பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய் நாகத்தர் கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர் மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையின் மகிழ்வெய்திச் சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
1
|
பொங்கார்சடையர் புனலரனலர் பூதம் பாடவே தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர் விடையேறிக் கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச் செங்காலனமும் பெடையுஞ்சேருஞ் சித்தீச் சரத்தாரே.
|
2
|
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவா மேனிமேல் பொடிகொணூலர் புலியினதளர் புரிபுன் சடைதாழக் கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலா ரினம்பாயக் கொடிகொண்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
3
|
பின்றாழ்சடைமே னகுவெண்டலையர் பிரமன் றலையேந்தி மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரு மொருகாதர் பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்து செண்பகம் சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
4
|
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைக ணிறைநாவர் பாரார்புகழாற் பத்தர்சித்தர் பாடி யாடவே தேரார்வீதி முழவார்விழவி னொலியுந் திசைசெல்லச் சீரார்கோலம் பொலியுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
5
|
| Go to top |
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொண் மலர்மாலை தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத் தெழிலார்வந் தீண்டுமாட மெழிலார்சோலை யிலங்கு கோபுரம் தீண்டுமதியந் திகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
6
|
குழலார்சடையர் கொக்கினிறகர் கோல நிறமத்தம் தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோ வணக்கீளர் எழிலார்நாகம் புலியினுடைமே லிசைத்து விடையேறிக் கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச் சரத்தாரே.
|
7
|
கரையார்கடல்சூ ழிலங்கைமன்னன் கயிலை மலைதன்னை வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்து மனமொன்றி உரையார்கீதம் பாடநல்ல வுலப்பி லருள்செய்தார் திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
8
|
நெடியான்பிரம னேடிக்காணார் நினைப்பார் மனத்தாராய் அடியாரவரு மருமாமறையு மண்டத் தமரரும் முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வா வருளென்னச் செடியார்செந்நெற் றிகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
9
|
நின்றுண்சமண ரிருந்துண்டேரர் நீண்ட போர்வையார் ஒன்றுமுணரா வூமர்வாயி லுரைகேட் டுழல்வீர்காள் கன்றுண்பயப்பா லுண்ணமுலையிற் கபால மயல்பொழியச் சென்றுண்டார்ந்து சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.
|
10
|
| Go to top |
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை செயிலார் பொய்கை சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரை மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன் பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே.
|
11
|