எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.
|
1
|
மைய கண் மலைமகள் பாகம் ஆய், இருள
கையது ஓர் கனல்-எரி கனல ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர், செம்பியர்
செய்யகண் இறை செய்த கோயில் சேர்வரே.
|
2
|
மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர்
பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே.
|
3
|
இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்
பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே.
|
4
|
சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே.
|
5
|
Go to top |
கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர்
சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில்
நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே.
|
6
|
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே,
பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ்
புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே.
|
7
|
எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன
கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர்,
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே.
|
8
|
வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில்
பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும்,
அறிகில அரியவர் அம்பர், செம்பியர்
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே.
|
9
|
வழி தலை, பறி தலை, அவர்கள் கட்டிய
மொழிதலைப் பயன் என மொழியல்! வம்மினோ!
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
உழிதலை ஒழிந்து உளர், உமையும் தாமுமே.
|
10
|
Go to top |
அழகரை, அடிகளை, அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை,
உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்-
தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே!
|
11
|