சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=4-qqCFEZS0E
Audio: https://sivaya.org/audio/2.083 NeelaMaaMidatran.mp3
2.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காரைகள், கூகை, முல்லை, கள,
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
Audio: https://www.youtube.com/watch?v=-hsh2WlPosg
2.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேய் உறு தோளி பங்கன்,
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0
2.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரையினில் வந்த பாவம், உணர்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=axSzv-rL_iM
2.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RK-BhZK3vkU
2.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துளி மண்டி உண்டு நிறம்
பண் - பியந்தைக்காந்தாரம்   (தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qfep3aaid6U
2.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=AezGyWRib9k
Audio: https://www.youtube.com/watch?v=DB8qB3kmj4U
2.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=uu81f7lC1h8
Audio: https://sivaya.org/audio/2.090 EnthaiIsan EmPerumaan.mp3
2.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vo5mWNGHwtk
2.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பட்டம், பால்நிற மதியம், படர்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nu1wdo_PEPE
2.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புரை செய் வல்வினை தீர்க்கும்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=C6ObhpNLQ3E
2.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சாகை ஆயிரம் உடையார், சாமமும்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
2.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடல் வண்டு அறை கொன்றை,
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) அரைசிலிநாதர் பெரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5WKav8ehvVA
2.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
பண் - பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=A_oEniZiv-M
4.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிவன் எனும் ஓசை அல்லது,
பண் - பியந்தைக்காந்தாரம்   (பொது - சிவனெனுமோசை )
7.076   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொருவனார்; புரிநூலர்; புணர் முலை
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருவாஞ்சியம் சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=1UqbekXfyC4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.083   நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருக்கொச்சைவயம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த,
நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள்,
திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு
ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு
கொச்சைவயமே.

[1]
விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல
விகிர்தத்து உருக் கொள் விமலன்;
சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக
வைத்த சோதி; பதிதான்
மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து
வைகும், வயல்சூழ்,
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும்
வளர்கின்ற, கொச்சைவயமே.

[2]
பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன்,
இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர்
சோலை, கோலு கனகக்
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது,
கொச்சைவயமே.

[3]
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற
சிந்தை முடுகி,
பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற
பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய,
வாளை குழுமிக்
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன
வளர்கின்ற கொச்சைவயமே.

[4]
பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக்
கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்),
இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர்
தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற
கொச்சைவயமே.

[5]
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக
உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த
நகர்தான்
கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார்,
நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு
கொச்சைவயமே.

[6]
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன்
முடியோடு தோள்கள் நெரிய,
பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு
உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும்
ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி
தேடு கொச்சைவயமே.

[8]
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது
உண்ட மாலும், இகலி,
கண்டிட ஒண்ணும் என்று கிளறி, பறந்தும், அறியாத
சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை
தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு
கொச்சைவயமே.

[9]
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு
சீவரத்தின் உடையார்,
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து
உருக் கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று
மலர,
செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு
கொச்சைவயமே.

[10]
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள்
ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா
இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா
இருப்பது அறிவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.084   காரைகள், கூகை, முல்லை, கள,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருநனிப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு பர்வதராசபுத்திரி உடனுறை அருள்மிகு நற்றுணையப்பர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் அது தான் நனிபள்ளி எனச் சொல்லக் கேட்டுக் காரைகள் கூகைமுல்லை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.
காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர்
தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய
சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள,
வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி
போலும்; நமர்கா

[1]
சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர்
திங்கள் கண்ணி, அயலே
இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை,
இறைவன்(ன்) இடம் கொள் பதிதான்
மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம்
நாறும் நீலம் மலரும்,
நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை
நனிபள்ளி போலும்; நமர்கா

[2]
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடு இலாத பெருமான்,
கறுமலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை, இடம் ஆய
காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு
போது அலர்ந்த விரை சூழ்
நறுமலர் அல்லி பல்லி, ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி
போலும்; நமர்கா

