பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரைய, குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும்பொடி அணிவர்; மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமாப் பேணி, அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
1
|
அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர் தமது முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும் தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரிநூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத்தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார். | |
தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம் திருவடி தொழுவார் ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர், ஒன்று அலாது ஊரார், வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார், ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
2
|
அச்சிறுபாக்கத்தை தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர் தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர். | |
கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி, நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்; பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்; பேய்க்கணம் சூழ ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
3
|
அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர் உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத்தாம் காரிருளும் பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார். | |
மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும், மலைமகள் அவளொடு மருவினர் எனவும், செம்மலர்ப்பிறையும் சிறை அணி புனலும் சென்னிமேல் உடையர், எம் சென்னிமேல் உறைவார் தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ, தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழல் சேர, அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
4
|
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும் மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும் சிவந்த மலர் போலும் பிறையையும் தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும் எம் சென்னி மேல் உறைபவர் எனவும் தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல் வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார். | |
விண் உலாம் மதியம் சூடினர் எனவும், விரிசடை உள்ளது, வெள்ளநீர் எனவும், பண் உலாம் மறைகள் பாடினர் எனவும், பல புகழ் அல்லது பழி இலர் எனவும், எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
5
|
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும் அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும் இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும் பலவகையான புகழையே உடையவர் எனவும் பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார். | |
| Go to top |
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி, தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக, காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த, ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
6
|
அச்சிறுபாக்கதில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க ஒளிபொருந்திய மழுவோடு திருநீற்றை மேனிமேல் பூசி ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும் பகலும் பேய்க்கணங்களும் பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார். | |
ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகிக் கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும் கூவிளமலரும் நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர, ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
7
|
அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளையகிளி போன்ற அழகிய பார்வதிதேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை குளிர்ந்த இளமதி வில்வம் பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை எருக்கு முருக்கு மகிழ் இளவன்னி இலை ஆகியஇவை மணம் பரப்ப கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார். | |
கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர் முடி சுடர்விடக் கவரியும் குடையும் பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறை நுதலவர், தமைப் பெரியவர் பேண, பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரை எடுத்த திண்தோள்களை அடர்வித்து, அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
8
|
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி குடை பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். | |
நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலைக் கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்; தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு முடி உற, தங்கள் ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
9
|
அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும் அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு சந்தனம் கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து. | |
வாது செய் சமணும், சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர், ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்; வேதமும் வேத நெறிகளும் ஆகி, விமல வேடத்தொடு கமல மா மதி போல் ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
|
10
|
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும் தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர். | |
| Go to top |
மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப் பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்பதியவர் அதிபதி கவுணியர் பெருமான், கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை ஞானசம்பந்தன்-தமிழ் கொண்டு, அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே.
|
11
|
கருநிறம் பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும் புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப்பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத்தலைவனும் கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாதகருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர். | |