நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.
|
1
|
நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரைமலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன். சீர்விளங்கும் திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர். | |
மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர்
விதியானே! விதி உடை வேதியர்தாம் தொழும்
நெதியானே! நீர் வயல் சூழ் திருக்காறாயில்
பதியானே! என்பவர் பாவம் இலாதாரே.
|
2
|
பிறைமதியைச் சூடியவன். வரிகளை உடைய பாம்போடு ஊமத்தம் மலர் முதலியவற்றை அணிந்து நமக்கு ஊழை அமைப்பவன். விதிமுறைகளைப் பின்பற்றும் வேதியர்கள் வணங்கும் நிதியானவன். நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட திருக்காறாயில் எனப்படும் ஊரினன் என்று அவனைப் போற்றுவார் பாவம் இலராவர். | |
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர்
மண்ணானே! விண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே! கடிபொழில் சூழ் திருக்காறாயில்
எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே.
|
3
|
வீட்டுலகுக்கு உரியவன். தேவர்களாலும் போற்றி விரும்பப் பெறுமாறு மண்ணுலகில் வாழ்பவன். நிலவுலகில் வாழ்வோர்க்குக் கண் போன்றவன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்காறாயிலில் நாம் எண்ணுதற்கு ஏற்றவாறு எளிவந்திருப்பவன். இவ்வாறு அவன்புகழ் கூறுவோர் ஏதம் இலராவர். | |
தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே!
சேயானே! சீர் திகழும் திருக்காறாயில்
மேயானே! என்பவர்மேல் வினை மேவாவே.
|
4
|
நமக்குத் தாயும் தந்தையும் ஆகி அவ்விருவர் செய்யும் கடமைகளையும் புரிபவன். தன்மீது நல்லன்பு செலுத்துவோர்க்கு மிக அணிமையில் இருந்து அருள்பவன். அல்லாதவர்க்குச் சேய்மையில் இருப்பவன். புகழ் விளங்கும் திருக்காறாயில் என்னும் தலத்தில் மேவி இருப்பவன் என இவ்வாறு போற்றுபவர் மீது வினைகள் மேவா. | |
கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய
மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே! சீர் திகழும் திருக்காறாயில்
நிலையானே! என்பவர்மேல் வினை நில்லாவே.
|
5
|
எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன். கலைகளின் பயனாய்ச் சிறந்த சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின் முப்புரங்களைமாய்த்த வில்லை உடையவன். புகழ்மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை நிலையாகக் கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா. | |
| Go to top |
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு
ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும்
போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில்
நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே.
|
6
|
`நெறிகளின் வடிவாய் விளங்குபவன். கங்கையை அணிந்த செஞ்சடைமீது ஆடும் பாம்பு ஒன்றை ஏற்றவன். ஏழுலகில் வாழ்வோராலும் தேவர்களாலும் போற்றப்படுபவன். பொழில் விளங்கும் திருகாறாயிலில் நீறுபூசிய கோலத்தோடு விளங்குபவன்`, என்று இவ்வாறு கூறிப்போற்றுபவர்மேல் வினைகள் நில்லா. | |
சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள்
ஏத்தானே! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்
காத்தானே! கார் வயல் சூழ் திருக்காறாயில்
ஆர்த்தானே! என்பவர்மேல் இடர் அடராவே.
|
7
|
தீவினைகள் தேய்ந்து அறுமாறு செய்து நம்மை அவனோடு சேர்ப்பவன். தேவர்களால் போற்றப்படுபவன். நன்மாமுனிவர்கட்கு இடர் வாராது காப்பவன். மழைநீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்காறாயிலில் நிறைந்தவன். இவ்வாறு அவனைப் போற்றுவாரை வினைகள் வெல்லா. | |
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆக(ம்), முனிவர்க்கு இடர்
கெடுத்தானே! கேழ் கிளரும் திருக்காறாயில்
அடுத்தானே! என்பவர்மேல் வினை அடராவே.
|
8
|
காலனைக் காலால் கடிந்தவன். கயிலாயத்தைப் பெயர்த்த இராவணனுக்கு ஏதம் வருமாறும், முனிவர்கட்கு இடர் கெடுமாறும் செய்தவன். விளக்கமான திருக்காறாயிலில் எழுந்தருளியிருப்பவன் என இவ்வாறு போற்றுவாரை வினைகள் வெல்லா. | |
பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை
மறையானே! மாலொடு நான்முகன் காணாத
இறையானே! எழில் திகழும் திருக்காறாயில்
உறைவானே! என்பவர்மேல் வினை ஓடுமே.
|
9
|
இளம் பிறையைச் சூடியவன். தன்னை விரும்பிப் பாடப் பெறும் இன்னிசைப் பாடல் வடிவில் அமைந்த சாமகானமாகிய மறை மொழியை ஏற்றருள்பவன். திருமாலும் நான்முகனும் தேடி அறிய முடியாத இறைவன். அழகிய திருக்காறாயிலில் உறைபவன் என்று போற்றுபவர் மேல் வரும் வினைகள் ஓடும். | |
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும்
படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை;
கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில்
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே.
|
10
|
உலகில் வாழும் முடைநாற்றம் வீசும் சமணரும், சீவரம் என்னும் துவர் ஊட்டிய ஆடையை அணிந்த புல்லிய புத்தர் என்ற பாவிகளும் கூறும் பேச்சுக்களைக் கேட்பதால் விளையும் பயன் ஏதும் இல்லை. மணம் கமழும் திருக்காறாயில் என்னும் தலத்தைக் குடியாகக் கொண்டு அங்கு எழுந்தருளிய இறைவனை வழிபட்டு வாழ்வோர்க்குக் குற்றம் ஏதும் இல்லை. | |
| Go to top |
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.
|
11
|
புகழ் பொருந்தியதும் அழகு நிறைந்ததுமான திருக்காறாயிலில் எழுந்தருளிய, ஆராய்ந்து கூறப்படும் புகழ் மொழிக்குப் பொருளான இறைவன் திருவடிகளை ஏத்தி, அவன் அருள்பெற்ற, நீர் பாய்ந்து வளம் செய்யும் காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை இயன்ற அளவில் இசையோடு பாடி ஏத்துவார் வானுலகு ஆள்வர். | |