[3]
குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு, இலங்கு
தலைமாலையோடு குலவி,
ஒளிர் தரு திங்கள் சூடி, உமை பாகம் ஆக உடையான்
உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட
பெடைவண்டு தானும் முரல,
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனி
பள்ளிபோலும்; நமர்கா

[4]
தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு
நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம்
ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர்
தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும்
நனிபள்ளி போலும்; நமர்கா

[5]
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து, மலையான்
மடந்தை மணிபொன்
ஆகம் ஓர் பாகம் ஆக, அனல் ஆடும் எந்தை பெருமான்
அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும், சிலம்ப அகில் உந்தி
ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும்,
நனிபள்ளிபோலும்; நகர்கா

[6]
தகை மலி தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம், கொடு
கொட்டி வீணை முரல,
வகை மலி வன்னி, கொன்றை, மதமத்தம், வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல்,
பணிவார்கள் பாடல், பெருகி,
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி
போலும்; நகர்கா

[7]
வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா
அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான்
உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற
நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
நனிபள்ளி போலும்; நமர்கா

[8]
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை
சீர்மை நினையார்,
அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத
அண்ணல், நகர்தான்
புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை,
புனை கொன்றை, துன்று பொதுள
நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்;
நமர்கா

[9]
அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க! என்று கையில் இட
உண்டு பட்ட அமணும்,
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர்
குணம் இன்றி நின்ற வடிவும்,
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின்
விடையான் உகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
நனிபள்ளிபோலும்; நமர்கா

[10]
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி
என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி
ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்
இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை
கெடுதல் ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.085   வேய் உறு தோளி பங்கன்,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[2]
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[3]
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[4]
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[5]
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[6]
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[7]
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[8]
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

[9]
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
மிகவே.

[10]
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.086   உரையினில் வந்த பாவம், உணர்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருநாரையூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி )
உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!

[1]
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய்
ஒருங்கும் உயரும்
வான் அடைகின்ற வெள்ளைமதி சூடு சென்னி விதி ஆன
வேத விகிர்தன்,
கான் இடை ஆடி, பூதப்படையான், இயங்கு விடையான்,
இலங்கு முடிமேல்
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல், நண்ணு திரு
நாரையூர் கைதொழவே.

[2]
ஊர் இடை நின்று வாழும் உயிர் செற்ற காலன், துயர்
உற்ற தீங்கு விரவி,
பார் இடை மெள்ள வந்து, பழி உற்ற வார்த்தை ஒழிவு
உற்ற வண்ணம், அகலும்
போர் இடை அன்று, மூன்று மதில் எய்த ஞான்று, புகழ்
வான் உளோர்கள் புணரும்
தேர் இடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு
நாரையூர் கைதொழவே.

[3]
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற,
உற்ற உலகின்
தாய் உறு தன்மை ஆய, தலைவன் தன் நாமம் நிலை ஆக
நின்று மருவும்
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி, கோல விடம்
உண்ட கண்டன், முடிமேல்
தேய் பிறை வைத்து உகந்த சிவன், மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[4]
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும்; தவம் ஆய
தன்மை வரும் வான்
மிசையவர்; ஆதி ஆய திருமார்பு இலங்கு விரிநூலர்;
விண்ணும் நிலனும்
இசையவர், ஆசி சொல்ல; இமையோர்கள் ஏத்தி;
அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்ற, நின்ற சிவன்; மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[5]
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம்
உணர்வு ஆக்கும்; உண்மை உலகில்
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும்; நெஞ்சில்
நிறைவு ஆற்றும்; நேசம் வளரும்
மறை வளர் நாவன், மாவின் உரி போர்த்த மெய்யன்,
அரவு ஆர்த்த அண்ணல், கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற
திரு நாரையூர் கைதொழவே.

