நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!
|
1
|
திருநீறு அணிந்தவன். நீண்ட சடைமுடி மீது பெருகி வந்த கங்கை ஆற்றைத் தாங்கியவன். அழகமைந்த மெல்லிய தனங்களைக் கொண்ட உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன். அத்தகையோன் பொழில் சூழ்ந்த கோழம்பம் என்னும் தலத்தில் விடையூர்தியனாய் உள்ளான். `நும் துன்பங்கள் நீங்க வேண்டுமாயின் அவனை ஏத்துங்கள்`. | |
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய
கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே.
|
2
|
கருமைநிறம் பொருந்திய கண்டத்தினன். மான் கன்றை ஏந்திய கையினன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த கோழம்பத்தில் விளங்கும் செம்மையன். தேன், நெய், பால் முதலியவற்றை ஆடிய மெய்யினன். அவனை இடைவிடாது நினைப்பவர் மேல் வினைகள் மேவா. | |
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!
|
3
|
நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன். குற்றம் அற்ற இமையாநாட்டமுடைய யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன். வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன். விளக்கமான பொழில்கள் சூழ்ந்த கோழம்பம் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் நைந்து கெடுமாறு ஏத்துமின். | |
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய
விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம்
உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!
|
4
|
சடைமுடியை உடையவன். குளிர்ந்த தாமரை மலரில் விளங்கும் பிரமனின் தலையோட்டைக் கையில் ஏந்திய விடை ஊர்தியன். வேதமும் வேள்வியுமாய நன்மைகளை உடையவன். குளிர்ந்த பொழில்சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தனக்கு ஊராக உடையவன். உள்ளங்குளிர அவனை நினைவீர்களாக. | |
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி
தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!
|
5
|
மேகமாக இருந்து மழை பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். உமையம்மையை ஒருபாலாகக் கொண்டு மகிழ்ச்சிமிக்கவனாய் விளங்கும் புகழினன். செறிந்த பொழில்கள் சூழ்ந்த திருக்கோழம் பத்தைத்தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவன். நும் இடர்கள் நீங்க அவனை ஏத்துங்கள். | |
| Go to top |
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!
|
6
|
முற்காலத்தே ஆலின் நிழலில் இருந்து அறம் உரைத் தவன். மேலான ஒளிவடிவினன். பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் ஒருசேர வெந்தழியுமாறு செய்தவன். மணம் கமழும் திருக்கோழம்பத்தைக் கோயிலாகக் கொண்டவன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள். | |
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த
வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை,
கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய
நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!
|
7
|
எல்லோராலும் புகழப்படுபவன். அனல் வடிவான கணையைத் தொடுத்து முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவன். வேதமும் வேள்வியும் ஆனவன். தன்னைக் கொல்ல வந்த யானையை உரித்து அதன் தோலைப்போர்த்தவன். திருக்கோழம் பத்தில் எழுந்தருளிய மங்கலவடிவினன். நும் இடர் கெட அவனை ஏத்துவீராக. | |
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக்
குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச்
செற்றானை; சீர் திகழும் திருக்கோழம்பம்
பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.
|
8
|
விற்படையை உடைய வலிய இராக்கதர்களின் வலிய வேந்தனாகிய இராவணனைத் தன் அழகிய கால் விரலால் நசுக்கியவன். கொடிய காலனைச் செற்றவன். புகழ் விளங்கும் திருக்கோழம்பத்திற் பற்றுதல் உடையவன். அவன்மீது பற்றுக் கொள்வாரை வினைகள் பற்றா. | |
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை, பண்டங்கவேடம் பயின்றானை,
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்
கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே!
|
9
|
நீண்ட வடிவெடுத்த திருமாலும் பிரமனும் அறிய முடியாத வகையில் ஓங்கி நின்ற உருவத்தை உடையவன். பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் கோலம் பூண்டவன். மணம் கமழும் திருக்கோழம்பம் மேவிய இடபக்கொடியினன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள். | |
புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப்
பித்தரும், பேசுவ பேச்சு அல்ல; பீடு உடைக்
கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!
|
10
|
புத்த சமயத்தினரும், மயில் தோகையாலாகிய பீலியைக் கையில் கொண்டுள்ள பொய்ம்மொழி பேசும் பித்தர்களாகிய சமணர்களும் பேசுவன பயன்தரும் உண்மையான அறவுரைகளாகா. பெருமை பொருந்திய பூங்கொத்துக்கள் அலரும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பம் மேவிய அத்தனை அல்லல்கள் அகலப் போற்றுங்கள். | |
| Go to top |
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.
|
11
|
குளிர்ந்த நீர் மிகுந்த தண்ணிதான அழகிய தராய் என்னும் மாநகரில் தோன்றிய, எல்லோரிடமும் நட்புக்கொண்டு ஒழுகும் ஞானசம்பந்தன் சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த கோழம்பத்தைப் புகழ்ந்து போற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசைபொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை. | |