள்தோறும் நம்பியாரூரரின் திருப்பெயரைப் போற்றி வந்த நன்மையின் காரணமாக, தாம் எவற்றையும் ஏவல் கொள்ளும் தன்மையால், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்றவராய், அதன்பின் மேன்மேலும் மூண்டு எழும் அன்பு மேலீட்டால், முழுமுதற் பெருமானாகிய சிவபெருமானின் திருப் பெயராகிய திருவைந்தெழுத்தையே தமக்குரிய சுற்றமும் பொருளும் உணர்வும் ஆகும் எனக்கொண்டு வாழ்ந்து வரும் பெற்றியரு மாயினார்.

குறிப்புரை: நம்பியாரூரரின் திருப்பெயரைப் போற்றி வந்த நலத்தால் எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்றதோடு, இறைவ னின் திருவைந்தெழுத்தே சுற்றமும் பொருளும் உணர்வுமாம் எனும் மனநலத்தையும் பெற்றார். நம்பியாரூரர் எனும் திருப்பெயரில் ஒற்றெழுத்தை நீக்க ஐந்தெழுத்தாகின்றது. இவ்வாற்றான் அத்திருப் பெயர் இவ்வடியவர்க்கு இத்துணைப்பேற்றையும் நல்கியது.
எண்வகைச் சித்திகள்: 1. அணிமா - மிகப் பெரியதாய ஒன்றை அணுவாக்குதல். 2. மகிமா - மிகச் சிறியதாகிய ஒன்றை மிகப் பெரிதாக் குதல். 3. லகிமா - எடுப்பதற்குக் கனமாக இருப்பதொன்றை எளிதாக் குதல் (இலகுவாக்குதல்). 4. கரிமா - எடுப்பதற்கு மிக எளிதாக இருப்ப தொன்றை மிகப்பளுவாக்குதல். 5. பிராப்தி - வேண்டுவன அடைதல். 6. பிராகாமியம் - விரும்பியவாறு நுகர்தல். 7. ஈசத்துவம் - யாவரையும் ஆட்சி கொள்ளுதல். 8. வசித்துவம் - எவற்றையும் தன்வயமாக்குதல். சுற்றம் - உடற்சார்பு. பொருள் - உலகச் சார்பு. உணர்வு - உயிர்ச் சார்பு. இம்முச் சார்புகளுக்கும் துணையாயது திருவைந்தெழுத்தேயாம் எனக் கொண்டு ஒழுகினார் என்பார். 'அஞ்செழுத்தும், கேளும், பொருளும், உணர்வும் ஆம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்' என்றார்.

இன்ன வாறே இவர்ஒழுக
ஏறு கொடிமேல் உயர்த்தவர்தாம்
பொன்னின் கழல்கள் மண்ணின்மேல்
பொருந்த வந்து வழக்குரைத்து
மன்னும் ஓலை அவைமுன்பு
காட்டி ஆண்ட வன்றொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி
கொடுங்கோள் ஊரைச் சேர்வுற்றார்.

7


இவ்வாறான நெறியில் இவ்வடியவர் ஒழுகிவர, ஆனேற்றுக் கொடியை உயர்த்தி நிற்கும் சிவபெருமான், தம் பொன் போன்ற இனிய திருவடிகள் இம்மண்ணில் பொருந்த வந்து வழக்குரைத்து, நிலைபெற்ற மூல ஓலையை அவையத்தார் முன் காட்டித், தடுத்தாட்கொள்ளப் பெற்ற வன்றொண்டர், பிறை தோயுமாறு உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொடுங்கோளூரை அடைந்தார்.

குறிப்புரை:

அஞ்சைக் களத்து நஞ்சுண்ட
அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ்மா லைகள்மொழியத்
தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப்
பொருப்பில் எய்த வரும்வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்குணந்தார்
நீடு மிழலைக் குறும்பனார்.

8


கொடுங்கோளூரைச் சேர்ந்த வன்றொண்டர், அங்குள்ள திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் நஞ்சுண்ட பெருமானை வழிபட்டு வருபவர், செஞ்சொல் தமிழ் மாலையாகிய தேவாரத் திருப்பதிகத்தைப் பாடியருளித், தேவர்க்கும் தேவனாய பெருமானின் திருவருளினால் மேகங்கள் சூழும் வடகயிலைமலை யைச் சேர இருக்கும் வாழ்வினை, பெருமிழலைக் குறும்பனார் தாம் இருந்த இடத்தில் இருந்தவாறே தம் யோக நெறியால் உணர்ந்தார்.

குறிப்புரை: திருவஞ்சைக்களம் சென்ற ஆரூரர், திருக்கோயிலை வலம் வருங்கால் பாடிய பதிகம், 'தலைக்குத் தலைமாலை' (தி. 7 ப. 4) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். அப்பதிகத்தில், 'வெறுத்தேன் மனை வாழ்க்கை' (தி. 7 ப. 100) என விண்ணப்பித்துக் கொண்டமை யைத் திருவுளம் பற்றி இறைவன் வெள்ளையானையை அனுப்ப, அதன்மீது இவர்ந்து கயிலைக்குச் சென்றார். இவ்வரலாற்றை வெள்ளானைச் சருக்கத்தில் (தி. 12 சரு. 13 பா. 39, 40) விரிவாகக் காணலாம்.
இதுபொழுது பாடிய பதிகம் ஒன்றாயினும் அது கொண்டிருக் கும் பாடல்கள் பத்தாதல் நோக்கி, 'செஞ்சொல் தமிழ் மாலைகள்' என்றார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாலையாக அமையும் சிறப்புடையதாம்.