[6]
தனம் வரும்; நன்மை ஆகும்; தகுதிக்கு உழந்து வரு திக்கு
உழன்ற உடலின்
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று, நினைவு
ஒன்று சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம், மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன்
தெரிந்த, அவுணர்
சினம் ஒரு கால் அழித்த, சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[7]
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி
அஞ்சும்; ஆதல் உற, நீர்
மருமலர் தூவி, என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு
இலாத கடலின்
அரு வரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய,
தடக்கை முடிகள்,
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[8]
வேறு உயர் வாழ்வு தன்மை; வினை; துக்கம், மிக்க பகை
தீர்க்கும்; மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க, நின்ற கரவைக்
கரந்து, திகழும்
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும்
நேட, எரி ஆய்ச்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[9]
மிடை படு துன்பம் இன்பம் உளது ஆக்கும்; உள்ளம்
வெளி ஆக்கும்; முன்னி உணரும்,
படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி
பாடி ஆடி பெருமை!
உடையினை விட்டு உளோரும், உடல் போர்த்து
உளோரும், உரை மாயும் வண்ணம் அழிய,
செடி பட வைத்து, உகந்த சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[10]
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
என்பர், செம்மையினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.087   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசர் திருவடிகள் போற்றி )
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[1]
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர்
நாணி பூண, வரையில்
கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
அமரர்க்கு அளித்த தலைவன்;
மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
நம்பன் அவனே.

[2]
சூடக முன்கை மங்கை ஒரு பாகம் ஆக, அருள்
காரணங்கள் வருவான்;
ஈடு அகம் ஆன நோக்கி, இடு பிச்சை கொண்டு, படு
பிச்சன் என்று பரவ,
தோடு அகம் ஆய் ஓர் காதும், ஒரு காது இலங்கு குழை
தாழ, வேழ உரியன்
நாடகம் ஆக ஆடி, மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன்
அவனே.

[3]
சாயல் நல் மாது ஒர்பாகன்; விதி ஆய சோதி; கதி ஆக
நின்ற கடவுள
ஆய் அகம் என்னுள் வந்த, அருள் அருள் ஆய,
செல்வன்; இருள் ஆய கண்டன்; அவனித்
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்
கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி, மறையோர்கள் பேணும்
நறையூரில் நம்பன் அவனே.

[4]
நெதி படு மெய் எம் ஐயன்; நிறை சோலை சுற்றி நிகழ்
அமபலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்; எமர் சுற்றம்
ஆய இறைவன்;
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து, விடை ஏறி
இல் பலி கொள்வான்
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில்
நம்பன் அவனே.

[5]
கணிகை ஒர் சென்னி மன்னும், மது வன்னி கொன்றை
மலர் துன்று செஞ்சடையினான்;
பணிகையின் முன் இலங்க, வரு வேடம் மன்னு பல ஆகி
நின்ற பரமன்;
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருள்
ஆன ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில்
நம்பன் அவனே.

[6]
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும், அங்கம் அவை ஆர,
ஆடல் அரவம்
மிளிர்தரு கை இலங்க, அனல் ஏந்தி ஆடும் விகிர்தன்;
விடம் கொள் மிடறன்
துளி தரு சோலை ஆலை தொழில் மேவ, வேதம் எழில்
ஆர, வென்றி அருளும்,
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும், நறையூரில்
நம்பன் அவனே.

[7]
அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும்
சிலம்பொடு இசைய,
கடல் இடை நஞ்சம் உண்டு கனிவு உற்ற கண்டன் முனிவு
உற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை
கேட்டு இரங்கி, ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[8]
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி,
நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
மைத் திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
அவனே.

[9]
துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்
தாமும், அல்ல சமணும்,
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான்;
பிறங்கு சடையன்
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண, முறை மாதர்
பாடி மருவும்
நவமணி துன்று கோயில், ஒளி பொன் செய் மாட
நறையூரில் நம்பன் அவனே.

[10]
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
செய்யும், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.088   துளி மண்டி உண்டு நிறம்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் தென்திருமுல்லைவாயில் ; (திருத்தலம் அருள்தரு கோதையம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனநாதர் திருவடிகள் போற்றி )
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.

