செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே. |
1
|
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே. |
2
|
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே. |
3
|
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே. |
4
|
கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே. |
5
|
| Go to top |
பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே. |
6
|
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே. |
7
|
மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே. |
8
|
நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளும்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே. |
9
|
நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே. |
10
|
| Go to top |
வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே. |
11
|