இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய்! என்றும், சுடர் ஒளியாய்! உள் விளங்கு சோதீ! என்றும், தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா! என்றும், கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா! என்றும், கலைமான் மறி ஏந்து கையா! என்றும், அடல் விடையாய்! ஆரமுதே! ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
செடி ஏறு தீ வினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே, நெஞ்சமே! திண்ணம் ஆகப் பொடி ஏறு திருமேனி உடையாய்! என்றும், புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா! என்றும், அடியேனை ஆள் ஆகக் கொண்டாய்! என்றும், அம்மானே! ஆரூர் எம் அரசே! என்றும், கடி நாறு பொழில் கச்சிக் கம்பா! என்றும், கற்பகமே! என்று என்றே, கதறா நில்லே!.
நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு, பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, சங்கரா, சய! போற்றி போற்றி! என்றும், அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
புண்ணியமும் நன்நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே! இது கண்டாய்; பொருந்தக் கேள், நீ: நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா! என்றும், நுந்தாத ஒண்சுடரே! என்றும், நாளும் விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி எண்ண (அ)ரிய திருநாமம் உடையாய்! என்றும், எழில் ஆரூரா! என்றே ஏத்தா நில்லே!.
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால்; இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி, பிழைத்தது எலாம் பொறுத்து அருள் செய் பெரியோய்! என்றும், பிஞ்ஞகனே! மைஞ் ஞவிலும் கண்டா! என்றும், அழைத்து அலறி, அடியேன் உன் அரணம் கண்டாய், அணி ஆரூர் இடம் கொண்ட அழகா! என்றும், குழல் சடை எம் கோன்! என்றும், கூறு, நெஞ்சே! குற்றம் இல்லை, என்மேல்; நான் கூறினேனே.
நீப்ப(அ)ரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண்; நெஞ்சே! நித்தம் ஆகச் சேப் பிரியா வெல் கொடியினானே! என்றும், சிவலோக நெறி தந்த சிவனே! என்றும், ‘பூப் பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் புண்டரிகக் கண்ணானும், போற்றி! என்னத் தீப்பிழம்பு ஆய் நின்றவனே! செல்வம் மல்கும் திரு ஆரூரா!’ என்றே சிந்தி, நெஞ்சே!.
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில், பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில், சுற்றி நின்ற சூழ் வினைகள் வீழ்க்க வேண்டில், சொல்லுகேன்; கேள்: நெஞ்சே, துஞ்சா வண்ணம்! உற்றவரும் உறு துணையும் நீயே என்றும், உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும், புற்று அரவக் கச்சு ஆர்த்த புனிதா! என்றும், பொழில் ஆரூரா! என்றே, போற்றா நில்லே!.
மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி ஆவது இது கண்டாய்; வானோர்க்கு எல்லாம் அதிபதியே! ஆரமுதே! ஆதீ! என்றும்; அம்மானே! ஆரூர் எம் ஐயா! என்றும்; துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச் சூழும் வலம் செய்து தொண்டு பாடி, கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா! கற்பகமே! என்று என்றே கதறா நில்லே!.
பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே! பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா! தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு ஆரூர்த் திருமூலட்டானா! என்றும், நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று, ஏசற்று நின்று, இமையோர் ஏறே! என்றும், எம்பெருமான்! என்று என்றே ஏத்தா நில்லே!.
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம் புறமே திரியாதே போது, நெஞ்சே! சலம் கொள் சடைமுடி உடைய தலைவா! என்றும், தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய்! என்றும், இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா! என்றும், எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய்! என்றும், நலம் கொள் அடி என் தலைமேல் வைத்தாய்! என்றும், நாள்தோறும் நவின்று ஏத்தாய்! நன்மை ஆமே.
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2C pathigam no 6.031