[1]
பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன், அயனைப்
படைத்த பரமன்,
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க
நின்ற அரன், ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம்
மோத வெருவி,
தெருவத்தில் வந்து, செழு முத்து அலைக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.

[2]
வாராத நாடன், வருவார் தம் வில்லின் உரு மெல்கி
நாளும் உருகில்
ஆராத இன்பன், அகலாத அன்பன், அருள் மேவி நின்ற
அரன், ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை
பிரியாள்
தீராத காதல் நெதி நேர, நீடு திரு முல்லை வாயில்
இதுவே.

[3]
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு
மூன்றொடு ஏழும் உடன் ஆய்,
அன்று இன்றொடு என்றும், அறிவு ஆனவர்க்கும்
அறியாமை நின்ற அரன் ஊர்
குன்று ஒன்றொடு ஒன்று, குலை ஒன்றொடு ஒன்று, கொடி
ஒன்றொடு ஒன்று, குழுமிச்
சென்று, ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு
முல்லைவாயில் இதுவே.

[4]
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன், விடை
நாளும் ஏறு குழகன்,
நம்பன், எம் அன்பன், மறை நாவன், வானின் மதி ஏறு
சென்னி அரன், ஊர்
அம்பு அன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி
கோபுரங்கள், அழகு ஆர்
செம்பொன்ன செவ்வி தரு மாடம், நீடு திரு முல்லை
வாயில் இதுவே.

[5]
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட
ஒருவன்,
ஆன் ஏறு அது ஏறி, அழகு ஏறும் நீறன், அரவு ஏறு
பூணும் அரன், ஊர்
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து, குயில் ஏறு
சோலை மருவி,
தேன் ஏறு மாவின் வளம் ஏறி, ஆடு திரு முல்லை வாயில்
இதுவே.

[6]
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற
நிமலன்;
அஞ்சு ஆடு சென்னி, அரவு ஆடு கையன்; அனல் ஆடும்
மேனி அரன்; ஊர்
மஞ்சு ஆரும் மாடமனை தோறும், ஐயம் உளது என்று
வைகி வரினும்,
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.

[7]
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும்
இற்று நெரிய,
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன்;
எங்கள் அரன்; ஊர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற
பொன்னி வடபால்,
திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திரு முல்லை
வாயில் இதுவே.

[8]
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரிநூலன்;
வேதமுதல்வன்,
பால் ஆடு மேனி கரியானும், முன்னியவர் தேட நின்ற
பரன்; ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல்
வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள, மல்கு திரு முல்லை
வாயில் இதுவே.

[9]
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன்; நம் நம்பன்;
அடியே
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர், அமண், மாய
நின்ற அரன்; ஊர்
வனம் மல்கு கைதை, வகுளங்கள் எங்கும், முகுளங்கள்
எங்கும் நெரிய,
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லை
வாயில் இதுவே.

[10]
அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்
செய்த எந்தை, மருவார்
திணி கொண்ட மூன்றுபுரம் எய்த வில்லி, திரு
முல்லைவாயில் இதன்மேல்,
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன்
ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர், அகல்வானம்
ஆள்வர், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.089   அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருக்கொச்சைவயம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[1]
சுண்ணத்தர்; தோலொடு நூல் சேர் மார்பினர்; துன்னிய
பூதக்
க(ண்)ணத்தர்; வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்று ஆடுவர்
கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர், மால் எரி
ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.

[2]
பாலை அன்ன வெண் நீறு பூசுவர்; பல்சடை தாழ,
மாலை ஆடுவர்; கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம் வெண் திரை கரை மிசை
விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சை வயம் அமர்ந்தாரே.

[3]
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு
அணிவர்;
பொடிகள் பூசிய மார்பின் புனைவர்; நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி, சங்கின் ஒலியொடு, கலை ஒலி,
துதைந்து,
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

[4]
ஆடல் மா மதி உடையார்; ஆயின பாரிடம் சூழ,
வாடல் வெண்தலை ஏந்தி, வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மடமஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.

