சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஆமாத்தூர் - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=WRhi23nltl0   Add audio link Add Audio

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?

1
தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும், யானைத் தோலைமேல் ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?

கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்! என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.

2
யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும், வானுலகில் திரிந்து இடர் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும், முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின் புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம் தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர்.

பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.

3
பாம்பை இடையில் கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை.

கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள
பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே

4
வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதிதேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.

பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே?

5
பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.
Go to top

சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்
காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான்,
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.

6
பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்டு அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய மும்மதில்களை எய்து அழித்தவனும், நெற்றிக்கண்ணனும் எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான் தேவர்கள் தலைவணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன்.

மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

7
யாவராலும் ஒழிக்கப்படாத கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொருபாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக்கருதப்படுவர்.

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே

8
தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்தநாள் திருவாதிரையாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.

புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே?

9
கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கையாமோ?

பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார,
கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே?

10
மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன் தலைமைத்தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத்தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.
Go to top

ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

11
படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட கொச்சைவயம் என்னும் சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய புகழை உடைய ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆமாத்தூர்
2.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துன்னம் பெய் கோவணமும் தோலும்
Tune - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
2.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குன்ற வார்சிலை, நாண் அரா,
Tune - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
7.045   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருஆமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000