சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் காட்டும் நுதலானும், கனல்
பண் - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0
2.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
பண் - காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=t9D2S0oRqYQ
3.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=caxzZfneYag
5.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண் காட்டிப் படிஆய தன்
பண் - திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=O8oFU5IjueQ
6.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் மேனித் தூநீறு
பண் - திருத்தாண்டகம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=hFvs40KR2kA
7.006   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   படம் கொள் நாகம் சென்னி
பண் - இந்தளம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3EHC8lAB16w

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.048   கண் காட்டும் நுதலானும், கனல்  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )

மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

[1]
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே.

[2]
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.

[3]
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்,
மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,
தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

[4]
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.

[5]
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

[6]
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.

[7]
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.

[8]
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.

[9]
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்;
வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!

[10]
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.061   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.

[1]
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

[2]
தண் முத்து அரும்பத் தடம் மூன்று உடையான் தனை
உன்னி,
கண் முத்து அரும்பக் கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப, உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும்
வெண்காடே.

[3]
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே,
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.

[4]
பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்
தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே.

[5]
ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ! என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு
எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

[6]
கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து, அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்கு
ஆய்
ஆள்வித்து, அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.

[7]
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ, வரை ஊன்றி,
முளை ஆர் மதியம் சூடி, என்றும் முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான்; எந்தை; ஊர்போலும்
விளை ஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.

[8]
காரியானோடு, கமலமலரான், காணாமை
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்! என்பார்கட்கு
உரியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

[9]
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த,
ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.

[10]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.015   மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட நின்ற எம் இறை;
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,
அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!

[1]
படை உடை மழுவினர், பாய் புலித்தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்,
விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய,
சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!

[2]
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய,
ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!

[3]
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்,
வேழம் அது உரித்த, வெண்காடு மேவிய,
யாழினது இசை உடை, இறைவர் அல்லரே!

[4]
பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை,
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய,
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!

[5]
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ, அல்லல் இல்லையே.

[6]
நயந்தவர்க்கு அருள் பல நல்கி, இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய,
பயம் தரு மழு உடை, பரமர் அல்லரே!

[7]
மலை உடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி
தலை உடன் நெரித்து, அருள் செய்த சங்கரர்;
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய,
அலை உடைப் புனல் வைத்த, அடிகள் அல்லரே!

[8]
ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும் ஆய்த்
தேடவும், தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய,
ஆடலை அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!

[9]
போதியர், பிண்டியர், பொருத்தம் இ(ல்)லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ, அல்லல் இல்லையே.

[10]
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்,
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.049   பண் காட்டிப் படிஆய தன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும்,
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

[1]
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்,
ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார்,
வெள்ளியன், கரியன், பசு ஏறிய
தெள்ளியன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!

[2]
ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே,
வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ!
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்-
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!

[3]
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே;
பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம்
திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

[4]
பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன்
உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள்
கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!

[5]
கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்;
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்;
சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்-
காடனார்; அடியே அடை, நெஞ்சமே!

[6]
தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்;
புரித்த புன் சடையான்; கயவர் புரம்
எரித்தவன்; மறைநான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன்(ன்), உறை வெண்காடு அடை, நெஞ்சே!

[7]
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
சிட்டன், ஆதி என்று(ச்) சிந்தை செய்யவே,
நட்டமூர்த்தி-ஞானச்சுடர் ஆய் நின்ற
அட்டமூர்த்திதன்-வெண்காடு அடை, நெஞ்சே!

[8]
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!

[9]
பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர்,
சேலை ஆடிய கண் உமை பங்கனார்,
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே.

[10]
இரா வணம் செய, மா மதி பற்று அவ், ஐ-
யிரா வணம்(ம்) உடையான் தனை உள்குமின்!
இராவணன் தனை ஊன்றி அருள்செய்த
இராவணன் திரு வெண்காடு அடைமினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.035   தூண்டு சுடர் மேனித் தூநீறு  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி, சூலம் கை ஏந்தி, ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு, பொறி அரவம் காதில் பெய்து, பொன்சடைகள் அவை தாழ, புரி வெண்நூலர்,
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார்,
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி;   வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[1]
பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர்; பாதாளம் ஏழ்   உருவப் பாய்ந்த பாதர்;
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர்; ஏழ் உலகும் ஆய் நின்ற ஏகபாதர்;
ஓதத்து ஒலி மடங்கி, ஊர் உண்டு ஏறி, ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய(ப்)பின்,
வேதத்து ஒலி கொண்டு, வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[2]
நென்னலை ஓர் ஓடு ஏத்திப் பிச்சைக்கு என்று வந்தார்க்கு, வந்தேன் என்று இல்லே புக்கேன்;
அந் நிலையே நிற்கின்றார்; ஐயம் கொள்ளார்; அருகே   வருவார் போல் நோக்குகின்றார்;
நும் நிலைமை ஏதோ? நும் ஊர்தான் ஏதோ? என்றேனுக்கு ஒன்று ஆகச் சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[3]
ஆகத்து உமை அடக்கி, ஆறு சூடி, ஐவாய் அரவு அசைத்து, அங்கு ஆன் ஏறு ஏறி,
போகம் பல உடைத்து ஆய்ப் பூதம் சூழ, புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்;
பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி, பரிசு அழித்து, என் வளை கவர்ந்தார், பாவியேனை;
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[4]
கொள்ளைக் குழைக் காதின் குண்டைப்பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட,
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர்; நான் தெரியமாட்டேன், மீண்டேன்;
கள்ளவிழி விழிப்பார், காணாக் கண்ணால்; கண்ணுளார் போலே கரந்து நிற்பர்;
வெள்ளச் சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு   மேவிய விகிர்தனாரே.

