நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.
|
1
|
அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க்குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர். | |
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்!
மணி மல்கு கண்டத்தீர்! அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்!
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும்
தலைச்சங்கை,
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.
|
2
|
துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர். | |
சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள் ஏற்று ஊர்தியீர்!
நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த,
தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும்
தலைச்சங்கை,
ஏர் கொண்ட கோயிலே கோயில் ஆக இருந்தீரே.
|
3
|
சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர். | |
வேடம் சூழ் கொள்கையீர்! வேண்டி நீண்ட வெண்திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர்! தலைச்சங்கை,
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடித் தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
4
|
தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச்சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடிதோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். | |
சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண் நீறு ஆடலீர்!
நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடைமேல் நீர் ஏற்றீர்!
ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.
|
5
|
சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச்சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாக் கொண்டுள்ளீர். | |
| Go to top |
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று, ஐந்து
புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார், போற்று ஓவார்,
சல நீதர் அல்லாதார், தக்கோர், வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே.
|
6
|
நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூதவடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாததக்கோர் வாழும் தலைச்சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர். | |
அடி புல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து, ஓர் அனல் ஏந்தி,
கொடி புல்கு மென்சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்!
பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச்சங்கை,
கடி புல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.
|
7
|
திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடிபோன்ற மென்மையான சாயலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடிபூசிப் பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரிநூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். | |
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென் இலங்கைக்
கோமானை,
வரை ஆர்ந்த தோள் அடர, விரலால் ஊன்றும்
மாண்பினீர்!
அரை ஆர்ந்த மேகலையீர்! அந்தணாளர் தலைச்சங்கை,
நிரை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நினைந்தீரே.
|
8
|
திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கிவாழும் தலைச்சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர். | |
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும், பைந்தாமரையானும்,
போய் ஓங்கிக் காண்கிலார்; புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கை,
சேய் ஓங்கு கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.
|
9
|
பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காணஇயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப்படுபவரே! முத்தீவளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். | |
அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர் சாக்கீயர்,
தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்!
தலை ஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை,
நிலை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நின்றீரே.
|
10
|
அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங்களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர். | |
| Go to top |
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை, உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.
|
11
|
குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர். | |