சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=VWYHKdcEfME   Add audio link Add Audio

கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்,
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.

1
தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும்
இடம்
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து,
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

2
ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.

வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ,
ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம்
யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும்
ஒழியாமே,
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

3
தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.

மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம்
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருது அழித்தான்_ புள்ளிருக்கு வேளூரே.

4
பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி ஆகப்
பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம் ஆக,
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

5
வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.
Go to top

திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே,
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி
வந்தானைப்
புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளூரே.

6
சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.

அத்தியின் ஈர் உரி மூடி, அழகு ஆக அனல் ஏந்தி,
பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து,
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

7
யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.

பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
எண் இன்றி முக்கோடிவாணாள் அது உடையானைப்
புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.

8
பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து
அவியச்
சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம்
ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே.

9
தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும்இடம் புள்ளிருக்குவேளூர்.

கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிது ஆய் உறையும்
இடம்
விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று,
இராமற்காப்
புடைத்து அவனைப் பொருது அழித்தான்
ள்ளிருக்குவேளூரே.

10
சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.
Go to top

செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து
ஆவான்,
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை,
கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம், மறுபிறப்பே.

11
குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
2.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,
Tune - சீகாமரம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
5.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள் எருக்கு அரவம் விரவும்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
6.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
Tune - திருத்தாண்டகம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000