[5]
தொட்டு இலங்கு சூலத்தர்; மழுவாள் ஏந்தி, சுடர்க் கொன்றைத்தார் அணிந்து, சுவைகள் பேசி,
பட்டி வெள் ஏறு ஏறி, பலியும் கொள்ளார்; பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால்;
கட்டு இலங்கு வெண்நீற்றர்; கனலப் பேசிக் கருத்து அழித்து வளை கவர்ந்தார்; காலை மாலை
விட்டு இலங்கு சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[6]
பெண்பால், ஒருபாகம்; பேணா வாழ்க்கை; கோள் நாகம் பூண்பனவும்; நாண் ஆம் சொல்லார்;
உண்பார், உறங்குவார், ஒவ்வா; நங்காய்! உண்பதுவும் நஞ்சு அன்றே, உலோபி! உண்ணார்;
பண்பால் அவிர்சடையர் பற்றி நோக்கி, பாலைப் பரிசு அழிய, பேசுகின்றார்
விண்பால் மதி சூடி, வேதம் ஓதி, வெண்காடு   மேவிய விகிர்தனாரே.

[7]
மருதங்களா மொழிவர், மங்கையோடு; வானவரும் மால் அயனும் கூடி, தங்கள்
சுருதங்களால்-துதித்து, தூநீர் ஆட்டி, தோத்திரங்கள் பல சொல்லி, தூபம் காட்டி,
கருதும் கொல் எம்பிரான், செய் குற்றேவல்? என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து,
விகிர்தங்களா நடப்பர், வெள் ஏறு ஏறி; வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[8]
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார், பொறி அழல் ஆய் நின்றான் தன்னை;
உள்ளானை; ஒன்று அல்லா உருவினானை; உலகுக்கு ஒரு விளக்கு ஆய் நின்றான் தன்னை;
கள் ஏந்து கொன்றை தூய், காலை மூன்றும் ஓவாமே, நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[9]
மாக் குன்று எடுத்தோன்தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்கும் துணைத் தேவர் எல்லாம் நிற்க நொடிவரையில் நோவ விழித்தான் தன்னை;
காக்கும் கடல் இலங்கைக் கோமான் தன்னைக் கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி,
வீக்கம் தவிர்த்த விரலார்போலும் வெண்காடு   மேவிய விகிர்தனாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.006   படம் கொள் நாகம் சென்னி  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,
அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்;
மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[1]
இழித்து உகந்தீர், முன்னை வேடம்; இமையவர்க்கும் உரைகள் பேணாது,
ஒழித்து உகந்தீர்; நீர் முன் கொண்ட உயர் தவத்தை, அமரர் வேண்ட,
அழிக்க வந்த காமவேளை, அவனுடைய தாதை காண,
விழித்து உகந்த வெற்றி என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[2]
படைகள் ஏந்தி, பாரிட(ம்)மும் பாதம் போற்ற, மாதும் நீரும்,
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர்; உண்மை அன்றே!
சடைகள் தாழக் கரணம் இட்டு, தன்மை பேசி, இல் பலிக்கு
விடை அது ஏறி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[3]
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்;
கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர்; வான நாடர் மருவி ஏத்த,
விண் உளீராய் நிற்பது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[4]
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு, தொண்டர் ஏவல் செய்ய,
நடம் எடுத்து ஒன்று ஆடிப் பாடி, நல்குவீர்; நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார் கடல் வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே!.

[5]
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப்
பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி,
வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[6]
காதலாலே கருது தொண்டர் காரணத்தீர் ஆகி நின்றே,
பூதம் பாடப் புரிந்து, நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்;
நீதி ஆக ஏழில் ஓசை நித்தர் ஆகி, சித்தர் சூழ,
வேதம் ஓதித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[7]
குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை மாதர் கங்கை, நாகம்,
விரவுகின்ற சடை உடையீர்; விருத்தர் ஆனீர்; கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்; பாகம் ஆய மங்கை அஞ்சி
வெருவ, வேழம் செற்றது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[8]
மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்?
நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய
வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

[9]
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்-
அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list