நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த, நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள், திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே.
|
1
|
நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின் ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும் மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும். | |
விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்;
சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக வைத்த சோதி; பதிதான்
மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும், வயல்சூழ்,
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற, கொச்சைவயமே.
|
2
|
விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும், ஒப் பற்ற நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும், சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகிய வற்றைப் பொருந்தச் சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரைமலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சை வயமாகும். | |
பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன், இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை, கோலு கனகக்
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது, கொச்சைவயமே.
|
3
|
படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம். மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப் பறவைகள் வேதங்கள் ஓதுவதுமாகிய கொச்சைவயமாகும். | |
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற சிந்தை முடுகி,
பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய, வாளை குழுமிக்
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே.
|
4
|
எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலா னோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு விளக்குகளை வரி சையாக ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவ பிரானது பதி, செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும். | |
பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக் கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்), இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே.
|
5
|
பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின் மருகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக்கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சை வயமாகும். | |
| Go to top |
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த நகர்தான்
கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார், நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு கொச்சைவயமே.
|
6
|
புலித்தோலையும் கோவணத்தையும், தான் பெற்றுடைய ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப் பொழுதில் உலகை நலிவு செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும். | |
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய,
பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும் ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி தேடு கொச்சைவயமே.
|
8
|
மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றியவனும்,பேய்களோடு உடனாடி மகிழ் பவனும் ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல் குலை உடைய மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத் தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும். | |
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது உண்ட மாலும், இகலி,
கண்டிட ஒண்ணும் என்று கிளறி, பறந்தும், அறியாத சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே.
|
9
|
வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல் எழுந் தருளிய பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும் பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய் நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ண வும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள் வயலிடையே மலரும் கொச்சைவயமாகும். | |
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு சீவரத்தின் உடையார்,
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர,
செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே.
|
10
|
கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும் அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும், புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளை யாடவல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டருளும் பரமனாகிய சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம் மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும். | |
| Go to top |
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே.
|
11
|
எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி மயமான திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக் கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறை வற்ற ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப் பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞான வடிவினராய் வீற்றிருப்பர். | |