[5]
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்; தொல்வரை வில் அது ஆக,
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள,
விடைமேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம்
அமர்ந்தாரே.

[6]
அன்று அ(வ்) ஆல் நிழல் அமர்ந்து அற உரை
நால்வர்க்கு அருள
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது, பொருகடல்
இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[8]
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
அமர்ந்தாரே.

[9]
குண்டர், வண் துவர் ஆடை போர்த்தது ஒர்
கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல; மை அணி கண்டர்,
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர்,
ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[10]
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.090   எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருநெல்வாயில் அரத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி )
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[1]
ஈர வார் சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்
வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[2]
பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[3]
துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர் ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே
[4]
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[5]
உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ மா மலர் உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[6]
நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே

[7]
செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; போற்றி! என்பார்க்கு அல்லது அருளான்
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[8]
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க(அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை மேல்,
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[9]
சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்
பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்
பூக் கமழ்ந்து பொன் உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆக்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[10]
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)அருளை
முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம் வினை போய்ப்
பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.091   பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.

[1]
கூன் இளம்பிறை சூடி, கொடு வரித் தோல் உடை ஆடை,
ஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர்; பூண்பதுவும் அரவம்
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
தேன் நலம் கமழ் சோலைத் திரு மறைக்காடு அமர்ந்தாரே.

[2]
நுண்ணிது ஆய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு
பொன் மார்பில்,
பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒரு பாகன்;
தண்ணிது ஆய வெள் அருவி சல சல நுரை மணி ததும்ப,
கண்ணி தானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு
அமர்ந்தாரே.

[3]
ஏழை வெண் குருகு, அயலே இளம்பெடை தனது எனக்
கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு
அமர்ந்தார்தாம்,
மாழை அம் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது
அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர், வினை நலிவு இலரே.

[4]
அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்,
பரவ, நாம் செய்த பவம் பறை தர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ் செயும்
மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே.

[5]
பல் இல் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும், அழகியது அறிவர்; எம்
அடிகள்
புல்லம் ஏறுவர்; பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம்
ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே.

[6]
நாகம் தான் கயிறு ஆக, நளிர் வரை அதற்கு மத்து ஆக,
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழக் கடைய,
வேக நஞ்சு எழ, ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும்
ஓட,
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்
மறைக்காடே.

[7]
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்; தனது ஒரு
பெருமையை ஓரான்;
மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும், மலைமகள்
நடுங்க,
நக்கு, தன் திரு விரலால் ஊன்றலும், நடு நடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டு அலறப் பரிந்தவன்; பதி மறைக்காடே.

[8]
விண்ட மா மலரோனும், விளங்கு ஒளி அரவு
அணையானும்,
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை
பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
வண்டல் அம் கமழ்சோலை மா மறைக்காடு அதுதானே.

[9]
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா,
கரிய மண்டை கை ஏந்தி, கல்லென உழிதரும் கழுக்கள்
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து, நம் அடிகள்
பெரிய சீர் மறைக்காடே பேணுமின்! மனம் உடையீரே!

[10]
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.092   பட்டம், பால்நிற மதியம், படர்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு வர்த்தமானீசுவரர் திருவடிகள் போற்றி )
பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி,
நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்,
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர்
போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே.

[1]
முயல் வளாவிய திங்கள் வாள்முகத்து அரிவையில்
தெரிவை
இயல் வளாவியது உடைய இன் அமுது, எந்தை,
எம்பெருமான்
கயல் வளாவிய கழனிக் கருநிறக்குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சுரத்தாரே.

[2]
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும்
புகையும்
கொண்டு கொண்டு அடி பரவி, குறிப்பு அறி முருகன்
செய் கோலம்
கண்டு கண்டு, கண் குளிரக் களி பரந்து, ஒளி மல்கு கள்
ஆர்
வண்டு பண் செயும் புகலூர் வர்த்த மானீச் சுரத்தாரே.

[3]
பண்ண வண்ணத்தர் ஆகி, பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர், ஒர்பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு, ஆண்
இணைபிணைந்த
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சுரத்தாரே.

