சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கானூர் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு சிவயோகநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்மேனிநாயகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=iRUSnpqPJQk   Add audio link Add Audio

வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்
கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

1
திருக்கானூரில் மேவிய கண்பொருந்திய நெற்றி யினை உடையவரும் ஆனேற்றை ஊர்ந்து வருபவருமாகிய செல்வர் வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி மன்னும் சென்னியில் வன்னி காடுகளில் பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர் தானே வந்து தங்கிய கங்கை திங்கள் ஆகியவற்றைச் சூடி மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக்காலத்தில் நடனம் புரிபவராவர்.

நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர,
போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.

2
காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர் தடுக்க முடியாதபடி பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு பாம்பு கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்.

சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க்கொன்றை,
மறை ஆர் பாடல் ஆடலோடு, மால்விடைமேல் வருவார்;
இறையார்; வந்து, என் இல் புகுந்து, என் எழில் நலமும் கொண்டார்
கறை ஆர் சோலைக் கானூர் மேய பிறை ஆர் சடையாரே.

3
கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர் சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப் பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார் இதுமுறையோ?.

விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி,
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ,
எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்-
கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.

4
இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறைமதியைக் கண்ணியாகச்சூடி வெண்ணிறமான மாலையை அணிந்து குளிர்ந்த என்புமாலை ஆமையோடு ஆகிய வற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து எனக்கு மிக்க விரகவேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?

தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி,
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து,
ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார்
கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.

5
கருநிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர் கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய் வந்து ஊர்கள்தோறும் திரிந்து பலியேற்று என் மனத்தகத்தே கொடிய விரகவேதனையைத் தந்து சென்றார்.
Go to top

முளிவெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய்,
எளிவந்தார் போல், ஐயம் என்று, என் இல்லே புகுந்து, உள்ளத்
தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில்
களிவண்டு யாழ்செய் கானூர் மேய ஒளிவெண் பிறையாரே.

6
தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளி பொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர் காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து `ஐயம் இடுக` என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.

மூவா வண்ணர், முளை வெண் பிறையர், முறுவல் செய்து இங்கே
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார், பொக்கம்பல பேசிப்
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரிநூலர்
தேவு ஆர் சோலைக் கானூர் மேய தேவதேவரே.

7
தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய சிவபிரானார் மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர் கொன்றைமாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து பொய்கலந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்து போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில் புக்கொளித்த புரிநூலர் ஆவார்.

தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்,
குமிழின் மேனி தந்து, கோல நீர்மை அது கொண்டார்
கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.

8
மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர் தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி தாளத்தோடு வீணையை மீட்டி முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.

அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான்,
சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான்,
வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்-
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.

9
மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந் தையாராகிய பெருமானார் அந்தத்தைச் செய்பவரும் யாவர்க்கும் ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன் மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலைபெற்றிருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளு கின்றார்.

ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு,
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோள் நாகணையானும்
சேமம் ஆய செல்வர், கானூர் மேய சேடரே.

10
வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங் களை ஓதும் நான்முகனும் வளைந்த பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார் ஆமை அரவு பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மனவேதனையைத் தந்தார்.
Go to top

கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை,
பழுது இல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே,
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று,
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே.

11
பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர்மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கானூர்
1.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் ஆர் சோதி மன்னு
Tune - தக்கேசி   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
5.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவின் நாதனும், செம்மலர் மேல்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org