சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.
|
1
|
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்;
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்;
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.
|
2
|
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப்
போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற
நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.
|
3
|
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன்,
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால்
கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே.
|
4
|
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.
|
5
|
| Go to top |
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.
|
6
|
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.
|
7
|
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.
|
8
|
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து,
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.
|
9
|
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர்,
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு,
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே.
|
10
|
| Go to top |
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.
|
11
|