[4]
ஈசன், ஏறு அமர் கடவுள், இன் அமுது, எந்தை,
எம்பெருமான்,
பூசும் மாசு இல் வெண் நீற்றர் பொலிவு உடைப் பூம்
புகலூரில்,
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய்
முடிமேல்
வாசமாமலர் உடையார், வர்த்தமானீச்சுரத்தாரே.

[5]
தளிர் இளங் கொடி வளர, தண்கயம் இரிய வண்டு ஏறிக்
கிளர் இளம்(ம்) உழை நுழைய, கிழிதரு பொழில் புகலூரில்,
உளர் இளஞ் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன்
மேல்
வளர் இளம்பிறை உடையார் வர்த்தமானீச்சுரத்தாரே.

[6]
தென் சொல், விஞ்சு அமர் வட சொல், திசை மொழி,
எழில் நரம்பு எடுத்துத்
துஞ்சு நெஞ்சு இருள் நீங்கத் தொழுது எழு தொல்
புகலூரில்,
அஞ்சனம் பிதிர்ந்தனைய, அலைகடல் கடைய அன்று
எழுந்த,
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சுரத்தாரே.

[7]
சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும்
நாம தேயம் அது உடையார், நன்கு உணர்ந்து, அடிகள்
என்று ஏத்த;
காம தேவனை வேவக் கனல் எரி கொளுவிய கண்ணார்;
வாம தேவர் தண் புகலூர் வர்த்தமானீச் சுரத்தாரே.

[8]
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்;
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து, அருளுதல்
பொருட்டால்,
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சுரத்தாரே.

[9]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையினால்
தம்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் என
விரும்பேல்!
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்,
மை கொள் கண்டத்து எம்பெருமான்
வர்த்தமானீச்சுரத்தாரே.

[10]
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில்
புகலூரில்,
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை,
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.093   புரை செய் வல்வினை தீர்க்கும்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருத்தெங்கூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வெள்ளிமலையீசுவரர் திருவடிகள் போற்றி )
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர்
போற்ற,
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர்
புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு;
எழில் சேர்
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[1]
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை
தீர்க்கும்,
கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு
பிறையன்;
பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல்
பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[2]
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல் உடை
மழுவாள
படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர்,
படர் புன்
சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு
தறுகண்
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[3]
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள்
பயப்பார்;
கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி
கண்டர்
வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[4]
சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக் காலால்
தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை
கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக
விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[5]
தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி
அணி சுவண்டர்;
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த,
சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற
வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[6]
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட
நின்றார்;
முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து
இலங்க,
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்;
வெண்பொடிப்பூசி
வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[7]
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க,
கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்;
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர்
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[8]
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்;
பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால்
ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக்
கருதும்
வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[9]
சடம் கொள் சீவரப்போர்வைச் சாக்கியர், சமணர், சொல்
தவிர,
இடம் கொள் வல்வினை தீர்க்கும்; ஏத்துமின் இருமருப்பு
ஒருகைக்
கடம் கொள் மால் களிற்று உரியர், கடல் கடைந்திடக்
கனன்று எழுந்த
விடம் கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே!

[10]
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரை,
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல்,
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.094   சாகை ஆயிரம் உடையார், சாமமும்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருவாழ்கொளிபுத்தூர் ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணநாதர் திருவடிகள் போற்றி )
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார்,
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்;
தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[1]
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்
உடையார்;
பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்
உடையார்;
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே.

