சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநள்ளாறு - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம் - சனிக்கிரக தாக்குதல் நீங்க ஓத வேண்டிய பதிகம்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28   Add audio link Add Audio

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

1

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

2

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.

3

புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

4

ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

5
Go to top

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

6

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண் முழவதிர
அஞ்சிடத்தோ ராடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

7

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

8

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

9

மாசுமெய்யர் மண்டைத் தேரர் குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

10
Go to top

தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகில் உறைவாரே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநள்ளாறு
1.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருநள்ளாறு பச்சைப் பதிகம், போகம் ஆர்த்த பூண் முலையாள்
Tune - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
2.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏடு மலி கொன்றை, அரவு,
Tune - இந்தளம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
5.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
Tune - திருக்குறுந்தொகை   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
6.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)
Tune - திருத்தாண்டகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
7.068   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செம்பொன் மேனி வெண் நீறு
Tune - தக்கேசி   (திருநள்ளாறு தெர்ப்பாரணியயீசுவரர் போகமார்த்தபூண்முலையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000