சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குறி கலந்த இசை பாடலினான்,
பண் - நட்டபாடை   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-PVAyLgZINI
2.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பட்டம், பால்நிற மதியம், படர்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nu1wdo_PEPE
2.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கள் விம்மு குழல்
பண் - செவ்வழி   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Q-fcd-hSsO4
4.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி
பண் - இந்தளம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pJGtwwrKzLE
4.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AZ_kpWQFf_Q
4.105   திருநாவுக்கரசர்   தேவாரம்   தன்னைச் சரண் என்று தாள்
பண் - திருவிருத்தம்   (திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=hUJDOFGkh8k
5.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
பண் - திருக்குறுந்தொகை   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_vfLU6ETFzU
6.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
பண் - திருத்தாண்டகம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Nc47vuCZpt4
7.034   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி   (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=sGcq0xXT5JA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.002   குறி கலந்த இசை பாடலினான்,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,
முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.

[1]
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம்
மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை
மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப்
போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.

[2]
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப்
பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த,
உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.

[3]
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக்
காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர்
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.

[4]
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்
பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.

[5]
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில்,
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும்
முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.

[6]
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி,
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம்
கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.

[7]
தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள்,
தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்த
மின் இலங்கு சடையான் மடமா தொடு மேவும் இடம் என்பர்
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.

[8]
நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்த
ஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும்
போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.

[9]
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக்
கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.

[10]
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,
குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.092   பட்டம், பால்நிற மதியம், படர்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு வர்த்தமானீசுவரர் திருவடிகள் போற்றி )
பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி,
நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்,
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர்
போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே.

[1]
முயல் வளாவிய திங்கள் வாள்முகத்து அரிவையில்
தெரிவை
இயல் வளாவியது உடைய இன் அமுது, எந்தை,
எம்பெருமான்
கயல் வளாவிய கழனிக் கருநிறக்குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சுரத்தாரே.

[2]
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும்
புகையும்
கொண்டு கொண்டு அடி பரவி, குறிப்பு அறி முருகன்
செய் கோலம்
கண்டு கண்டு, கண் குளிரக் களி பரந்து, ஒளி மல்கு கள்
ஆர்
வண்டு பண் செயும் புகலூர் வர்த்த மானீச் சுரத்தாரே.

[3]
பண்ண வண்ணத்தர் ஆகி, பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர், ஒர்பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு, ஆண்
இணைபிணைந்த
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சுரத்தாரே.

[4]
ஈசன், ஏறு அமர் கடவுள், இன் அமுது, எந்தை,
எம்பெருமான்,
பூசும் மாசு இல் வெண் நீற்றர் பொலிவு உடைப் பூம்
புகலூரில்,
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய்
முடிமேல்
வாசமாமலர் உடையார், வர்த்தமானீச்சுரத்தாரே.

[5]
தளிர் இளங் கொடி வளர, தண்கயம் இரிய வண்டு ஏறிக்
கிளர் இளம்(ம்) உழை நுழைய, கிழிதரு பொழில் புகலூரில்,
உளர் இளஞ் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன்
மேல்
வளர் இளம்பிறை உடையார் வர்த்தமானீச்சுரத்தாரே.

[6]
தென் சொல், விஞ்சு அமர் வட சொல், திசை மொழி,
எழில் நரம்பு எடுத்துத்
துஞ்சு நெஞ்சு இருள் நீங்கத் தொழுது எழு தொல்
புகலூரில்,
அஞ்சனம் பிதிர்ந்தனைய, அலைகடல் கடைய அன்று
எழுந்த,
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சுரத்தாரே.

[7]
சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும்
நாம தேயம் அது உடையார், நன்கு உணர்ந்து, அடிகள்
என்று ஏத்த;
காம தேவனை வேவக் கனல் எரி கொளுவிய கண்ணார்;
வாம தேவர் தண் புகலூர் வர்த்தமானீச் சுரத்தாரே.

[8]
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்;
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து, அருளுதல்
பொருட்டால்,
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சுரத்தாரே.

[9]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையினால்
தம்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் என
விரும்பேல்!
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்,
மை கொள் கண்டத்து எம்பெருமான்
வர்த்தமானீச்சுரத்தாரே.

[10]
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில்
புகலூரில்,
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை,
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.115   வெங் கள் விம்மு குழல்  
பண் - செவ்வழி   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு வர்த்தமானீசுவரர் திருவடிகள் போற்றி )
வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு
நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே.

