சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவிடைமருதூர் - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=ywVeiOlRRiY   Add audio link Add Audio

ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

1
உண்ணும் பாத்திரம் பிரமகபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும் அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?

தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

2
தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில் அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?

வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,
அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.

3
வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாய்த் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?

அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,
வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.

4
அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய் முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?

வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்,
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.

5
மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலை களில் வண்டுகளைக் கொண்டதும் உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும் பொலிவும் அழகும் உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது என்னும் தலம் இதுதானோ?
Go to top

வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக
என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,
அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்
இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.

6
வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு அன்பிற்பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற்றுறையும் இடைமருது என்பது இதுதானோ?

தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.

7
தேக்கு வேங்கை பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும் அம்மரங்களை எடுத்து வீசி ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.

8
மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.

9
முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய் நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் திருமாலும் விரும்பித் தொழ உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?

சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,
நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.

10
சிறுமதியாளராகிய தேரர்களும் சிற்றறிவினராகிய சமணர்களும் புறங்கூறித் திரிய சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?
Go to top

கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.

11
இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிடைமருதூர்
1.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓடே கலன்; உண்பதும் ஊர்
Tune - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு ஓர் காதினன்; பாடு
Tune - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நடை மரு திரிபுரம் எரியுண
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
Tune - காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
4.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு உடைச் சுடலை நீற்றார்;
Tune - திருநேரிசை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப்படை உடையார் தாமே போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
7.060   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கழுதை குங்குமம் தான் சுமந்து
Tune - தக்கேசி   (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
9.017   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
Tune -   (திருவிடைமருதூர் )
11.028   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவிடைமருதூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000