உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.
|
1
|
நஞ்சை உண்டவனே! உமைபங்கா! என்று கூறி மனத்தில் தியானித்துத் தொண்டராகிப் பணிகள் புரியும் அடியவர்களைத் துயரங்கள் நெருங்காவண்ணம் அவற்றை அறத்தீர்த்தருளும் எந்தையினது ஊர், வெண்டாமரை மலர்களில் கருவண்டுகள் யாழ் போல ஒலித்துத் தேனுண்ணும் திருவெண்காடாகும். | |
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.
|
2
|
நாதனாகிய பெருமான் நம்மை ஆள்வான் என்று அவன்பெயரைப் பல முறையும் கூறி ஏத்திப் பல நாள்கள் திருவடிகளைப் பரவும் அடியவர்க்கு வரும் குற்றங்களைத் தீர்த்தருள எழுந்தருளியிருப்பவனது ஊர், வேதஒலிகளைக் கிளிகள் பேசும் திருவெண்காடாகும். | |
தண் முத்து அரும்பத் தடம் மூன்று உடையான் தனை
உன்னி,
கண் முத்து அரும்பக் கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப, உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும்
வெண்காடே.
|
3
|
குளிர்ந்த முத்துக்கள் அரும்பும் முக்குளங்களைத் தீர்த்தங்களாகக் கொண்டுள்ளவனை நினைந்து கண்களில் முத்துக்கள் போல நீர் அரும்ப அவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைதொழுவார்களின் உள்ளங்களில் முத்துக்கள் போன்று தூய நன்மை தோன்ற உவகைதரும் இறைவனது ஊர் வெண்மையான முத்துக்கள் போன்ற அருவியின் புனல் வந்து அலைக்கும் திருவெண்காடாகும். | |
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே,
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.
|
4
|
தலையில் நரை வந்து உடல் நாளுக்கு நாள் குறுகி மூப்பு நணுகுதற்குமுன், உரை வேறாகாது நினைபவர் உள்ளத்தே மெலிந்து கரைந்து ஒழியாதவாறு தன்னைத் தோற்றுவிப்பவனது ஊர், மணம் கமழும் தாமரை மலரில் அன்னங்கள் தங்கிமகிழும் திருவெண்காடாகும். | |
பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்
தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே.
|
5
|
இளம்பிறையையும் கங்கையையும் முடியிற் சூடிய பெருமான் என்று மனத்தில் நினைந்து தொழுபவர்களின் பெருகிய நோய்களைத் தள்ளிப் போகுமாறு செய்தருளும் தலைவனது ஊர், வெண்ணிறமான உள்கோடுகளை உடைய சங்குகள் உலவித்திரியும் திருவெண்காடாகும். | |
| Go to top |
ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ! என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு
எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.
|
6
|
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும். | |
கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து, அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்கு
ஆய்
ஆள்வித்து, அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.
|
7
|
உயிர்கவர்வதில் வித்துப் போல்பவனாகிய கூற்றுவனை, சிவபிரானை நினையும் குறிப்பினால் மாள்வித்து அச்சிவபிரானை மகிழ்வொடு ஏத்திய சுவேதகேது முனிவரை அமருலகம் ஆளச்செய்து அணிசெய்தவனது ஊர் வேள்விப்புகையால் வானம் இருள்கூர்கின்ற திருவெண்காடு ஆகும். | |
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ, வரை ஊன்றி,
முளை ஆர் மதியம் சூடி, என்றும் முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான்; எந்தை; ஊர்போலும்
விளை ஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.
|
8
|
வளையலணிந்த முன்கையை உடைய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்தகயிலை மலையைக் கால்விரல் ஊன்றி நெரித்து, முளைமதிசூடிய இறைவனே என அடியவர் முப்போதும் தளராது ஏத்துமாறு எழுந்தருளிய எந்தையாகிய சிவபெருமானது ஊர், விளைவைக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருவெண்காடாகும். | |
காரியானோடு, கமலமலரான், காணாமை
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்! என்பார்கட்கு
உரியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.
|
9
|
கரிய திருமாலும் கமலமலரில் உறையும் நான் முகனும் அடி முடி காண இயலாதவாறு எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே! என்பார்கட்கு உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர், வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும். | |
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த,
ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.
|
10
|
பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப்பரிவுடன் ஏத்த ஆடும் பாம்பை இடையிற்கட்டியுள்ளவனாகி, அறிவற்ற மூடர்களாகிய சமண் சாக்கியர்கள் உணர இயலாத வேடம் கொண்ட பெருமானது பதி வெண்காடாகும். | |
| Go to top |
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.
|
11
|
விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர். | |