[1]
வாழ்ந்த நாளும்(ம்), இனி வாழும் நாளும்(ம்), இவை
அறிதிரேல்,
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதி(ல்) இகாள
போழ்ந்த திங்கள் புரிசடையினான் தன் புகலூரையே
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள்! உங்கள் துயர் தீருமே.

[2]
மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்) மலர்த்தாமரை,
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான், ஒர் பாகம்,
மதிசூடியை
அடைய வல்லார் அமருலகம் ஆளப்பெறுவார்களே

[3]
பூவும் நீரும் பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார்; செவித்துளைகளால்
யாவும் கேளார், அவன் பெருமை அல்லால்,
அடியார்கள்தாம்,
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம்
கொள்ளவே.

[4]
அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி நடையவாய்,
பொன் அம்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம் மூன்றுமதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்,
இன்னர் என்னப் பெரிது அரியர்; ஏத்தச் சிறிது எளியரே.

[5]
குலவர் ஆக; குலம் இலரும் ஆக; குணம் புகழுங்கால்,
உலகில் நல்ல கதி பெறுவரேனும், மலர் ஊறு தேன்
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்தனுள்,
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே

[6]
ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்), அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர்தனக்கு ஓர் பொருள் ஆயினான்;
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு, உடைகோவணம்
பேணுமேனும், பிரான் என்பரால், எம்பெருமானையே.

[7]
உய்ய வேண்டில்(ல்) எழு, போத! நெஞ்சே! உயர்
இலங்கைக் கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஒர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்து அருள வல்ல சிவன் மேய,
பூம்
பொய்கை சூழ்ந்த, புகலூர் புகழ, பொருள் ஆகுமே.

[8]
நேமியானும், முகம் நான்கு உடைய(ந்) நெறி அண்ணலும்,
ஆம் இது என்று தகைந்து ஏத்தப் போய், ஆர் அழல்
ஆயினான்;
சாமிதாதை; சரண் ஆகும் என்று, தலைசாய்மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே!

[9]
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும்,
போர்த்த கூறைப் போதி நீழலாரும், புகலூர்தனுள்
தீர்த்தம் எல்லாம் சடைக் கரந்த தேவன் திறம் கருதுங்கால்
ஓர்த்து, மெய் என்று உணராது, பாதம் தொழுது உய்ம்மினே!

[10]
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை,
அந்தம் இல்லா அனல் ஆடலானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.016   செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.

[1]
மேக நல் ஊர்தியர், மின் போல் மிளிர்சடைப்
பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர்,
நாக வளையினர், நாக உடையினர்
போகர்-புகலூர்ப் புரிசடையாரே.

[2]
பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி,
கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து,
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

[3]
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர்
நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும்
புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே.

[4]
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

[5]
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக்
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்,
சேம நெறியினர்; சீரை உடையவர்
பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.

[6]
உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;
சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி;
பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண்
புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

[7]
கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும்,
தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண;
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை
புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

[8]
ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,
நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச;
மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும்
பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.

[9]
கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும்,
அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.054   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[1]
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக்
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்;
ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம்
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

[2]
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,
அப்பர் போல் ஐவர் வந்து(வ்), அது தருக, இது விடு! என்று(வ்)
ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்-
செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே!

[3]
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி,
நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும்
அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும்
செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[4]
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி,
களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[5]
இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[6]
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்;
வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்-
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!

[7]
நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி,
ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்),
ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற,
தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே.

[8]
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால;
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

[9]
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.105   தன்னைச் சரண் என்று தாள்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.

[1]
பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்!
புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே!
என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!

[2]
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே!
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!-
என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்!
உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே!

[3]
ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும்,
காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத்
தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க்
கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே.

[4]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.046   துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு வர்த்தமானீசுவரர் திருவடிகள் போற்றி )
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

[1]
இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும்,
நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை,
புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.

[2]
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்!
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன-
ரோ? சொலாய், மகளே! முறையோ? என்று
பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.

[3]
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை,
புன்னைக் காவல் பொழில் புகலூரனை,
என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.

[4]
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்
கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!

[5]
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,
பண்டு நால்மறை ஓதிய பாடலன்;
தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார்-புகலூரரே.

[6]
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை;
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்;
தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது
தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.

[7]
பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர்
கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்;
வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப்
பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.

[8]
பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல்
தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா,
புன்னைத் தாது பொழில், புகலூரரை,
என் அத்தா! என, என் இடர் தீருமே.

