கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு- பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.
|
1
|
பறை கொட்டும் சீருக்கு ஏற்பப் பூதகணங்கள் முதலியன சூழக்கையின்கண் அனலேந்தி விருப்போடு நடனம் ஆடும் நல்லூர்ப் பெருமானைக் காலை மாலை இருபொழுதும் தவறாமல் வெறுப்பின்றி எழுச்சியோடு வணங்கி அன்பு பூண்ட மனத்தார்களைப் பாவம் அணுகாது. | |
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும் வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன, நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே.
|
2
|
ஊர்தியாக எருது ஒன்றிலேயே ஏறுபவனும் அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான் அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா. | |
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ, ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே.
|
3
|
இளம்பிறை முடியிற்சூடி ஒளி விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ தலையோட்டையே உண்கலனாகக் கொண்டு ஒவ்வோர் ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச்செல்லும் அறநெறியாளனாகிய நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அடையா. | |
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை, நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை, காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.
|
4
|
உலகியல் நெறி முறைகளைத் தான் பின்பற்றாது நீத்தவனும் நீங்காத தவத்தை உடையவனும் கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவனும் அந்நெறி நிற்பாரைக் காத்தருள் பவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானைக் கைகுவித்துத் தொழுதேத்தும் அடியவர்கட்கு இடரில்லை. | |
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை, தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர் போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.
|
5
|
தனது திருமேனியில் கூறாகக் கொண்டுள்ள உமையம்மையின் கணவனும் பாம்பணிந்த சடைகள் தாழ்ந்து தொங்க இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானை வேட்கை மிக்கவராய் அணுகி அவன் திருவடிகளைத் தொழும் தொண்டர்கள் இன்பம் பொருந்திய மனத்தவராய்ப் பலரும் புகழ உலகில் வாழ்வர். | |
| Go to top |
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை, செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர, சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே.
|
6
|
தன்னைக் கொல்ல வந்த மதம் பொருந்திய யானையை உமையம்மை அஞ்சுமாறு கொன்று அதன் தோலைப் போர்த்த நல்ல நெறியாளனாய் நல்லூர்ப் பெருமானாய் எல்லோரும் அடையத்தக்க முத்திநெறியாளனாய் விளங்கும் சிவபிரானை அடைந்து தங்களது அரிய துன்பங்கள் தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள் துக்கம் அறியார். | |
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும் நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா, தம் கை தலைக்கு ஏற்றி, ஆள் என்று அடிநீழல் தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.
|
7
|
எங்கள் தலைவனும் தேவர்களால் தொழுது போற்றப்படும் நம் பெருமானும் நல்லூரில் பிரிவின்றி எழுந்தருளியிருக்கும் தலைவனுமாய இறைவனை அடைந்து தம் கைகளை உச்சி மேல் குவித்து நாங்கள் உனக்கு அடிமை என்று கூறி அவனது திருவடி நீழலில் ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் இலராவர். | |
காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன் நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை, ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் தீபமனத்தார்கள்; அறியார், தீயவே.
|
8
|
மன்மதனது உருவஅழகை அழித்துக் கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணனது புகழைக் கெடுத்து விளங்கும் நல்லூரில் எழுந்தருளிய பெருமானை பாதுகாப்புக் கொண்ட மனத்தவர்களாய் இகழாது அவனைக் காணஎழும் தொண்டர்கள் தீபம் போன்ற ஞானஒளி நிலைத்த மனம் உடையவராவர். தீயனவற்றை அவர்கள் அறியார். | |
வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை, தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே.
|
9
|
செந்தாமரையில் விளங்கும் பிரமனும் உலகை அளந்த திருமாலும் நண்ணுதற்கு அரியவனாய் விளங்கும் நல்லூர்ப்பெருமானை குளிர்ந்த மலர்களைத்தூவி அவன் திருவடிகளைத் தொழுது வணங்க எண்ணும் அடியவர்களுக்கு இடுக்கண் இல்லை. | |
பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர், நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை, நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை, எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.
|
10
|
மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும் புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய் நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை. | |
| Go to top |
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன், நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை, வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.
|
11
|
குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பொருந்திய நீரை வேலியாக உடைய நல்லூரில் விளங்கும் பெருமான் இயல்புகளைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர். | |