புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி, வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு, கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.
|
1
|
விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான் கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல் வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலைமாலையைச் சூடி வினைநீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார். | |
பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்- மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக் கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
|
2
|
பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும் பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும் மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும் ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்; தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
|
3
|
மண்ணக மக்கள் தொழவும் விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான் அலைகள் நிரம்பிய மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான். | |
மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல் அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணிஆய பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த, கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே.
|
4
|
பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகைஅழிக்க எண்ணிவந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான் அழகிய செயல்களோடு பழிபாவங்களை மனத்திலும் கருதா தவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள் நல்கி, சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்- பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் காணும் கடல் நாகைக்காரோணத்தானே.
|
5
|
ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து அடியவர்களுக்கு அருள் வழங்கி வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள்புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான் அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
| Go to top |
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு, வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல் ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த, கானல் கடல் நாகைக்காரோணத்தானே.
|
6
|
பன்றியின் பல் பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான் மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு, விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல் வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
|
7
|
இடையில் அழல்போலும் கொடியநாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான் மலைகள் மிதந்து வருவன போலக்கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண்தோள் இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான்- பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த, கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே.
|
8
|
மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான் வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த, பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச் செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.
|
9
|
திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும் நான்முகன் ஏத்தவும் தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும் பிறைமதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான் அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற, அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்; பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த, கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
|
10
|
நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும் பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும் நல்லவரல்லாத புத்தர்கள் பழிதூற்றவும் தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான். | |
| Go to top |
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம் கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே.
|
11
|
இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப்பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்கவானுலகை அடைவார்கள். | |