[9]
மத்தனாய், மதியாது, மலைதனை
எத்தினான் திரள் தோள் முடிபத்து இற
ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரைத் தொழுமினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.099   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக் கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். எல்லாவுலகமும் போற்ற எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார்.
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்?
கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன்,
கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்;
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்;
ஒக்க   அடைக்கும் போது உணர மாட்டேன்;
புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[1]
அங்கமே பூண்டாய்! அனல் ஆடினாய்!
ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்
திருப் புகலூர் மேவிய தேவதேவே!.

[2]
பை அரவக் கச்சையாய்! பால் வெண் நீற்றாய்!
பளிக்குக் குழையினாய்! பண் ஆர் இன்சொல்
மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்!
மான்மறி கை ஏந்தினாய்! வஞ்சக் கள்வர்-
ஐவரையும் என்மேல்-தரவு அறுத்தாய்;
அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவது இல்லை;
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன்-
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[3]
தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவச்
சிலை வளைத்து, செங் கணையால் செற்ற தேவே!
மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்!
மருந்து ஆய்ப் பிணி தீர்ப்பாய், வானோர்க்கு என்றும்!
அருள் ஆகி, ஆதி ஆய், வேதம் ஆகி,
அலர் மேலான் நீர் மேலான் ஆய்ந்தும் காணாப்
பொருள் ஆவாய்! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[4]
நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள்
நீங்காமை வைத்து உகந்த நீதியானே!
பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே!
பண்டு அநங்கற் காய்ந்தானே! பாவநாசா!
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே!
கருங்கைக் களிற்று உரிவை கதறப் போர்த்த
போர் ஏறே! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[5]
விரிசடையாய்! வேதியனே! வேத கீதா!
விரி பொழில் சூழ் வெண் காட்டாய்! மீயச் சூராய்!
திரிபுரங்கள் எரி செய்த தேவதேவே!
திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயாய்!
மருவு இனியார் மனத்து உளாய்! மாகாளத்தாய்!
வலஞ்சுழியாய்! மா மறைக்காட்டு எந்தாய்! என்றும்
புரிசடையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[6]
தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம்
திருவடி மேல் அலர் இட்டு, தேடி நின்று,
நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி,
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற,
கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்!
கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[7]
நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா!
நிறைவு உடையாய்! மறை வல்லாய்! நீதியானே!
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே!
மான் தோல் உடையாய்! மகிழ்ந்து நின்றாய்!
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை
கொண்டு, அடியேன் நான் இட்டு, கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[8]
துன்னம் சேர் கோவணத்தாய்! தூய நீற்றாய்!
துதைந்து   இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி,
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும்
சடை முடிமேல் வைத்து உகந்த தன்மையானே!
அன்ன நடை மடவாள் பாகத்தானே!
அக்கு ஆரம் பூண்டானே! ஆதியானே!
பொன் அம்கழல் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[9]
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்;
உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி,
இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக்
கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந் தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற
பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.034   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினியீசுவரர் திருவடிகள் போற்றி )
நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது தம்மையே புகழ்ந்து எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம்
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[1]
மிடுக்கு இலாதானை, வீமனே; விறல் விசயனே, வில்லுக்கு இவன்; என்று,
கொடுக்கிலாதானை, பாரியே! என்று, கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[2]
காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,
பேணியே விருந்து ஓம்புமே! என்று பேசினும் கொடுப்பார் இலை;
பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[3]
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,
வரைகள் போல்-திரள் தோளனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[4]
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை,
பஞ்சதுட்டனை, சாதுவே! என்று பாடினும் கொடுப்பார் இலை;
பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[5]
நலம் இலாதானை, நல்லனே! என்று, நரைத்த மாந்தரை, இளையனே!
குலம் இலாதானை, குலவனே! என்று, கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[6]
நோயனை, தடந்தோளனே! என்று, நொய்ய மாந்தரை, விழுமிய
தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்! என்று, சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[7]
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும், ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,
வள்ளலே! எங்கள் மைந்தனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[8]
கற்றிலாதானை, கற்று நல்லனே!, காமதேவனை ஒக்குமே ,
முற்றிலாதானை, முற்றனே!, என்று மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[9]
தையலாருக்கு ஒர் காமனே! என்றும், சால நல அழகு உடை ஐயனே!
கை உலாவிய வேலனே! என்று, கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[10]
செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன்
சிறுவன், வன்தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list