[2]
நொடி ஒர் ஆயிரம் உடையார்; நுண்ணியர் ஆம், அவர்
நோக்கும்;
வடிவும் ஆயிரம் உடையார்; வண்ணமும் ஆயிரம்
உடையார்;
முடியும் ஆயிரம் உடையார்; மொய்குழலாளையும் உடையார்;
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[3]
பஞ்சி நுண் துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்;
குஞ்சி மேகலை உடையார்; கொந்து அணி வேல் வலன்
உடையார்;
அஞ்சும் வென்றவர்க்கு அணியார்; ஆனையின் ஈர் உரி
உடையார்;
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[4]
பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்
உடையார்;
விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது
உடையார்;
அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக
உடையார்;
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[5]
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக்கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார்; கோலமும் பல பல உடையார்;
கண்டு கோடலும் அரியார்; காட்சியும் அரியது; ஒர் கரந்தை
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[6]
மான வாழ்க்கை அது உடையார்; மலைந்தவர் மதில் பரிசு
அழித்தார்;
தான வாழ்க்கை அது உடையார்; தவத்தொடு நாம் புகழ்ந்து
ஏத்த,
ஞான வாழ்க்கை அது உடையார்; நள் இருள் மகளிர்
நின்று ஏத்த,
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூர்
உளாரே.

[7]
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட
அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி, விருப்பு அவர் பலபல
உடையார்;
கேழல் வெண்பிறை அன்ன கேழ் மணிமிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[8]
வென்றி மா மலரோனும், விரிகடல் துயின்றவர் தானும்,
என்றும் ஏத்துகை உடையார்; இமையவர் துதி செய,
விரும்பி,
முன்றில் மா மலர் வாசம் முது மதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர்
உளாரே.

[9]
மண்டை கொண்டு உழல் தேரர், மாசு உடை மேனி
வன்சமணர்,
குண்டர், பேசிய பேச்சுக் கொள்ளன்மின்! திகழ் ஒளி நல்ல
துண்ட வெண்பிறை சூடி, சுண்ண வெண்பொடி அணிந்து,
எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[10]
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர்
உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்,
நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.095   பாடல் வண்டு அறை கொன்றை,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) ; (திருத்தலம் அருள்தரு பெரியம்மை உடனுறை அருள்மிகு அரைசிலிநாதர் திருவடிகள் போற்றி )
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல்
கங்கை,
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

[1]
ஏறு பேணி அது ஏறி; இள மதக்களிற்றினை எற்றி,
வேறு செய்து, அதன் உரிவை வெம்புலால் கலக்க மெய்
போர்த்த
ஊறு தேன் அவன்; உம்பர்க்கு ஒருவன்; நல் ஒளி கொள்
ஒண் சுடர் ஆம்;
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.

[2]
கங்கை நீர் சடைமேலே கதம் மிக, கதிர் இளவன மென்
கொங்கையாள் ஒருபாகம் மருவிய, கொல்லை வெள் ஏற்றன்;
சங்கை ஆய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து,
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே.

[3]
மிக்க காலனை வீட்டி, மெய் கெடக் காமனை விழித்து
புக்க ஊர் இடு பிச்சை உண்பது, பொன் திகழ் கொன்றை,
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து,
ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.

[4]
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி,
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழச் சரம் அது
துரந்து
வான் அஞ்சும் பெருவிடத்தை உண்டவன்; மாமறை ஓதி;
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம்
அரசிலியே.

[5]
பரிய மாசுணம் கயிறா, பருப்பதம் அதற்கு மத்து ஆக,
பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய,
கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு,
அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம்
அரசிலியே.

[6]
வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல் அரக்கன்
கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றி,
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு,
அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

[8]
குறிய மாண் உரு ஆகிக் குவலயம் அளந்தவன் தானும்,
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய
மெய்த்தவத்தோனும்,
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும், திருவடி காண
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே.

[9]
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியைப் பறித்துத்
திரளை(க்) கையில் உண்பவரும், தேரரும், சொல்லிய
தேறேல்!
பொருளை, பொய் இலி மெய் எம் நாதனை, பொன் அடி
வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.

[10]
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும்,
சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த,
வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.096   பொங்கு வெண்புரி வளரும் பொற்பு  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.

[1]
தேவர் தானவர் பரந்து, திண் வரை மால் கடல் நிறுவி,
நா அதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ! என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன்நகரே.

[2]
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை, பல்பூதம்
திரிய இல் பலிக்கு ஏகும் செழுஞ்சுடர், சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி,
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன்நகரே.

