மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
1
|
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
2
|
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
3
|
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
4
|
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
5
|
| Go to top |
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
6
|
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
7
|
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
8
|
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
9
|
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
10
|
| Go to top |
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே. |
11
|