குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம் நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி, முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின் பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.
|
1
|
சுரத் தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெரு விருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின் மிசை ஏறி வந்து மக்கள் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவன் இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள் மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும். | |
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம் மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப் போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.
|
2
|
காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம் சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும். | |
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப் பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த, உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர் மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.
|
3
|
இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும். | |
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும் சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக் காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர் ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.
|
4
|
கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும். | |
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல் பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி, பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.
|
5
|
சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம் அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர். | |
| Go to top |
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில், குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர் விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும் முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.
|
6
|
இரண்டு திருவடிகளிலும் விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும் குழல் முதலிய இசைக்கருவிகள் முழங்கவும் குள்ளமான பூகணங்கள் போற்றவும் பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம் திருவிழாக்களின் ஓசையும் அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர். | |
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி, உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம் கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.
|
7
|
கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச்சூடி தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம் மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும். | |
தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள், தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்த மின் இலங்கு சடையான் மடமா தொடு மேவும் இடம் என்பர் பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.
|
8
|
அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள் திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம் மதிதோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும். | |
நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள் ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்த ஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும் போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.
|
9
|
பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள் தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும் பிரமனும் திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம் பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன்நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும். | |
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக் கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து, மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.
|
10
|
எண்ணிக்கையில் மிக்கதேரர் சாக்கியர் சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய் மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார்களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம் அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும். | |
| Go to top |
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை, கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து, குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.
|
11
|
புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள்சேர் புகழைக்கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள். | |