[3]
சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வான் இடை
மிடைந்து,
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே.

[4]
மங்கை கூறு அமர் மெய்யான், மான்மறி ஏந்திய கையான்,
எங்கள் ஈசன்! என்று எழுவார் இடர்வினை கெடுப்பவற்கு
ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து, தகுதியின் மிக்க
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன்நகரே.

[5]
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்,
ஏறும் ஏறிய ஈசன், இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றித்
தேறுவார்கள், சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன்நகரே.

[6]
நடம் அது ஆடிய நாதன், நந்திதன் முழவு இடைக்
காட்டில்;
விடம் அமர்ந்து, ஒரு காலம், விரித்து அறம் உரைத்தவற்கு
ஊர் ஆம்
இடம் அதா மறை பயில்வார்; இருந்தவர், திருந்தி அம்
போதிக்
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய, காழி நன்நகரே.

[7]
கார் கொள் மேனி அவ் அரக்கன் தன் கடுந் திறலினைக்
கருதி,
ஏர் கொள் மங்கையும் அஞ்ச, எழில் மலை எடுத்தவன்
நெரிய,
சீர் கொள் பாதத்து ஒர்விரலால் செறுத்த எம் சிவன் உறை
கோயில்
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண்வயல் காழி நன்
நகரே.

[8]
மாலும் மா மலரானும் மருவி நின்று, இகலிய மனத்தால்,
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர் தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய,
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி, வயல் காழி நன் நகரே.

[9]
புத்தர், பொய் மிகு சமணர், பொலி கழல் அடி இணை
காணும்
சித்தம் மற்று அவர்க்கு இலாமைத் திகழ்ந்த நல்
செழுஞ்சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர், செறிந்த நல்மாமலர் கொண்டு,
முத்தனே, அருள்! என்று முறைமை செய் காழி நன்நகரே.

[10]
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு...........

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.008   சிவன் எனும் ஓசை அல்லது,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் பொது - சிவனெனுமோசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?-
அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்;
கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;
அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.

[1]
விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;
அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.

[2]
தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;
வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து
ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?

[3]
வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர,
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்;
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி,
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.

[4]
உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா;
இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒரு பால் இசைந்தது; ஒரு பால்,
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்;
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.

[5]
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல்கால் சிலம்ப, அழகு ஆர்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்;
மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம், அழலே.

[6]
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்;
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?

[7]
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்;
களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்-
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே.

[8]
மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்;
விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.

[9]
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது, ஒர் காது சுரிசங்கம் நின்று புரள,
விதி விதி வேத கீதம் ஒரு பாடும் ஓத, ஒரு பாடு மெல்ல நகுமால்;
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம்,  இயல்பே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.076   பொருவனார்; புரிநூலர்; புணர் முலை  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருவாஞ்சியம் ; (திருத்தலம் அருள்தரு வாழவந்தநாயகி உடனுறை அருள்மிகு சுகவாஞ்சிநாதர் திருவடிகள் போற்றி )
பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு
மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.

[1]
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.

[2]
தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால்,
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி,
தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.

[3]
சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது ஆம் எனக் கருதி,
வள்ளை வெண் மலர் அஞ்சி, மறுகி, ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர், தாமே.

[4]
மை கொள் கண்டர், எண்தோளர், மலை மகள் உடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்,
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்,
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?

[5]
கரந்தை கூவிள மாலை கடி மலர்க் கொன்றையும் சூடி,
பரந்த பாரிடம் சூழ, வருவர், எம் பரமர், தம் பரிசால்;
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
மருந்தனார், அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.

[6]
அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்,
குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.

[7]
களங்கள் ஆர் தரு கழனி அளி தரக் களி தரு வண்டு
உளங்கள் ஆர் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி,
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில், வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.

[8]
வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும்,
கூழை வானரம் தம்மில், கூறு இது சிறிது எனக் குழறி,
தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்,
ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.

[9]
செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன்
பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list