உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி, உள்ளக்கிழியின் உரு எழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு, உன் கைத் தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி, வாழ்தி; அயிராவணம் ஏறாது, ஆன் ஏறு ஏறி, அமரர் நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட அயிராவணமே! என் அம்மானே! நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.
தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ் புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி; கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும் ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, உமையாள் மணவாளா! என்று வாழ்த்தி, ஆரூரா! ஆரூரா! என்கின்றார்கள்; அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?.
கோவணமோ, தோலோ, உடை ஆவது? கொல் ஏறோ, வேழமோ, ஊர்வதுதான்? பூவணமோ, புறம்பயமோ, அன்று ஆயில்-தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ? தீ வணத்த செஞ்சடைமேல்-திங்கள் சூடி, திசை நான்கும் வைத்து உகந்த செந்தீவண்ணர், ஆவணமோ, ஒற்றியோ, அம்மானார் தாம்- அறியேன் மற்று-ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே?.
ஏந்து மழுவாளர்; இன்னம்பரா அர்; எரிபவள வண்ணர்; குடமூக்கி(ல்)லார்; வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார்சடையார்; வந்து வலஞ்சுழி(ய்)யார்; போந்தார், அடிகள் புறம்பயத்தே; புகலூர்க்கே போயினார்; போர் ஏறு ஏறி; ஆய்ந்தே இருப்பார் போய், ஆரூர் புக்கார்; அண்ணலார் செய்கின்ற கண் மாய(ம்)மே!.
கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக் கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி, உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால் வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்; மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்! மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,- திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே!.
கருத்துத் திக்கத நாகம் கையில் ஏந்தி, கருவரை போல் களியானை கதறக் கையால் உரித்து எடுத்துச் சிவந்து, அதன் தோல் பொருந்த மூடி, உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி, திருத் துருத்தி திருப் பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட, செல்வர்; இந்நாள் அரிப் பெருத்த வெள் ஏற்றை அடர ஏறி, அப்பனார், இப் பருவம் ஆரூராரே.
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81 pathigam no 6.025