மண்ணில் திகழும் திருநாவல்
ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை
நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய
வாழ்வார் போல வாழேன்என்
றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென்
றடைவன் யோகத் தாலென்பார்.

9


இம்மண்ணில் போற்றுதற்குரிய திருநாவலூரில் தோன்றிய வன்றொண்டர், 'உயிர்கள் தம்மளவில் சென்று, அடை தற்கரிய திருக்கயிலையினை நாளைப் பொழுதில் சென்றடையுமாறு இருக்க, நான் அப்பெருமானைப் பிரிந்து கண்ணகத்திருக்கும் கருமணி கழிந்த பின்னும் இவ்வுலகில் வாழ்வார்கள் போல வாழேன்' என எண்ணி, கயிலையகத்திருக்கும் சிவபெருமானின் திருவடிகளை இன்றே, யோக வலியால் சென்றடைவேன் எனத் துணிந்தாராய்.

குறிப்புரை: 'நாதனுக்கு ஊர் நமக்கு ஊர், நரசிங்க முனையரையர் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணிநாவலூர்' (தி. 7 ப. 17 பா. 11) என ஆரூரர் பாராட்டி மகிழ்தற்கும், அவர் தோன்றுவதற்கும் வாய்ந்த சிறப்பினையுடையது திருநாவலூர்.
ஆதலின், 'மண்ணில் திகழும் திருநாவலூர்' என்றார். உயிர்கள் தம் நினைவாலும் செயலாலும் அடைதற்கரிய திருக்கயிலை எனவே, அவனருளாலே அவன் தாள் வணங்க நேர்தல் போல, அக்கயிலை சென்று வணங்குதற்கும் அவன் அருள் முன்னின்றருள வேண்டும் என்பது பெற்றாம்.
கண்ணகத்திருக்கும் மணி கழியின் எதனையும் காண்டற்கிய லாது, எனவே அக்கண்ணின் மணியே கண்பார்வைக்குப் பெரிதும் இன்றியமையாததாகும். நம்பியாரூரரைப் பிரிதற்கு ஆற்றாத பெருமிழலைக் குறும்பரை, இவ்வுவமை கொண்டு உரைத்திருப்பது அவருக்கு நம்பியாரூரர் மீதிருந்த ஆழ்ந்த பத்திமையை வெளிப்படுத் துகின்றது.

நாலு கரணங் களும்ஒன்றாய்
நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக்
கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏல வேமுன் பயின்றநெறி
எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அடைவார் கயிலை முன்னடைந்தார்.

10


மனம் முதலிய அகக்கருவிகள் நான்கும் சிந்தையே ஆக, அகப்புறக் கருவிகளுக்கு ஆட்படாத தூய அறிவை மேற்கொண்டு, உணர்ச்சியானது சுழுமுனைவழியே உயிர்க் காற்றைச் செலுத்த, உச்சித் துளையின் வழி அக்காற்றுப் பொருந்துமாறு முன் பயின்ற நெறியினால் எடுத்த பிரணவ மந்திரமானது அவ்வாயிலைத் திறக்க, அவ்வழி மூலம் அடைவாராகி, நம்பியாரூரர் திருக்கயிலையை அடையும் முன்பே இவர் அடைந்தார்.

குறிப்புரை: நாலுகரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அகக் கருவிகள். பிரம நாடி - சுழு முனை நாடி. கபால நடு - உச்சித் தலையின் நடுவிருக்கும் அடைக்கப் பட்ட துளை. எடுத்த மறை- எடுத்துச் சொல்லப்படும் திருவைந்தெழுத்து. இவ்விரண்டு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
பயிலச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடியடைந்த மிழலைக் குறும்பர் கழல்வணங்கி
மயிலைப் புறங்கொள் மென்சாயல் மகளிர் கிளவி யாழினொடுங்
குயிலைப் பொருவுங் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.

11


உயிர்க் காற்றை வாங்கவும், நிறுத்தவும், விடவும் பயின்ற யோக முயற்சியால், பரவையாரின் கணவராய ஆரூரரின் திருவடிகளைப் பிரியாது பொருந்துதற்குத் திருக்கயிலையின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிப் பேற்றை அடைந்த பெருமிழலைக்குறும்பரின் திருவடிகளை வணங்கிச், சாயலால் மயி லைப் புறங்கண்ட மெல்லிய மகளாராகிய, யாழையும் குயிலையும் ஒத்த சொற்களைப் பேசும் காரைக்கால் அம்மையாரது வரலாற்றை இனிக் கூறுவாம்.

குறிப்புரை: பயிலச் செறிந்த - பல்காலும் பயின்ற பயிற்சியால் பெற்ற. இவ்வடியவரின் திருவுருவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்திற்கு மேற்கே அமைந்துள்ள தேவி மலையின் குடவறையில் உள்ளது. பெருமிழலைக்குறும்ப நாயனார் முத்திப்பேறு எய்திய நாள் சுந்தரர் கயிலைசென்ற நாளுக்கு முன் வரும் ஆடிச் சித்திரையாகும். இவர் காலம் சுந்தரர் காலமாகிய கி. பி. 8ஆம் நூற்றாண்டாகும்.


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA pathigam no 12.230