சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவெங்குரு (சீர்காழி) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://sivaya.org/audio/1.075 Kaalai Nan malar.mp3  https://www.youtube.com/watch?v=75ihhsCeeFQ   Add audio link Add Audio

காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்,
ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்-
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி,
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1
வைகறைப் பொழுதில் சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்துவந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும் உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான் மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான்.

பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும் அரவினை அணிந்து, அழகு ஆகப்
பண்ணினைப் பாடி ஆடி, முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி,
மண்ணினை மூடி, வான்முகடு ஏறி, மறிதிரை கடல் முகந்து எடுப்ப, மற்று உயர்ந்து
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

2
உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று செஞ்டைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து பண் வகைகளை அழகாகப்பாடி ஆடியவராய்ச் சென்று மகளிரிடம் பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார் ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள் வீற்றிருந்தருள்கிறார்.

ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, ஒண்திறல் வேடனது உரு அது கொண்டு,
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து, அவற்கு அளித்து, உடன் காதல் செய் பெருமான்-
நேரிசை ஆக அறுபதம் முரன்று, நிரை மலர்த் தாதுகள் மூச, விண்டு உதிர்ந்து,
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

3
தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மைகாண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான் வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மிவழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும், முழவப்-
பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

4
வண்டுகள் சூழும் கொன்றை மலர் வன்னி இலை ஊமத்தம் மலர் வில்வம் எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும் விடை ஊர்தியரும் பூதகணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும் தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.

சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆகக்
கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை கவர்ந்து, அழகு ஆகப்
படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து, அருள்செய்து,
விடையொடு தம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

5
சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய் தக்கை என்னும் இசைக்கருவியை வைத்துக் கட்டியுள்ள துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார் பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய் விடையூர்தியோடு பூதகணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.
Go to top

கரை பொரு கடலில் திரை அது மோத, கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி, ஓங்கு வான் இருள் அறத் துரப்ப, எண்திசையும்
புரை மலி வேதம் போற்று சுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

6
கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப் புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய எண் திசைகளிலும் பரவி நிறைந்த வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும் வேள்விகளைப் புரிய அவ்வேள்விகளின் ஆகுதியால் எழும் மணம் மிக்கபுகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் பெருமான் உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மதகளிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல் கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

7
கொடி போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும் விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு நல்லறங்களை உரைத்து யோக நிலையில் ஞானமாத்திரராய் வீற்றிருக்க திருமால் பிரமர் தம் கடுஞ்சொற்களால் நலிவுற்று மலர்க்கணை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு வில்லையுடைய காமன் எரிந்து பொடிபடுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை முடியொடு தோள் அவை நெரிய,
ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து, அழகு ஆய
கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

8
நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும் அவன் பிழை உணர்ந்து வருந்திப்பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவ ரும் அழகிய கோங்கு செருந்தி வில்வம் ஊமத்த மலர் கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.

ஆறு உடைச் சடை எம் அடிகளைக் காண, அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி,
சேறு இடை, திகழ் வானத்து இடை, புக்கும் செலவு அறத் தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண்
நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்கண்ணினர்; விண்ணவர் கைதொழுது ஏத்த,
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

9
கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும் முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர். அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும் நெற்றிக்கண்ணரும் விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற உரை விட்டு, அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து,
காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற விளித்து, வெய்து ஆய
வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

10
துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக்கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது அழகிய இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும் கண்டவர் அஞ்சவும் வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.
Go to top

விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை,
நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும்
பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்,
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே.

11
வானளாவிய விமானத்தை விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப்பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பண்ணிசை யோடும் பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள் தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து அதன்கண் வீற்றிருப்பர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெங்குரு (சீர்காழி)
1.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காலை நல்மாமலர் கொண்டு அடி
Tune - குறிஞ்சி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண்ணவர் தொழுது எழு வெங்குரு
Tune - சாதாரி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000